லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்துக்குப் பெண்ணுக்கும் காதல் முளைத்தால் அதற்கு காதலியின் அப்பா குறுக்கே நின்றால் அது கொலையில் முடிந்தால் அதுவே 'A1'.
தன் அத்தையைப் போல ஓர் அடிதடி இளைஞனைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார் தாரா அலிஷா பெர்ரி (அறிமுகம்). ஆனால், அந்த இளைஞன் தன் சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். டிராஃபிக் போலீஸ் ஒருவர் காதல் தூது விட, அவருக்கு வைக்கும் பரீட்சையில் திடீரென்று என்ட்ரி ஆகி சாகசத்தில் மனதைக் கவர்கிறார் சந்தானம். பத்து நொடியில் முளைக்கும் காதல் முத்தத்தில் ஆரம்பித்து பிரேக்-அப் ஆகிறது. மீண்டும் காதல், மீண்டும் பிரேக்-அப் என திரும்பத் திரும்ப நடக்கின்றன. இந்த சூழலில் தாராவைப் பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் செல்கிறார் சந்தானம். அவரையும் அவரது பெற்றோரையும் தாராவின் அப்பா யாட்டின் கார்யேகர் அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால் அன்றைய இரவே மாமனாரைக் கொலை செய்யப்போவதாக சரக்கடித்துவிட்டுச் சலம்புகிறார் சந்தானம்.
மறுநாள் காலையில் தாராவின் அப்பா யாட்டின் கார்யேகர் கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிறது. உண்மையில் நடந்தது என்ன, சந்தானத்திடம் தாரா விட்ட சவால் என்ன, சந்தானம்- தாராவின் காதல் என்ன ஆனது, யாட்டின் கார்யேகர் என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நாளைய இயக்குநரில் நம்பிக்கைக்குரிய தடம் பதித்த ஜான்சன் 'A1'படத்தின் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். குற்றப் பின்னணியுள்ள கதையில் நகைச்சுவையை இழையோடவிட்டு தன்னை நிரூபித்துள்ளார்.
மாஸ் ஹீரோ ஆசையை ஓரம்கட்டி வைத்துவிட்டு கதைக்குத் தகுந்தாற்போல் நடிக்க சந்தானம் ஆயத்தமாகி இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி. டான்ஸ், ஃபைட் தாண்டி நடிப்பிலும் கொஞ்சம் முன்னேறி இருக்கிறார். எல்லாவற்றையும் கலாய்க்கிறேன் பேர் வழி என்று இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது எடுபடுகிறது. உடல் மொழியில் கச்சிதம் காட்டி வசனங்களில் பக்குவம் கூட்டும் சந்தானம் ரசிக்க வைக்கிறார். சென்டிமென்ட், காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.
சந்தானத்தின் காதலியாக அக்ஹாரத்துப் பெண்ணாக தாரா அலிஷா பெர்ரி தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். மீரா கிருஷ்ணன், உமா பத்மநாபன், தாரா உள்ளிட்ட எந்தப் பெண் கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
'காமெடி பஜார்' மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி, 'லொள்ளு சபா' சேஷு, 'லொள்ளு சபா' சாமிநாதன், 'லொள்ளு சபா' மனோகர், 'நான் கடவுள்' ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சாய்குமார், புஜ்ஜிபாபு என படத்தில் பலரும் இருக்கிறார்கள். இதில் 'காமெடி பஜார்' மாறன், தங்கதுரை, கிங்ஸ்லியின் காமெடி சந்தானத்தைக் காட்டிலும் நகைச்சுவையைத் தெறிக்க விடுகிறது. சாவு வீட்டில் 'லொள்ளு சபா' சேஷு செய்யும் அலப்பறைகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.
வழக்கமாக நாயகன் புகழ் பாடும் ஒரு கேரக்டராகவே சாய்குமாரின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது படத்தின் பலவீனம். எம்.எஸ்.பாஸ்கர் கிடைத்த கேப்பில் செம்மையாக ஸ்கோர் செய்கிறார். தாராவின் அப்பா கதாபாத்திரத் தேர்வில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ஓ.கே.ரகம். சந்தோஷ் நாராயணனின் இசையும் பின்னணியும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. லியோ ஜான் பால் முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
வட்டாட்சியர் நல்லவர், நேர்மையானவர், தூய மனிதர், மனிதநேய ஆர்வலர் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும்போதே அவருக்குப் பின் ஒரு மர்மப் பக்கம் இருக்கிறது என்பதை எளிதாக யூகித்துவிட முடிகிறது. கொலைப் பின்னணியும் அப்படியே. படத்தில் லாஜிக்கைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல். இதைத் தாண்டிப் பார்த்தால் நகைச்சுவை சிறப்பாக எடுபடுகிறது. நினைத்து நினைத்து ரசித்து ரசித்துச் சிரிக்க முடிகிற காட்சிகள் உள்ளன. முதல் பாதி எந்தத் திருப்பமும் இல்லாமல் மையமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி அதற்கும் சேர்த்து காமெடி விருந்து வைக்கிறது. அந்த வகையில் 'A1'படத்தைப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago