தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு நடிகை மெஹ்ரீன் பதிலடி

ஐரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நாக ஷவுர்யா, மெஹ்ரீன் பிர்ஸாடா நடித்த தெலுங்கு படம் ‘அஷ்வதாமா’. கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை மெஹ்ரீன் கலந்து கொள்ளாததால் அவரது ஹோட்டல் செலவுகளுக்காக தொகையை செலுத்தவில்லை என படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘ஒரு நடிகரின் சம்பளத்தின் கடைசி தவணையை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பிறகு கொடுப்பது வழக்கமான ஒன்று. அது தவிர மொத்த தொகையையும் நாங்கள் அவருக்கு கொடுத்து விட்டோம். அவரது உணவு மற்றும் தங்கிய செலவுகள் என்று ஒரு மிகப்பெரிய தொகைக்கான ரசீது எங்களுக்கு வந்தது. ஹோட்டலை காலி செய்வதற்கு முன் அவர் எங்களிடம் தகவல் சொல்லவில்லை. ஆனால் ஹோட்டல் நிறுவனத்தோடு எங்களுக்கு நல்ல நட்பு இருந்ததால் நாங்கள் மொத்த தொகையையும் செலுத்தினோம்.’ என்று நடிகை மெஹ்ரீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடா இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரா கிரேயஷன்ஸ் தயாரித்த ‘அஷ்வதாமா’ திரைப்படத்தின் பணிகளின் போது ஓட்டலில் தங்கிய செலவுகள் பற்றி சமீபத்தில் வெளியான செய்திகளால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த ஒட்டுமொத்த பிரச்சனையிலும் மரியாதை கருதி அமைதி காத்து வந்தேன், ஆனால் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்போது என் பக்க நியாயத்தை சொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறேன்.

என்னுடைய சங்கராந்தி ரிலீஸுக்கான விளம்பரப் பணிகளை முடித்த பிறகு நான் என் குடும்பத்தை பார்க்க பஞ்சாபுக்கு சென்று விட்டேன். அப்படத்தின் வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பாக விளம்பரப் பணிகளுக்காக மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பி வந்தேன். இது தவிர என்னுடைய தாத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஒரு காரணம்.

இதை என்னோடு நடித்த நாக ஷவுர்யாவும் பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். அஷ்வதாமா படத்துக்கான அனைத்து விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பிறகு, எனக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டதால் என்னால் ஒரு பேட்டியில் பங்கேற்க இயலவில்லை. இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஆவணத்தையும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி பேட்டிக்கு வராமல் இருந்ததற்கு மன்னிப்பும் கோரியுள்ளேன்.

இது தயாரிப்பாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இதனால் நான் தங்கிய ஹோட்டலுக்கும், என்னுடைய தின ஊழியருக்கும் பணம் செலுத்தாமல் இருந்தள்ளனர். என்னுடைய மேனேஜர் அவர்களிடம் விரைந்து பணம் செலுத்துமாறு கூறியும் பயனில்லை. அதன்பிறகு அந்த ஹோட்டலுக்கான கட்டணத்தையும் தின ஊழியருக்கான பணத்தையும் என்னுடைய மேனேஜரையே செலுத்திவிடுமாறு கூறினேன். அதன்பிறகு உடனடியாக கட்டணம் செலுத்தப்பட்டது.

இது எனக்கு மிகவும் வருத்தமாகவும், மிகுந்த வலியுடன் உருவாக்கிய என்னுடைய நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் இருந்தது. நான் இதுவரை 14 தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். உடல்நிலை சரியில்லாதபோதும் எத்தனை வலியிருந்தாலும் எந்தவித புகார்களும் இன்றி உளப்பூர்வமாகவே எப்போதும் பணிபுரிந்து வருகிறேன். இதுவரை பணியாற்றிய எந்த தயாரிப்பு நிறுவனத்தோடும் எனக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருந்ததில்லை.

என் ஹோட்டல் செலவு குறித்த செய்தி இணையதளங்களில் செய்திகளாக வந்தது மோசமான விஷயமாகும். ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகள் நடக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.

இந்த விரும்பத்தகாத நிகழ்வை கண்டுகொள்ளாமல் என்னுடைய எதிர்காலம் பற்றி யோசிக்கலாம் என்று விரும்புகிறேன். அஷ்வதாமா படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஐரா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கும் அவர்களின் எதிர்கால சாதனைகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE