முதல் பார்வை: பரியேறும் பெருமாள்

By உதிரன்

சாதியின் பெயரால் கருப்பிக்கும் பரியனுக்கும் நடக்கும் வன்முறை நிகழ்வுகளே 'பரியேறும் பெருமாள்'.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பரியேறும் பெருமாள் (கதிர்). அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கருப்பியை இன்னொரு சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் திட்டமிட்டுச் சிதைக்கின்றனர். நாயுடன் வேட்டைக்குச் சென்ற சில இளைஞர்களைப் பிடித்து வைத்திருக்கும் போலீஸார், கோயில் உண்டியலில் இருந்த காசைத் திருடியதாகக் கூறி அவர்களை விசாரிக்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு சிபாரிசு செய்யப் போய் அவமானப்படும் சூப்பர் குட் சுப்பிரமணி அண்ணன் வக்கீலுக்குப் படித்தால் நெஞ்சை நிமிர்த்திவிட்டுப் பேசலாம் என்று சொல்ல, அவர் ஆசைப்படி சட்டக்கல்லூரியில் படிக்கச் செல்கிறார் கதிர். புரியாத ஆங்கிலம் பயமுறுத்த அங்கு ஆனந்தி அவருக்கு உதவுகிறார். யோகிபாபுவின் நட்பு கதிருக்கு ஆறுதல் தருகிறது. இதனிடையே சாதிய வன்மம் கதிரைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறது. அதுவே கொலைவெறித் தாக்குதலாக மாற, கதிர் எப்படி அதை எதிர்கொள்கிறார், அவரின் சட்டப்படிப்பு என்ன ஆனது, ஆனந்தியைக் கைப்பிடித்தாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களையும், சமத்துவத்தை எதிர்பார்க்கும் இளைஞனின் நோக்கத்தையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சி பாராட்டுக்குரியது.

நடிகனாக தன்னைப் பின்னிறுத்தி பரியேறும் பெருமாள் என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருக்கிறார் கதிர். கருப்பி இழந்த சோகத்தை கண்களுக்குள் கொண்டு வரும் கதிர், தொடர் அவமானத்தைத் தாங்கும் விதம் நெக்குருக வைக்கிறது. கோட்டாவுல வந்துட்டு இப்படி உயிரை எடுக்குறாங்க என்று விரிவுரையாளர் அலுத்துக்கொள்ள, அந்தக் கோபத்தினூடே வகுப்பறை இருக்கைகளின் மீது தாவிக் குதித்து மற்ற மாணவர்களின் நோட்டுப்புத்தகங்களைக் காட்டிப் படிக்கச் சொல்லும்போது ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் நோக்கி கேள்வி எழுப்புகிறார். ''நல்லா படிச்சு இங்கே வக்கீல்தான் ஆக முடியும், டாக்டர் ஆக முடியாது'' என்று கல்லூரி முதல்வர் சொல்ல, ''நான் ஊசி போடுற டாக்டரைச் சொல்லலை சார். டாக்டர் அம்பேத்கர் மாதிரி ஆகப்போறேன்''னு பதிலளிக்கும் விதத்தில் பட்டையைக் கிளப்புகிறார். பேராசிரியர்களை டீச்சர் என விளிப்பது, பிட் அடிக்க உதவிய அக்காவை தேவதை என வர்ணிப்பது, தனக்கு நடந்த அவமானத்தை யாருக்கும் சொல்லாமல் தவிப்பது, அப்பாவுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு பொங்குவது, தனக்கு எதிரான சதித்திட்டம் உணர்ந்து துரிதமாகச் செயல்படுவது என முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்.

கண் முன் நடக்கும் எந்த சம்பவத்தையும் அறிந்துகொள்ளாமல் சிரிக்கும் கண்களுடனே கடந்து செல்கிறார் ஆனந்தி. அன்பின் அடர்த்தியில் மீண்டும் மீண்டும் கதிரைத் தேடிச் சென்று காதலைக் கொட்டியிருக்கும் ஆனந்தியின் வெள்ளந்திப் பேச்சு அப்பழுக்கற்றது.

நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்ர நடிப்பிலும் யோகி பாபு முழுமையாய் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். சுயசாதிக்கு எதிராக அவர் பேசும் வசனங்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.

''நடிப்பு உச்சமா இருந்தாதான் பக்கத்துல வந்து நோண்ட மாட்டாங்க'' என்று லாஜிக் சொல்லும் சண்முகராஜன், மனசுக்குள் வன்மத்தை வைத்துக்கொண்டு வெளியில் வேற மாதிரி பேசும் மாரிமுத்து, வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்தவன் என்று தெரிந்ததும் பேருந்தின் இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும் கராத்தே வெங்கடேஷ், எந்த எல்லைக்கும் சென்று அவமானப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்ட லிஜிஷ், நடந்ததை உணர்ந்து அறிவுரை சொல்லும் கல்லூரி முதல்வர் 'பூ' ராமு உள்ளிட்ட அத்தனைப் பாத்திரங்களும் கச்சிதம்.

திருநெல்வேலி மாவட்ட மண்ணின் இயல்பை அப்படியே நிறம் மாறாமல் படம் பிடித்திருக்கிறார் ஸ்ரீதர். சந்தோஷ் நாராயணின் இசையில் கருப்பி, நான் யார், எங்கும் புகழ் துவங்க பாடல்கள் மனதை விட்டு நீங்காமல் வலியை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று பாடல்களும் கதையோட்டத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன. பின்னணி இசை படத்துக்கு மிகப் பொருத்தம். படத்தின் நீளம் மட்டும் கொஞ்சம் அதிகம். அதை மட்டும் செல்வா கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

டாடா சுமோக்கள் பறக்க, வீச்சரிவாள்களுடன் வீறுகொண்டு தங்கள் வீரத்தைப் பறைசாற்றும் தென் மாவட்டக் கதைக்களம் கொண்ட நிறைய படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்கள் குறித்தும் அந்த முகங்கள் குறித்தும் அச்சு அசலாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட, சித்தரிக்கப்பட்ட சாதி ஆணவக் கொலைகள் எல்லாம் பாசத்தின் உச்சம் என்ற மாயப் போர்வையிலோ அல்லது ஊருக்கு வெளியே சம்பந்தமில்லாத சிலரால் நிகழ்த்தப்படும் என்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மாரி செல்வராஜ் அப்படியெல்லாம் சுற்றி வளைக்கவில்லை. குடும்பத்தில் ஒருவர், தெரிந்த முகமாய் இருப்பவர் கூட சாதிய ஆணவக்கொலையை எப்படிச் செய்கிறார் என்பதை மிக வெளிப்படையாகவும் துல்லியமாகவும் சொல்லியிருக்கிறார்.

அதே போல், குறிப்பிட்ட மையக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டே இயக்குநர் மாரி செல்வராஜ் கதையைக் கட்டமைக்கவில்லை. சாதிய வன்மத்துடன் திரியும் மனிதர்களின் முகங்களை, உள்ளுக்குள் குரூரத்துடனும் வெளியில் இயல்பாகப் பேசுவதாகப் பேசும் மனிதர்களின் தந்திர பாவனைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

தந்தை யார் என்பதைச் சொல்லாமல் இருக்கும் கதிர், சிக்கலான ஒருகட்டத்தில் தன் தந்தைதான் வேண்டும் என்று தீர்மானித்து அவரைத் தேடிச் செல்கிறார். அங்கே எங்கும் புகழ் துவங்க பாடல் ஆரம்பமாகிறது. நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் பெண் வேடமிட்டு அசாத்தியமாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைப் பார்த்த மக்கள் எல்லாம் அவரின் நடனத்திறமையை விதந்தோதியபடி செல்கின்றனர். இதைப் பார்க்கிற கதிருக்கு மட்டும் இல்லை, பார்வையாளராக இருக்கும் நம் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் ஓர் ஆண் பெண் வேடமிட்டு ஆடும்போது நிகழும் பரிகாசங்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஆனால், அவர் மகன் படிக்கும் கல்லூரியில் உச்சபட்சமாக சிலரால் அவமானப்படுத்தப்படுகிறார். தோழியின் சகோதரி திருமணத்திற்காகச் செல்லும் கதிருக்கும் சொல்லமுடியாத அவமானம் நேர்கிறது. இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பலவீனப்படுத்துவதற்கு அவமானப்படுத்துவதையே ஆயுதமாகக் கொண்டிருப்பதுதான் பிற சமூகங்களின் போக்காகவும், நோக்கமாகவும் இருக்கிறது. அதை மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கருப்பி பாடலில் சொல்லப்படும் அத்தனை உவமையும் நாய்க்கு மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கும் பொருந்திப் போகிறது. இறுதியில் அதுவே நாயகனுக்கான உருவமாக அமைகிறது. இறந்தது நீயா, இருப்பது நானா, இருப்பது நீயா, இறந்தது நானா, அழிஞ்சது நீயா, அழுவது நானா, அழுவது நீயா, அழிஞ்சது நானா என்ற கேள்விகளை மிக வலுவாக எழுப்பி இருக்கிறார். அவமானத்தின் உச்சத்தில் இருக்கும்போது வரும் நான் யார்? என்ற பாடல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.

கருப்பியும், கதிரும் வேறுவேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்றே இச்சமூகம் பார்ப்பதையும், சாதியும் மதமும்தான் மனிதனுக்கு விரோதிகள், சமத்துவம்தான் இங்கு தேவை, மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கள், நாயாகப் பார்க்காதீர்கள் என்றும் படம் முழுவதும் ஏதோ ஒரு வடிவத்தில் மாரி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

மனிதாபிமானம் இல்லாமல் கொடும் செயல்கள் புரிந்த சாதிய மனோபாவத்தின் திமிரால் தான் பாதிக்கப்பட்ட அவலத்தை நண்பன் யோகி பாபுவிடமும், தோழி ஆனந்தியிடமும் கதிர் சொல்லவே இல்லை. இதன்மூலம் மனிதராக நடந்துகொண்டது யார், மனிதராக வேண்டியது யார் என்ற முக்கியமான அம்சத்தைக் குறித்து இயக்குநர் தெளிவுபடுத்துகிறார்.

இரண்டு டீ கிளாஸ்களைக் காட்டி முரண்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து முடித்த விதத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வலிகளைப் பேசும் உளவியல் நுட்பங்கள் நிறைந்த அரசியல் சினிமாவாக 'பரியேறும் பெருமாள்' தனித்து மிளிர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்