‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பாணியில் உருவாகும் ‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகம் 

By செய்திப்பிரிவு

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக படத்தின் நாயகன் க்றிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ஜுராசிக் பார்க்'. ஸ்பீல்பெர்க் இயக்கிய இப்படம் இன்று வரை ஹாலிவுட் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இப்படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தோடு ஜுராசிக் பார்க் படங்களை இயக்கும் பொறுப்பிலிருந்து ஸ்பீல்பெர்க் விலகிக் கொண்டார்.

அதன்பிறகு 14 வருடங்களுக்கு பிறகு ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. க்றிஸ் ப்ராட் நடிப்பில் கோலின் ட்ரெவாரோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்டு’ படவரிசையின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் க்றிஸ் ப்ராட், ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்துப் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘இப்படத்தின் கதையை இயக்குநர் கோலின் ட்ரெவாரோ எழுதி முடித்துவிட்டார். அது மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதைப் படமாக எடுக்க அவர் மிகவும் ஆவலாக இருக்கிறார். இப்படத்தில் அனைவரும் இருக்கிறார்கள். இதை நான் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் எனக்கு கவலையில்லை. ஆரம்ப ‘ஜுராசிக் பார்க்’ படங்களில் நடித்த அனைவரும் இப்படத்தில் வரப்போகிறார்கள். ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம்’ எப்படி அனைவரையும் ஒன்றிணைத்ததோ அதேபோல இப்படமும் இருக்கப் போகிறது’’

இவ்வாறு கிறிஸ் ப்ராட் கூறியுள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ உள்ளிட்ட படங்களில் கிறிஸ் ப்ராட் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE