கங்கணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன்: டாப்ஸி

By செய்திப்பிரிவு

கங்கணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர மாட்டேன் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

'ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா' படத்தின் ட்ரெய்லரைப் பாராட்டி டாப்ஸி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் கங்கணாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மேலும் ஒரு நிகழ்ச்சியில் கங்கணாவைப் பற்றிப் பேசும்போது, அவர் தனது பேச்சுகளை இரண்டு முறை வடிகட்டிப் பேச வேண்டும் என்கிற ரீதியில் டாப்ஸி கருத்து தெரிவித்திருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, டாப்ஸியை கங்கணாவின் மலிவான போலி என்று கங்கணாவின் சகோதரி ரங்கோலி விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

'மிஷன் மங்கள்' படத்தின் விளம்பரங்களுக்காக பேட்டி அளித்து வரும் டாப்ஸி ஊடகங்களிடம் கூறுகையில், "கண்டிப்பாக (கங்கணா பற்றிய) எனது நேர்மையான கருத்துக்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன். பாசாங்கு இல்லாமல் ஒருவர் பேசும்போது சிலவற்றை வடிகட்டித்தான் பேச வேண்டும். மனதுக்கும், வாய்க்கும் இடையே அல்ல. இதை நான் இழிவான கருத்தாகப் பார்க்கவில்லை. அது வெறும் கருத்து மட்டுமே.

ஏன், நான் பொதுவில் பேசுவதற்கு முன் என் சொற்களை வடிகட்டிப் பேச வேண்டும் என்று என் சகோதரி கூட என்னிடம் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் என் நேர்மையான கருத்துகள் என்னைப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ளன. அதனால் வடிகட்டுதல் என்று நான் சொன்னதில் எதிர்மறையாக எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. கேட்பவர்கள் அப்படிப் புரிந்துகொண்டால் நான் அதை மாற்ற முடியாது.

நான் எதை காப்பி அடிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு மட்டும் தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்குப் பிறந்ததிலிருந்தே தலைமுடி அப்படித்தான். எனது பெற்றோர்தான் அதற்குப் பொறுப்பு. எனவே அதற்கும் மன்னிப்பு கோர முடியாது.

கங்கணா போன்ற நல்ல நடிகையின் காப்பி என்றால், எப்போதுமே நான் அவரை நல்ல நடிகை என்று தான் சொல்லியிருக்கிறேன். எனவே அதைப் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். என்னை மலிவு என்று சொல்லியிருக்கிறார். ஆம், நான் அதிக சம்பளம் வாங்குவதில்லை. அப்படிப் பார்த்தால் மலிவு தான்.

(ரங்கோலிக்கு) நான் பதிலளிக்கவில்லை ஏனென்றால் அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு முக்கியமில்லாத நபர்களுக்கு நான் ஏன் கவனம் தர வேண்டும். எல்லோராலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முடியும். எனக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும். ஆனால் சில வார்த்தைப் பிரயோகங்கள் எனக்குத் தெரியாது, கற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதனால் என் வழியில் நான் பதிலளித்தேன்" என்று டாப்ஸி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE