தமிழகத்துக்கே போதை மருந்து சப்ளை செய்யும் மிகப்பெரிய கும்பலின் தலைவனை, 3 பேர் மட்டுமே சேர்ந்து பிடிக்க முயற்சி செய்வதுதான் ‘மாஃபியா’.
போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் அருண் விஜய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பதால், அதை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.
அவருக்குத் துணையாக, அவருடைய குழுவில் ப்ரியா பவானிசங்கர், பாலா ஹாசன் ஆகிய இருவரும் உள்ளனர். அவர்களால் போதை மருந்து கடத்தல் தொடர்பாகக் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆட்களைப் பிடிக்க முடிந்ததே தவிர, அதற்கு மேலுள்ள ஆட்களை நெருங்க முடியவில்லை. அந்தக் கும்பலின் தலைவன் யார் என்ற சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் யார் என தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பற்றிய கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை யாரிடமும் இதைப்பற்றிச் சொல்ல முடியாது என்றும் அருண் விஜய் குழுவின் தலைவர் கூறுகிறார். ஆனால், திடீரென அவர் கொலை செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து ஆதாரங்களைத் திரட்டிய சமூகப் போராளி தலைவாசல் விஜய்யும் கொலை செய்யப்படுகிறார்.
இவர்களைக் கொன்றது யார்? போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் யார் எனக் கண்டுபிடிக்க முடிந்ததா? அருண் விஜய் ஆசைப்படி போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடிந்ததா? என்பது மீதிக் கதை.
போலீஸ் கதாபாத்திரம் என்பது அருண் விஜய்க்கு கைவந்த கலை. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஆர்யன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். கடத்தல் கும்பலின் தலைவனாக திவாகர் குமரன் கதாபாத்திரத்தில் பிரசன்னாவின் நடிப்பும் கச்சிதம். ஆனால், இருவருக்கும் கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப்பைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
சத்யா கதாபாத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் ப்ரியா பவானிசங்கர். அந்த முகபாவத்தை ஒரே மாதிரியாக வைத்திருந்ததற்குப் பதில் கொஞ்சமாவது ரியாக்ஷன் காட்டியிருக்கலாம். வருண் கதாபாத்திரத்தில் பாலா ஹாசனின் நடிப்பு, பாராட்டும் வகையில் உள்ளது.
படத்தின் திரைக்கதை என்ன என்பதைத் தேடிப்பிடிக்க பெரிதும் மெனக்கெட வேண்டியிருப்பது, இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனம். படத்தின் இறுதியில், அடுத்த பாகத்துக்கான ட்விஸ்ட்டை வைத்து முடித்துள்ளனர். அந்த ட்விஸ்ட்டை படத்தின் இடைவேளையில் வைத்திருந்தால் கூட, அதன்பிறகு கதையென ஏதோவொன்று இருந்திருக்கும். அரை மணிநேரத்தில் சொல்ல வேண்டியதை, ஒரு மணிநேரம் 50 நிமிடங்களுக்கு இழுத்தடித்துள்ளனர்.
கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவு, ஜாக்ஸ் பெஜோய்யின் பின்னணி இசை இந்த இரண்டும்தான் திரைக்கதை இல்லாத இந்தப் படத்தை, குறைந்தபட்சப் பொறுமையுடன் பார்க்க உதவி புரிகின்றன. விவேக் வரிகளில் பாடல் வரிகள் பெரும்பாலும் புரியவுமில்லை, திரும்பக் கேட்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. அதேபோல், சில வசனங்களும் வாய்க்குள் இருந்து பேசுவது போல் தெளிவாகக் கேட்கவில்லை.
லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட போதைப்பொருட்களை வைத்திருக்கும் குடோனில் பாதுகாப்புக்காக இருக்கும் அடியாட்களிடம், ஆயுதங்கள் எதுவுமே இல்லை என்பதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. அதுகூடப் பரவாயில்லை... யார் மீதும் சுடாமல், அங்கிருக்கும் வாகனங்கள் மீது சுட்டதற்கே அத்தனை பேரும் பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட போதைப் பொருட்களை விட்டுவிட்டு அனைத்து அடியாட்களும் ஓடிவிடும் காட்சியை என்னவென்று சொல்வது?
இவ்வளவு மதிப்பு கொண்ட பொருட்களின் பாதுகாப்பு எவ்வளவு ஹைடெக்காக இருக்க வேண்டும்? ஆனால், ஒன்றிரண்டு சிசிடிவி கேமரா தவிர்த்து வேறெதுவுமே அந்த குடோனில் இருக்காது. அப்புறம், வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு பவுடர் வாங்க வரும் இரு கல்லூரி மாணவர்களை, அசால்ட்டாக குடோனுக்குள் அனுப்புகிறார்கள். அதில், ஒருவன் ஹெட்போன் மாட்டியிருப்பது தெரிந்தும், அதைப்பற்றி ஒருவார்த்தை கூட கேட்காமல் அத்தனை அடியாட்களும் கூமுட்டையாக இருக்கிறார்கள்.
வில்லனை வீட்டுக்கு வரவழைக்க ஸ்கெட்ச் போடும் அருண் விஜய், தன் நண்பர்களான ப்ரியா பவானிசங்கர் மற்றும் பாலா ஹாசனை மறைந்துகூட நிற்கச் சொல்லாமல், நடுரோட்டில் நின்று வேவு பார்க்கச் சொல்வதெல்லாம் எந்த போலீஸ் கதையில் நடக்கும் என்பது இயக்குநர் கார்த்திக் நரேனுக்கே வெளிச்சம்.
திரைக்கதையே இல்லாத படத்தில், இப்படி சொல்லிக்கொண்டே போவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, சில காட்சிகளை ஸ்லோமோஷனில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதற்காக, படம் பார்ப்பவன் கொட்டாவி விடும் அளவுக்கு பெரும்பாலான காட்சிகளை ஸ்லோமோஷனில் காட்டுவதெல்லாம் அதீதம்.
படத்தில் பாராட்டத்தக்க இன்னொரு விஷயம், அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் ஆடைகள். இருவருமே செம ஸ்டைலிஷாக கெத்து காட்டுகிறார்கள்.
அடுத்த பாகத்துக்கான டீஸர் அல்லது ட்ரெய்லராக மட்டுமே இந்தப் படத்தைக் கருதலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago