சீனாவில் ஹாலிவுட் படத்தை முந்திய அந்தாதுன்: ரூ.300 கோடி வசூலைத் தாண்டியது

ஆயுஷ்மன் குரானா, தபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அந்தாதுன்' திரைப்படம் சீனாவில் புதிய சாதனை படைத்து வருகிறது. இரண்டு வாரங்களாக சீனாவில் ஓடிக் கொண்டிருக்கும் 'அந்தாதுன்' திரைப்படம், ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படமான ஷசாமின் வசூலை இந்த வார பாக்ஸ் ஆபிசில் முந்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, 'பியானோ பிளேயர்' என மொழிமாற்றம் செய்யப்பட்டு சீனாவில் வெளியானது 'அந்தாதுன்'. ப்ளாக் காமெடி வகை திரைப்படமான இது இந்தியாவில் வெளியான போதே விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றது. தற்போது சீனாவில் இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதே நேரத்தில் வெளியான 'ஷசாம்' எதிர்பார்த்த வரவேற்பை சீனாவில் பெறவில்லை. தற்போது இரண்டாவது வாரத்தைக் கடந்து இந்த இரண்டு படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த வார சீன பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி 'அந்தாதுன்' 'ஷசாமை' விட அதிக வசூல் செய்து பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 43.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை 'அந்தாதுன்' வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.303.36 கோடி. 'ஷசாம்' இதுவரை மொத்தமாக 40.4 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. 'அந்தாதுன்' இந்தியாவில் மொத்தமாக ரூ.95.63 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் வரிசையில் 'அந்தாதுன்', 'பஜ்ரங்கி பைஜான்' படத்தை முந்தி 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE