டிசம்பர் 14 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்

By ரூபேந்தர்

தேதி : 14 DEC 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : Mold (kuf)

சென்ற வருட 'Once upon a time in Anatolia'வைத் தொடர்ந்து இந்த வருடத்தில் துருக்கியின் சிறந்த படங்களுள் ஒன்று. பஸ்ரி.. 55 வயது ரயில்வே பணியாளன். தேர்தலில் ஓட்டு போடக்கூட விருப்பமில்லாதவன். ஆனால் மகன் சைஃபியோ அவனுக்கு நேரெதிர். அரசியலில் அதிதீவிர ஆர்வம். அவனுடையது புரட்சிகர அரசியல். 18 வருடங்களுக்கு முன்னால் படிக்கப் போனவன் திரும்பவே இல்லை. காணாமல் போய் விட்டான். அவனைக் கேட்டு இன்றும் இஸ்தான்புல்லுக்கு கடிதம் எழுதி வருகிறான் பஸ்ரி. இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி விசாரணைக்கு வருவதில் தொடங்குகிறது படம். அரசியல்வாதிகளுக்கு உலகம் எங்கும் ஒரே முகம்.. கலகக்காரர்கள் உலகமெங்கும் ஒரே மாதிரி காணாமல் போகிறார்கள்.

2:00 pm : Stray Dogs

நாய், பூனை, கிளி என செல்லப் பிராணிகளின் மீது இருக்கும் அன்பு கூட மனிதர்களின் மீது இருப்பதில்லை. குறிப்பாக பிளாட்பார மனிதர்கள். அவர்கள் வாழ்வு துயரத்திலும் துயரம். அவர்களில் ஒருவன் சென். தைபெய் நகரத் தெருவில் நாள் முழுக்க ஒரு விளம்பரப் பலகையை பிடித்தபடி நின்றால்தான் நாலு காசு கிடைக்கும். அதைக் கொண்டு பழம், ரொட்டி வாங்கிச் சென்றால் தான் அவனுடைய இரண்டு மகன்களின் அரை வயிறு நிறையும். ஒரு பெண் அந்த இரண்டு சிறுவர்களையும் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறாள். அவளுடன் போனால் வறுமையிலிருந்து விடுதலை. நல்ல வசதியான வாழ்வு. ஆனால் சென் அனாதையாகி விடுவான். அந்தச் சிறுவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள்?. சாய் மிங் லியாங் என்கிற தைவான் நாட்டு இயக்குனரின் படம்.

4:30 pm : Suzanne

'அன்னா கரினீனா'வின் முதல் வரியை லியோ டால்ஸ்டாய் இப்படி எழுதுவார்.. 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட துயரமென ஒன்று உண்டு'. இந்தப் படம் பிரான்சின் மெரெவ்ஸ்கி குடும்பத்தின் சோகங்களை சூசன் எனும் பெண் வாயிலாக பேசுகிறது. சோகம் போலவே காதலும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை காதல். படத்தில் சோகக் கதைகளின் ஊடே சில காதல் கதைகளும். காதல் என்றாலே சோகமும் சேர்த்தித்தான் என்கிறீர்களா? இயக்கம்: கேத்தல் ஃகுல்லேவெரே பிரெஞ்சு பெண் இயக்குனர்.

7:00 pm : Waiting For The Sea

தாஸ்தாவெஸ்கியின் சூதாடியிடம், தான் தொலைத்ததை எல்லாம் ஒரே நாளில் மீட்டுவிட வேண்டும் என்கிற வெறி இருக்கும். அந்த வெறிகொண்ட போராட்டம், விதியுடன் நடத்தும் போராட்டம். இப்படத்தில் மாரட் தன் விதியுடன் போராடுகிறான். அவன் ஒரு சிறிய மீன்பிடி கப்பலின் கேப்டன். ஒரு நாள் வீசிய கடல் புயலில் அவன் மனைவி, மகன், கப்பல் அனைத்தையும் தொலைத்தவன். இன்றைய தேதியில் அவனொரு நாடோடி. பார்ப்பவர்களுக்கு அவன் ஒரு பைத்தியக்காரன். 'ஒரே ஒரு நாள் கடலுக்குள் போவேன்.. தொலைத்ததையெல்லாம் மீட்டுவிடுவேன்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். ஒரு நாள் ஒரு கப்பல் ஏறி.. கடலுக்குள் சென்றும் விடுகிறான். கடலில் நடக்கும் ஒரு சாகசக் கதை. ஃபேண்டசி படம். பக்தியார் குடோஜ்நாசரோ இயக்கியது.

********************************

திரையரங்கம் : Woodlands Symphony

10:45 am : Trouble Every Day

2001 கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையைக் கிளப்பி, கல்லா கட்டிய படம். ஷேன்னும் ஜூனும் புது மணத் தம்பதியினர். தேனிலவைக் கழிக்க பாரிஸ் வருகின்றனர். பாரிசில் ஒரு அழகி. அவள் பெயர் கோர். அவள் ஒரு மாதிரி. மனித மாமிசம் புசிப்பவள். ஷேன்னும் கோரும் நெருங்குகின்றனர். பிறகே தெரிகிறது ஷேன்னும் கோரும் ஒரே ஜாதி. இதில் ஜூன்தான் பாவம்.. மனுஷ ஜாதி. ஜூன் என்ன ஆனாள்?. குறிப்பு: இந்தப் படம் பார்க்க கொறிப்பு ஐட்டம் கொண்டுபோக யோசிக்கவும்.

6:45 pm : Chambaili: The Fragrance of Freedom

இஸ்மாயில் ஜிலானி எனும் பாகிஸ்தான் நாட்டு இயக்குனரின் படம். பிரிவினைக்குப் பிறகு நிகழும் கதை. பாலகாபாத்- பாகிஸ்தானின் ஒரு கற்பனை மாநிலம். ஊர் உலகத்தில் போல் அங்கும் ஊழல் ஆட்சி. அதன் காரணமாய் வறுமை, பசி, வேலை இல்லாத் திண்டாட்டம். அரசாங்கத்தை எதிர்த்து நான்கு இளைஞர்கள் புறப்படுகிறார்கள். தனியாக கட்சி ஆரம்பிகிறார்கள். போராடி, அடி வாங்கி, கைதாகி கடைசியில்.. மாறியது அவர்களா? தேசமா? பாகிஸ்தானில் சக்கைபோடு போட்ட படம்.

**************************

திரையரங்கம் : Swarna Sakthi Abiraami

11:00 am : Cheap Thrills

அமெரிக்காவைச் சேர்ந்த E.L. Katz எனும் இயக்குனரின் முதல் படம். கிரைக் ஒரு மெக்கானிக். அவன் முதலாளி அன்று அவனை வேலையிலிருந்து தூக்கி விடுகிறான். இந்த சோகத்தை மறக்க.. கிரைக் ஒரு பாருக்குள் நுழைகிறான். அங்கே அவனுடைய பள்ளித் தோழன். இருவருக்கும் தேவை பணம். 'பணம் தருகிறோம்.. சொல்லும் வேலைகளை செய்தால்', என்கின்றனர் ஒரு பணக்காரத் தம்பதியினர். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் போய்கொண்டிருக்கிறது. பின்னர்தான் தெரிகிறது.. அந்த தம்பதியினர் பயங்கரமான சைக்கோ. அவர்கள் சொல்லும் வேலைகளோ.. திகிலோ திகில்.

2:00 pm : Little Lion

பன்னிரண்டு வயது மித்ரிக்கு கால்பந்தின் மீது தீராக்காதல். பெரிய கால்பந்தாட்ட வீரனாக வேண்டும், பையனிடம் சரக்கும் இருக்க.. தேசிய அளவு போட்டிக்கு தேர்வாகிறான். போட்டி நடக்கும் இடத்துக்கு போகவே கடன் வாங்க வேண்டிய நிலை. போன கொஞ்ச நாளில் கொண்டுபோன பணம் தீர்ந்துவிடுகிறது. கால்பந்து கனவுகளைத் தலைமுழுகி விட்டு மித்ரி ஊர் திரும்ப முடிவெடுக்க.. அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்.

4:30 pm : Roa

கொலம்பிய அரசியல் பின்னணியில் ஒரு விறுவிறு கதைப்படம். கதையின் நாயகன் ரோவா ஒரு வேலையில்லாப் பட்டதாரி. கைடான் அவனுடைய அபிமான அரசியல் தலைவர். அவன் கைடானின் ரசிகன், பக்தன். ஆனால் கைடானுக்கோ ரோவா எவனோ ஒரு தொண்டன். கைடான் இவனைக் கண்டுகொள்ளாததால் ரோவாவுக்கு கோபம் பொங்குகிறது. கலகக்காரர்கள் இதைப் பயன்படுத்தி கைடானைக் கொல்ல ரோவாவை ஏவுகின்றனர். ஒரு கட்டத்தில் ரோவா பின்வாங்குகிறான். ஆனால் காலம் கடந்து விடுகிறது. கலகக்காரர்களின் பிடியில் அவனது குடும்பம். 'கைடானைக் கொல்.. இல்லை உன் குடும்பத்தைக் கொல்வோம்'. ரோவா என்ன செய்வான்?.

7:00 pm : Six Acts

ஜானதன் கர்ஃபின்கல் என்கிற இஸ்ரேல் நாட்டு இயக்குனரின் படம். கிலி எனும் இளம் பெண்தான் படத்தின் நாயகி. அவளுக்கு ஒரு பிரச்சினை. தான் இப்போது படிக்கும் பள்ளி அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் வேறு பள்ளிக்கு செல்கிறாள். பாய்ஃபிரண்ட்களின் எண்ணிக்கைதான் பள்ளியில் ஒரு பெண்ணின் அந்தஸ்தை தீர்மானிக்கும். கிலி தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள தீர்மானிக்கிறாள். இந்த முடிவு அவளைக் கொண்டு சேர்க்கும் இடம்?



**************************



திரையரங்கம் : Robot Bala Abirami



10:45 pm : Feed Me With Your Words.

ஜேனசுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மேடேஜ். இளையவன் ராபர்ட். ஏசுவின் கையெழுத்தை கண்டுபிடிக்க போன ராபர்ட் திரும்பி வரவில்லை. அவனைத் தேடி அப்பாவும் அண்ணனும் கிளம்புகின்றனர். வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா. அவளுக்குத் துணையாய் மருமகள். கடந்த காலத்தை தேடி.. நிகழ்காலத்தை தொலைத்து.. எதிர்காலத்தை கண்டுபிடித்து இப்படி மூன்று காலவெளிகளில் பயணிக்கிற படம். இயக்கம்: மார்டின் டர்க்.



01:45 pm : Tangerines

1960ல் Hell In Pacific என்று ஒரு படம். இரண்டு எதிரி ராணுவ வீரர்கள் ஒரே தீவில் மாட்டிக்கொள்வார்கள். அவர்கள் அந்தத் தீவில் இருந்து தப்பிக்க ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலை. அந்த படத்தை ஞாபகப்படுத்துகிற விதமாக இந்தப் படம்.

1990. அக்பகாசயா யுத்தத்தின் உச்சக் கட்டம். நாட்டின் எல்லையில் சாத்துக்குடி பயிரிட்டு வாழ்பவன் ஈவா. அவன் வீட்டு முன்னாலும் சண்டை நடக்கிறது. அந்த சண்டையின் முடிவில் ஒருவன் மட்டும் உயிரோடு. அவனை ஈவா வீட்டுக்குள் எடுத்து வந்து காயங்களுக்கு மருந்து போடுகிறான். மீதியுள்ள சடலங்களை புதைக்கும் சமயம், இன்னொருவனுக்கும் உயிர் இருப்பது தெரிய வருகிறது. இப்போது ஈவா அவனையும் வீட்டுக்குள் கொண்டு வருகிறான். இரண்டு எதிரிகள் இப்போது ஒரே வீட்டில், ஒரே அறையில். இருவரும் இப்போது மனிதர்களா? ராணுவ வீரர்களா?



4:15 pm : What They Don't Talk About When They Talk About Love

பேரைச் சொல்லவே அரை நிமிடம் ஆகும் இந்த இந்தோனேசியப் படத்துக்கு உலக அளவில் ஏகப்பட்ட விருதுகள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண் இல்லாதவர்களுக்கு காதல் இருந்தால். டயானா, மாயா - கண் பார்வையற்றவர்கள். டயானா.. அவளைப் போலவே பார்வையற்றவனைக் காதலிக்கிறாள். மாயாவுக்கோ ஒரு டாக்டர் மீது காதல். அந்த டாக்டர் நான்தான் என்று ஒருவன் அவளை ஏமாற்றுகிறான். அவனுக்கு காது கேட்காது. மாற்றுத்திறனாளிகளின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் காதல்.



6:45 pm : Secrets Of Love

'காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?'.. இந்த கேள்விக்கு வரும் பதில் நிச்சயம் நபருக்கு நபர் மாறுபடும். காதல் பற்றி அத்தனை பார்வைகள். போலந்து, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா, இமயமலை, பரங்கிமலை.. என்று உலகெங்கும் பல ஜோடிகள் காதல் பற்றிய ரகசியங்களை மனம் திறக்கிறார்கள். ஆவணப்படத்தில் இது கொஞ்சம் கமர்சியல் டைப். காதலித்து நொந்தவர்கள், காதலிப்பவர்கள், ஃபேஸ்புக்கின் 'சிங்கிள்' ஸ்டேட்டஸ்காரர்கள் பார்த்து ரசிக்கலாம்.



**************************



திரையரங்கம் : Inox 2

10.45 am : The Last Floor

ராபர்ட் வைகிவிஸ்- இளம் போலந்து இயக்குனர். இவருடைய முதல் படம் ஒரு திரில்லர். இந்த இரண்டாவது படமும் ஒரு திரில்லர். திரில்லர் படத்தில் இது வேறு வகை. யுத்தப் பின்னணியில் நிகழும் திரில்லர் இது. கேப்டன் தேர்சின்ஸ்கிக்கு தேசமும் குடும்பமும் இரு கண்கள். போரில் ஜெயிக்க வேண்டும். கூடவே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கடைசித் தளத்தில் அவன் குடும்பத்தைக் கொண்டு போய் மறைத்து வைக்கிறான். அவனால் தேசத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்ததா?.



1:45 pm : The Eternal Return of Antonis Paraskevas

இருபது வருடமாய் கீர்ஸ் நகரத்தின் மிக பெரிய டிவி ஆளுமை அந்தோனி. காலம் மாறுகிறது அந்தோனியின் டிவி ஷோ ரேட்டிங் குறைய.. அவனுக்கு வேலை போகிறது. மீண்டும் லைம்லைட் ஆசை துரத்த, தன்னைத் தானே கடத்தும் நாடகத்தை புனைகிறான் அந்தோனி. நம்மூர் டிவி ஷோக்களை நாம் கலாய்ப்பது போலவே அவர்களும் காமெடி செய்திருக்கிறார்கள். இயக்கம்: எலினா சைக்கொவ்.



4:15 pm : Ken and Mary: The Asian Truck Express

கென் ஒரு நடுத்தர மனிதன். 25 ஆண்டுகளாய் ஒரு ஜப்பானிய கம்பனியில் வேலை. அவனுக்கு ஒரு மகள். அவள் மலேசியாவில் இருக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருந்து போன். 'அப்பா.. நான் ஒரு மலேசியாக்காரனை காதலிக்கிறேன்'. மகளின் கல்யாணத்தை நிறுத்த வேண்டும். மானம் கப்பலேறாமல் இருக்க, கென் உடனே விமானம் பிடிக்கிறான். ஆனால் துரதிருஷ்டம் அவனுக்கு முன்னால் விமானத்தில் ஏறிவிடுகிறது. விமானத்தில் பழுது. பாதி வழியில் மலேசியா எல்லையில் இறங்கி விடுகிறது. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள். மேரி என்பவள் ஒரு ஓட்டை ட்ரக்கை ஓட்டிக் கொண்டு வருகிறாள். கென் கெஞ்சிக் கூத்தாடி அந்த ட்ரக்கில் ஏறிக் கொள்கிறான். கென் மகள் கல்யாணத்தை நிறுத்தினானா? இல்லை கலந்துகொண்டு மொய் எழுதினானா? ஜப்பானின் காமெடி கல்யாண கலாட்டா.



6:45 pm : A STRANGER

உத்தப்புரத்தின் சுவர் அதன் மனிதர்களைப் பிரித்திருப்பதைப் போல், மொஸ்தார் நாட்டிலும் ஒரு சுவர். கண்ணுக்கு புலப்படாத சுவர். அங்கே முஸ்லிம்களுக்கும் க்ரோட் இனத்தவருக்கும் தீராத பகை. ஸ்லாவ்கோ, க்ரோட் இனத்தவன். அவன் மனைவி மற்றும் மகனுடன் க்ரோட்டின் பகுதியில் வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் அவனுடைய நெருங்கிய நண்பன் இறந்த செய்தி வருகிறது. அந்த நண்பன் ஒரு முஸ்லிம். ஸ்லாவ்கோ நண்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அதை அவனது சொந்த இனத்தவர்கள் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பை மீறி முஸ்லிம் பகுதிக்கு பயணிக்கிறான் அவன். தன் சொந்த நாட்டிலேயே தன்னை அந்நியனாய் உணரும் ஒருவனின் கதை. இயக்கம்: போபோ ஜெல்ஜிக்.



**************************



திரையரங்கம் : Inox 3



11:00 am : Yellows Are Bluray: 10 Plus 10

இந்த வருடத்தோடு தைவான் நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் இந்த படம். மொத்தம் 20 இயக்குனர்கள். 20 படங்கள். ஒவ்வொன்றும் ஐந்து நிமிடம். 20 குறும்படங்களின் கூட்டுக்குடும்பம். அனைத்து படங்களிலும் தைவானின் அழகு அலையடிக்கிறது. ஹாலிடே பேக்கேஜில் தைவானை சுற்றிப் பார்க்க முடியாதவர்களுக்கு எக்கானமி பேக்கேஜ் இந்த படம்.



2:00 pm : Vegetarian Cannibal

இரு எதிரெதிர் வார்த்தைகள் இணைந்து ஆக்சிமொரான் ( OXYMORON ) தலைப்பாக அதிரடி காட்டும் இந்த க்ரோடியப் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நாட்டையே அதிர வைத்தது. டேங்கோ ஒரு டாக்டர். போதை வஸ்து, பெண்கள் என்று வாழ்க்கையை என்ஜாய் பண்ணுபவன். அவனுக்கு ஒரு மாஃபியா தலைவன் அறிமுகம் ஆகிறான். 'உனக்கு நிறைய பணம் தருகிறேன்.. என்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு நீ அபார்ஷன் செய்ய வேண்டும்' என்கிறான் அந்த மா.த. அந்நாட்டில் அபார்ஷன் மிகப்பெரிய குற்றம். ஆனாலும் டேங்கோ பணத்துக்காக ஒத்துக் கொள்கிறான். பிறகு..? க்ரோடியாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்.



4:30 pm : My Name Is Viola

இது அர்மேனியா நாட்டின் ஃபயர். அன்னாவின் உலகில் யாரும் இல்லை. அவளும் தனிமையும் மட்டுமே. அன்புக்கும் துணைக்கும் ஏங்குபவளுக்கு ஹயுகி எனும் தோழி கிடைக்கிறாள். காலப்போக்கில் அன்பு காதல் ஆகிறது. ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பு வந்திருக்கும் இந்நாளில் விவாதத்தை கிளப்பும் படம். இயக்கம்: ரூபன் கொச்சார்.



**************************

திரையரங்கம் : CASINO



11:00 am : TWO MOTHERS

லிஸ்சும் ராசும் பால்ய சிநேகிதிகள். அவரவர் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீட்டில் வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் ராசுக்கும் லிஸ்சின் மகனுக்கும் கெட்ட சிநேகிதம் உருவாக.. பழிக்குப் பழியாய் ராசின் கணவன் லிஸ்சுடன் அதே கெட்ட சிநேகிதம் கொள்கிறான். இரண்டு குடும்பங்கள்.. ஏகப்பட்ட உறவுக் குழப்பங்கள். கோகோ பிஃபோர் சேனல், க்ளோ போன்ற புகழ் பெற்ற படங்களை இயக்கிய ஆன்் ஃபொண்டைன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆஸ்த்ரேலிய நாட்டின் அபூர்வ ராகங்கள்.



2:00 pm : Like Father, Like Son

மீண்டும் ஒரு குடும்பப் படத்தோடு வந்திருக்கிறார் ஜப்பான் இயக்குனர் ஹிரோகசு கோரீடா. படத்தின் நாயகன் யோட்டா . பெரும் செல்வந்தன், அழகான மனைவி, அன்பான ஆறு வயது மகன். வாழ்க்கையில் அத்தனையும் ஜெயித்து விட்ட திமிர் யோட்டாவுக்கு. ஒருநாள் ஹாஸ்பிட்டலில் இருந்து அவனுக்கு ஒரு போன் வருகிறது. டெலிவரியின் போது குழந்தை மாறி விட்டதாம். இப்போது அவனிடம் இருக்கும் அந்த அன்பான ஆறு வயது மகன் அவனுடய பையன் இல்லையாம். நொறுங்கிப் போகிறான் யோட்டா. இத்தனை நாள் வளர்த்த மகனா? இல்லை சொந்த மகனா? யோட்டாவின் அன்பு யாருக்கு?.



4:30 pm : 12 AND D' AGE

சார்லசும் பியரெட்டும் பேச்சுலர்ஸ். இருவருக்கும் வயது 70. சார்லசுக்கு பியரெட். பியரெட்டுக்கு சார்லஸ். பால்ய வயதிலிருந்தே இப்படித்தான். அந்த 70 வயதில் ஒரு நாள் வாழ்க்கை போர் அடிக்க.. உடனே உல்லாசப் பயணம் கிளம்புகிறார்கள். உலகம் சுற்றும் கிழவர்கள். இயக்கம்: ஃபெட்ரிக் ப்ராஸ்ட்



7:00 pm : THE SHOOTER

கோபன்கேஹனில் ஒரு டிவி நியூஸ் சேனலில் மியாவுக்கு ரிப்போர்ட்டர் வேலை. அரசாங்கம் ஆர்டிக் கடல் பகுதியில் ஓட்டை மேல் ஓட்டைப் போட, அதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது என்று கவரேஜ் பண்ணி திரும்புவபளுக்கு.. ஒரு போன் வருகிறது. 'அரசாங்கம் ஆர்ட்டிக் கடலில் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் தினமும் ஒருவனைக் கொல்வேன்'. மியாவுக்கு இது ஸ்கூப் நியுஸ். மிரட்டலை அரசுக்கும் சொல்கிறாள். மிரட்டியவன் சொன்னதைச் செய்கிறான். தினம் ஒரு கொலை. அரசாங்கம் மியாவை சந்தேகப்படுகிறது. ஆனால் அத்தனை கொலைகளையும் செய்பவன் ஒரு முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கி வீரன். சுற்று சூழல் நலன் பேசும் ஒரு திரில்லர்.



**************************



அரங்கம் : RANI SEETHAI HALL



7:00 pm : YANG YANG

யாங் யாங்- கதையின் நாயகி. தைவான் தாய்க்கும் பிரான்ஸ் அப்பாவுக்கும் பிறந்தவள். ஆனால் அவளை வளர்ப்பவளோ இன்னொருத்தி. இன்று வரை யாங் யாங் தன் பெற்றோரை பார்த்ததில்லை. இரக்கப்பட்டு யாங் யாங்கை வளர்த்து வரும் அந்த வளர்ப்புத் தாய்க்கு ஒரு மகள். அவள் சியா. யாங் யாங், சியா இருவரும் நல்ல தோழிகள். சியா ஒருவனை காதலிக்கிறாள். ஆனால் அவனோ யாங் யாங்கை காதலிக்கிறான். இதனால் தோழிகள் இடையே சண்டை. யாங் யாங் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். அவளுக்கு ஒரு சினிமா வாய்ப்பு. தன் பிரெஞ்சு அப்பாவை தேடும் தைவான் பெண் கேரெக்டர். தன் நிஜ வாழ்வே திரையிலும். ஒரு முக்கோண காதல் கதை.

**************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்