டிசம்பர் 18 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 2013 ( CIFF 2013 )

நாள் : 18 டிசம்பர் 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 AM : The Amazing Catfish

கிளாடியா ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதி. ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக செல்பவள். பல நோயாளிகளைப் பார்ப்பவள். அன்று அவள் சந்தித்தது மார்த்தாவை. மார்த்தா மரணத்துக்கு காத்திருக்கிற ஒரு எய்ட்ஸ் நோயாளி. கிளாடியாவின் நடப்பால் ஏறக்குறைய செத்துவிட்ட மார்த்தாவுக்குள் உயிர் துளிர்க்கிறது. சக மனிதனிடம் குறிப்பாக ஒரு நோயாளியிடம் நாம் காட்ட வேண்டிய நேசத்தைப் பேசுகிற படம். டொரான்டோ திரைப்பட விழாவில் பாராட்டுக்களை அள்ளிய கிளாடியா லுஸ் என்கிற மெக்சிக பெண் இயக்குனரின் முதல் படம்.

2:00 PM : The Past (Le passé)

பெற்றோர் டைவர்ஸ் வாங்கிப் பிரிகிற போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் குழந்தைகள். எந்தச் சமாதானமும் அவர்கள் மனக் காயத்தை ஆற்றாது. அப்படி ஒருத்தி லூசி. அவள் அம்மா அப்பா அஹ்மத்-மேரி. மேரி இப்போது கணவனைப் பிரிந்து சமீரைக் காதலிக்கிறாள். பாவம் லூசி. அவரவருக்கு அவரவர் வாழ்க்கை. 2011 சிறந்த அயல் நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ' தி செப்பரேசன்' இயக்குனரின் படம். சென்ற ஆண்டின் கவனம் பெற்ற 'தி ப்ராஃபெட்'டின் தாகிர் ரஹீம் படத்தின் படத்தின் நாயகன். உறவுப் போராட்டம்.

4:30 PM : OMAR

சில நேரம் இப்படி நடக்கும். ஒரு சப்பை மேட்டர் கழுத்துக்கு கத்தி ஆகிவிடும். ஒமாருக்கும் அப்படித்தான் ஆனது. ஒமார் ஒரு புரட்சியாளன், தன் நண்பர்களுடன் போராட்டக் களத்தில் நிற்பவன். எதிரி ஒருவனைப் போட்டுத் தள்ள கிளம்புகிறான். பத்தோடு பதினொன்று எனப் போனால்.. ஒமாருக்கு கண்ணைக் கட்டுகிறது. அவன் கொல்லப் போனது ஒரு ராணுவ உயர் அதிகாரியை. அவ்வளவுதான் ஒட்டுமொத்த ராணுவமே ஒருவனைக் குறிவைத்து துரத்துகிறது. நூறு பேர் துரத்த ஒருவன் ஓடினால்... இஸ்ரேல் பாலஸ்தீனிய யுத்தப் பின்னணியில் ஒரு அரசியல் படம். உலகப் புகழ்பெற்ற 'பாரடைஸ் நவ்' படத்தின் இயக்குனர் ஹானி அபு அசாத் இயக்கியது.

7:00 PM : The Great Beauty (La grande bellezza)

பத்திரிக்கையாளர் ஜெப் காம்பர்டெல்லா ரோம் நாட்டின் கலாச்சார குறியீடு. ரோமின் முக்கிய இரவுப் பார்ட்டிகளில் கட்டாயம் அவர் இருப்பார். எழுதியது ஒரே ஒரு புத்தகம். இருப்பதோ புகழின் உச்சியில். தலையைச் சுற்றி ஒளிவட்டம். நடப்பது அவரின் 64வது பிறந்தநாள் பார்ட்டி. பார்ட்டிக்கு வருகிறாள் பழைய காதலி. பார்த்ததும் பகீர் என்கிறது ஒளிவட்டத்துக்கு. வந்தவள் வாய் திறந்தால்.. பரமபத ஏணியேறி உச்சம் சென்றவரை வாய்பிளந்து வரவேற்கிறது பிரம்மாண்ட பாம்பு. பாலோ சொரெண்டொ என்கிற இத்தலிய நாட்டு இயக்குனரின் படம்.

**************************************************

திரையரங்கம் : WOODLANDS SYMPHONY

10:45 AM : HOW HARRY BECAME A TREE

1920ல் மேற்கு அயர்லாந்தில், ஸ்கில்லெட் என்கிற சிறு கிராமத்தில் நிகழும் கதை. ஹாரி மொலாணி கதையின் நாயகன். முதலில் அவனுடைய மூத்த மகன் இறந்து போகிறான், கொஞ்ச நாளிலேயே மனைவியும் இறந்து போக ஹாரி ஒருமாதிரி ஆகிப்போகிறான். இதற்கிடையில் ஊரிலிருக்கும் மிகப்பெரிய மனிதனான ஜார்ஜ் உடன் ' நீ பெரியவனா?.. நான் பெரியவனா? ' சண்டை வேறு. அடுத்த தலைவலி: ஹாரியின் இன்னொரு மகனான கஸ், எலேனா காதல். ஹாரி ஏலேனாவை சூனியக்காரி என்று நிரூபிக்கப் பார்க்கிறான். படு ஜாலியாக நகர்கிற காமெடி படம்.

1:45 PM : S’EN FOUT LA MORT - No Fear, No Die

கிளேர் டென்னிஸ் எனும் பிரெஞ்சு பெண் இயக்குனரின் படம். சேவல்சண்டை- ஆடுகளம். ஆடும் களம்- ஃபிரான்ஸ். ஆடும் நபர்கள் இரு கருப்பர்கள். கரீபியன் தேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். விளிம்பு மனிதர்களின் வாழ்க்கை. உயிர் வாழ கொலை செய்ய வேண்டிய மண்ணில்.. எல்லா பாவங்களும் தர்மமே.

***********************************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI

11:00 AM : Ken and Mary: The Asian Truck Express

கென் ஒரு நடுத்தர மனிதன். 25 ஆண்டுகளாய் ஒரு ஜப்பானிய கம்பெனியில் வேலை. அவனுக்கு ஒரு மகள். அவள் மலேசியாவில் இருக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருந்து போன். 'அப்பா.. நான் ஒரு மலேசியாக்காரனை காதலிக்கிறேன்'. மகளின் கல்யாணத்தை நிறுத்த வேண்டும். மானம் கப்பலேறாமல் இருக்க, கென் உடனே விமானம் பிடிக்கிறான். ஆனால் துரதிருஷ்டம் அவனுக்கு முன்னால் விமானத்தில் ஏறிவிடுகிறது. விமானத்தில் பழுது. பாதி வழியில் மலேசியா எல்லையில் இறங்கி விடுகிறது. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள். மேரி என்பவள் ஒரு ஓட்டை ட்ரக்கை ஓட்டிக் கொண்டு வருகிறாள். கென் கெஞ்சிக் கூத்தாடி அந்த ட்ரக்கில் ஏறிக் கொள்கிறான். கென் மகள் கல்யாணத்தை நிறுத்தினானா? இல்லை கலந்துகொண்டு மொய் எழுதினானா? ஜப்பானின் காமெடி கல்யாண கலாட்டா.

2:00 PM : Mold (kuf)

சென்ற வருட 'Once upon a time in Anatolia'வைத் தொடர்ந்து இந்த வருடத்தில் துருக்கியின் சிறந்த படங்களுள் ஒன்று. பஸ்ரி.. 55 வயது ரயில்வே பணியாளன். தேர்தலில் ஓட்டு போடக்கூட விருப்பமில்லாதவன். ஆனால் மகன் சைஃபியோ அவனுக்கு நேரெதிர். அரசியலில் அதிதீவிர ஆர்வம். அவனுடையது புரட்சிகர அரசியல். 18 வருடங்களுக்கு முன்னால் படிக்கப் போனவன் திரும்பவே இல்லை. காணாமல் போய் விட்டான். அவனைக் கேட்டு இன்றும் இஸ்தான்புல்லுக்கு கடிதம் எழுதி வருகிறான் பஸ்ரி. இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி விசாரணைக்கு வருவதில் தொடங்குகிறது படம். அரசியல்வாதிகளுக்கு உலகம் எங்கும் ஒரே முகம்.. கலகக்காரர்கள் உலகமெங்கும் ஒரே மாதிரி காணாமல் போகிறார்கள்.

4:30 pm :WATER

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. மொத்தம் 7 படங்கள். ஏழுக்கும் ஏழு இயக்குநர்கள். அத்தனை படங்களுக்கும் அடிநாதம் ஒன்று. தண்ணீர். பேக்ட்ராப் வேறுவேறு.. காதல், போர், ஹாலோகாஸ்ட் இப்படி. தண்ணீரை மையமாகக் கொண்ட வானவில் கதைகள்.

7:00 PM : Parviz

மஜீத் பர்ஸேகர் இயக்கிய ஈரானியப் படம். நான்கு சுவருக்குள் பாதுகாப்பான வாழ்க்கை, வெளியே சவாலானது. நானூறு வகை மனிதர்களை வெற்றி கொள்ள வேண்டும். சரியான அப்பாக்கோண்டு ( தன் அப்பாவையே சார்ந்திருக்கும் ) அப்பாவி பர்விஸ். இத்தனை நாள் அப்பாவின் கைப்பிடித்து, தோள் அமர்ந்து உலகம் பார்த்தவன், அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள.. தெருவில் வீசப்படுகிறான். இத்தனை நாள் அப்பாவின் விழிவழியே பார்த்த உலகம் அல்ல இது. இது வேறு உலகம். பர்விஸ் இதை ஜெயிக்க வேண்டாம். இதில் ஜீவித்தாலே போதும். இங்கே கவனிக்க வேண்டியது. பர்விசுக்கு 5 வயதோ 10 வயதோ அல்ல.. 50 வயது. 50 வயதுக் குழந்தையின் கதை.

********************************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 AM : Rock The Casbah

சோபியா ஒரு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை. ஊரில் அவள் அப்பா இறந்து விடுகிறார். உடனே ஊருக்கு கிளம்பி வருகிறாள். அவள் அப்பாவுக்கு மொத்தம் நான்கு பெண்கள். அதில் இரண்டு பேருக்கு இவள் மீது ரொம்ப பொறாமை. இன்னொருத்தி சில மாதங்கள் முன்புதான் தற்கொலை செய்து கொண்டாள். அதற்குக் காரணம் சோபியாதான் என்று பொறாமைச் சகோதரிகள் குற்றம் சுமத்துகின்றனர். பொறாமை படுத்தும் பாடு என்று படத்துக்கு பெயர் வைக்கலாம். குடும்ப உறவுகளை அந்த நாட்டுக் கலாச்சார பின்புலத்தில் பேசுகின்ற படம்.

1:45 PM :Thou Gild'st The Even

ஓனர் அனலு இயக்கிய துருக்கி ஃபாண்டஸிப் படம். கதை ஆனடோலியா நகரத்தில் நடக்கிறது. செமால் ஒரு கால்பந்தாட்ட ரெஃப்ரீ. யாசெமின் முட்டை பாக்டரியில் வேலை பார்ப்பவன். டெப்னீ புத்தகங்கள் விற்பவள். இர்பான் ஒரு டாகடர். இந்த நால்வரும் நம்மைப் போல் இல்லை; நமக்கும் மேல். வினோத விசித்திர சக்தி அவர்களுக்கு உண்டு. செமால் சுவற்றை துளைத்து நடப்பான். யாசமின் நினைத்தாலே பொருட்கள் நகரும். டெப்னீ காலத்தை நிறுத்துவாள். துருக்கியின் எக்ஸ் மென்.

4:15 pm : Johnathan's Forest

அடர்ந்த காடு அழகானது. டிஸ்கவரி சேனலில் பார்க்கும்போது. அந்தக் காட்டில் நீங்கள் ஒருவர் மட்டுமே. துணைக்கு உங்கள் குரல். கூட உங்கள் நிழல். இப்போது சொல்லுங்கள்.. காடு அழகானதா?. இந்தக் கேள்விக்கு ஜானத்தனுக்கு பதில் தெரியவில்லை. ஜானத்தன் தன் சகோதரன் ஜூலியனுடன் காட்டுக்கு பிக்னிக் வந்தவன். சற்றுமுன் காட்டுக்குள் அவன் காணாமல் போய்விட்டான். ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு ஜானத்தன் இனிமேல்தான் பதில் தேடவேண்டும்.. அடர்ந்த காட்டுக்குள். இயக்கம்: செர்ஜியோ அன்த்ராதே.

6:45 pm : Ilo Ilo

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் சிங்கப்பூர் திரைப்படம். 1990ல் கதை நிகழ்கிறது. ஜிலே 10 வயது சிறுவன். அவனுடைய பெற்றோர் பிரிந்துவிட்டனர். நாடாறு மாதம்.. காடாறு மாதம். அம்மாவிடம் பாதி நாள்.. அப்பாவிடம் பாதி நாள். அங்கே இங்கே எங்கு இருந்தாலும் அவனைப் பார்த்துக் கொள்வது ஒருத்திதான். தெரேசா. ஜிலோ அம்மா பையனா?.. அப்பா பையனா?. தெரேசா பையன். இயக்குநர்: அண்டனி சென்.

**************************************

திரையரங்கம் : INOX 2

10:45 am : Snails In The Rain

போஸ் மொழியியல் மாணவன். எல்லா இளைஞர்களையும் போல அவனுக்கும் ஒரு காதலி. இன்னொரு நபரிடம் இருந்து போஸுக்கு ஒரு கடிதம் வருகிறது. அது காதல் கடிதம். போஸ் பதில் கடிதம் போடுகிறான். காதல் வளர்கிறது. கடிதம் போட்டது அவள் அல்ல.. அவன். காதலனின் புதுக்காதல் காதலிக்கு தெரியவர.. வில்லங்க காதல் கதை. யாரிவ் மோசர் இயக்கிய இஸ்ரேல் திரைப்படம்.

4:15 pm : The Circle Within

சந்தேகம் சகஜமான ஒன்று. எல்லோருக்கும் அது வரும். ஆனால் அளவு அதிகரித்தால், அதுவே பெரிய நோய் . இந்த நோய் ஒரு சமூகத்தை.. ஒரு இனத்தையே பீடித்தால்?

ஒத்தெல்லோவின் சந்தேகத்தால் டெஸ்டிமோனா செத்தாள். இது சந்தேகத்தால் ஒரு இனமே அழிந்து போன உண்மைக் கதை. டென்னிஸ் குவினார் இயக்கிய துருக்கி நாட்டுத் திரைப்படம்.

6:15 pm : BERLIN 7

ராம்தின் லவாஃபிபௌர் இயக்கிய ஈரான் நாட்டுப் படம். அமெரிக்கா குதறிய ஈரானின் சிதைந்த ஒரு குடும்பத்தின் அவலக் கதை. போரில் தாய் கொல்லப்படுகிறாள். தாயின் சாவைக் கண்ணால் பார்த்த மகனுக்கு பைத்தியம். மகள் யுத்தக் கைதி. மிச்சம் இருப்பது தந்தை. இப்போது தந்தைக்கு ஒரே ஒரு லட்சியம். மகன், மகளுடன் நாட்டை விட்டு தப்பிக்க வேண்டும். கண்ணுக்கு தெரிந்து எமன் துரத்தினால்.. எல்லோருமே ஓடுவோம்.

*********************************************

திரையரங்கம் : INOX 3

11:00 am : POWER KEG

செர்பியாவின் மிக முக்கியமான இயக்குநர் கோரன் பஸ்கலிஜேவிக்கின் படம். வெளியான ஆண்டு 1999. ' 'இது மிக மோசமான நாடு.. இங்கு ஏன் வந்தீர்கள்' இதுதான் படத்தில் வரும் முதல் வசனம். இந்த வசனமே மொத்தப் படத்துக்கும் அடித்தளம். உலகிற்கு தெரிந்த யுகோஸ்லேவியாவின் ஒரு முகம் அதன் அழகும் அதன் பாரம்பரியமும். இந்தப் படம் அந்த நாட்டின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. மறுபக்கத்தைப் பேசுகிறது. மூன்று வெவ்வேறு கதை வழியே நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் குற்றமும் தண்டனையும் சுற்றிச் சுழல்வது பற்றிய ஒரு செல்லுலாய்ட் சித்தரிப்பு.

2:00 pm : My Sweet Pepper Land

ஹனர் சலீம் இயக்கியது. பிரெஞ்சு ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பு. படத்தின் நாயகன் பாரான்.. குர்டிஷ் நாட்டின் விடுதலைப் போராளி. போர் முடிந்து விட்டது. பாரான் இப்போது தலைமைக் காவல் அதிகாரி. நேற்றுவரை வெளிநாட்டு எதிரிகளுடன் போராடியவன். இப்போது சொந்தச் சகோதரன்.. உள்ளூர்க் குற்றவாளியுடன் மோத வேண்டும். மாவீரனுக்கு கண்முழி பிதுங்குகிறது. நேற்று வரை எதிர்களோடு போராடியவன், இப்போது துரோகிகளோடு மோதுகிறான். துரோகம் அபாயகரமானது.

4:30 pm : The Missing Picture

இது க்ளே அனிமேஷன் தொழில்நுட்பப் படம். இயக்கியவர் கம்போடியாவின் புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குனர் ரித்தி ப்ஹான். படத்துக்கு அடிப்படை 'தி எலிமினேசன்' எனும் புத்தகம். 1975, கம்போடிய கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகான வரலாறு. இந்த வருட அயல் நாட்டு ஆஸ்கர் விருதுக்கான கம்போடியாவின் படம்.

********************************************

திரையரங்கம் : CASINO

11:00 am : IN BLOOM

நாடியாவும், ஏகாவும் தோழிகள். வறுமை வாட்டும் வாழ்வில் ஒரே ஆறுதல் அவர்களின் நட்பு. எப்போதும் போர் வெடிக்கும் சூழல். நாடியா ஒருவனைக் காதலிக்கிறாள். அந்த காதலன் நாடியவுக்கு ஒரு பரிசு தருகிறான். அது ஒரு கைத் துப்பாக்கி. செக்காவ் சொல்வார்.. கதையில் ஒரு துப்பாக்கி வந்தால்.. கடைசியில் அது வெடிக்க வேண்டும். இந்தப் படத்தில் அந்த துப்பாக்கி வெடித்ததா?. இயக்கம்: நானா எக்டிமிஷில்லி.

2:00 PM : Waiting For The Sea

தாஸ்தாவெஸ்கியின் சூதாடியிடம், தான் தொலைத்ததை எல்லாம் ஒரே நாளில் மீட்டுவிட வேண்டும் என்கிற வெறி இருக்கும். அந்த வெறிகொண்ட போராட்டம், விதியுடன் நடத்தும் போராட்டம். இப்படத்தில் மாரட் தன் விதியுடன் போராடுகிறான். அவன் ஒரு சிறிய மீன்பிடி கப்பலின் கேப்டன். ஒரு நாள் வீசிய கடல் புயலில் அவன் மனைவி, மகன், கப்பல் அனைத்தையும் தொலைத்தவன். இன்றைய தேதியில் அவனொரு நாடோடி. பார்ப்பவர்களுக்கு அவன் ஒரு பைத்தியக்காரன். 'ஒரே ஒரு நாள் கடலுக்குள் போவேன்.. தொலைத்ததையெல்லாம் மீட்டுவிடுவேன்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். ஒரு நாள் ஒரு கப்பல் ஏறி.. கடலுக்குள் சென்றும் விடுகிறான். கடலில் நடக்கும் ஒரு சாகசக் கதை. ஃபேண்டசி படம். பக்தியார் குடோஜ்நாசரோ இயக்கியது.

4:30 PM : Before Snowfall

அண்ணன் சியார் கஷ்டப்பட்டு தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். லாஸ்ட் மினிட் தங்கை காதலனுடன் ஓடிப் போகிறாள். குடும்ப மானம் போய் விட்டதென பைக்கை எடுத்துக் கொண்டு அண்ணங்காரன் தங்கையை துரத்துகிறான். அண்ணனுக்கு கொலைவெறி. ஓடும் காதலர்களுக்கு உயிர்வெறி. காடு, மலை, கிராமத்தில்.. நிகழும் இந்த துரத்தல் பயணத்தில் அண்ணனுடன் ஒட்டி கொள்கிறாள் எவின் என்கிற நாடோடிப் பெண். எவினுடன் சிநேகம்.. அண்ணனை என்ன செய்தது?. கௌரவக் கொலை எந்த நாட்டில்தான் இல்லை..

7:00 PM : Blue is the Warmest Color

ஆனால், காதல் மிக விசித்திரமானது. அது எப்போது வரும், எப்படி வரும், எவர்மீது வரும்.. தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும். அடீலுக்கும் அப்படி ஒரு காதல் வந்தது. இதிலென்ன விசித்திரம்? காதல் வந்தது எம்மா மீது. எம்மா அவளுடைய உறவுப்பெண். பெண் மேல் பெண்ணுக்கு காதல். இதனால்தான் எத்தனை மோதல்.. ஆப்பெல்லாடிஃப் கெசிசே என்கிற பிரெஞ்சு இயக்குநரின் படம்.

********************************************

திரையரங்கம் : RANI SEETHAI HALL

11:00 am : AFTER THE BATTLE

மமூட் ஒரு புரட்சியாளன். எகிப்த்தின் உள்நாட்டு போரில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடியவன். விளைவு.. அவன் வேலை போகிறது. கெட்ட பெயர் வேறு. ஊரை விட்டே துரத்தி விடுகின்றனர். ரீம் கெய்ரோவில் வசிப்பவன். பெரும் பணக்காரன். மமூட் ரீமிடம் வேலைக்கு சேர்கிறான். இரண்டு வேறு வேறு மனிதர்கள். இரண்டு வேறுவேறு சித்தாந்தங்கள். இருவரும் இருப்பது அருகருகே. என்னாகும்? என்னவானது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்