1009 வாரங்கள் ஓடிய டிடிஎல்ஜே... இப்படம் இன்றே கடைசி!

கடந்த 20 வருடங்களாக மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) கடைசி முறையாகத் திரையிடப்படவுள்ளது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

1995-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷாரூக் கான், காஜோல் நடித்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியத் திரையுலகில் ஒரு மைல்கல்லாக 'தில்வாலே' கருதப்படுகிறது. ஷாரூக்கான், காஜோல் இருவருமே இதற்குப் பிறகே பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களாக உருவாயினர்.

திரையான நாளில் இருந்து, மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' என்ற திரையரங்கில் 'தில்வாலே' ஓடிக் கொண்டிருக்கிறது. 20 வருடங்களாக தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்த இப்படம், கடந்த டிசம்பர் மாதம் 1000-வது வாரத்தைக் கொண்டாடியது. அதிக நாட்கள் ஓடிய இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் தில்வாலே படைத்துள்ளது.

ஆனால் காலை 11.30 மணி காட்சியில் இந்தப் படம் திரையிடப்படுவதால், ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதுப் படங்களை, மீதமுள்ள 3 காட்சி நேரங்களில் திரையிட முடிவதில்லை என்பதால், தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுடன் கலந்தாலோசித்து, இனி படத்தை திரையிட வேண்டாம் என திரையரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

காலை 11.30 மணிக்கு பதில், காலை 9.15 மணிக்கு ஒரு காட்சியை திரையிடலாம் என்று பரிந்துரைக்கபட்டபோது, இதனால் பணியாளர்களின் வேலை நேரங்கள் அதிகமாகும் என்பதால் அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

இதனால் தற்போது 1009-வது வாரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் 'தில்வாலே', இன்றே கடைசியாகத் திரையிடப்படுகிறது. இந்தச் செய்தி பல பாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செய்தி வெளியானதிலிருந்து ட்விட்டரில் Maratha Mandir என்ற வார்த்தை ட்ரெண்டிங்கில் உள்ளது.

1009 வாரங்கள் ஓடினாலும், வார நாட்களில் கணிசமான கூட்டத்தையும், வார இறுதியில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் 'தில்வாலே' ஓடியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE