ஊரையே கைக்குள் வைத்திருக்கும் இரண்டு மிகப் பெரிய அப்பா - மகன் ரவுடிகள் ரவி (பிருத்விராஜ்) - கண்ணன் (சுராஜ் வெஞ்சரமுடு). தன் கணவனை காணவில்லை என்று இவர்களின் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்யும் ஒரு பெண்ணும் அவரது 8 வயது மகளும் காணாமல் போகின்றனர். ஏற்கெனவே பல வழக்குகள் அவர்கள் மீது இருக்கும் நிலையில், இந்த வழக்கை வைத்து அவர்கள் இருவரையும் அன்று இரவுக்குள் என்கவுன்ட்டர் செய்ய நினைக்கிறார் எஸ்.பி அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா).
தங்களை எஸ்.பி கொல்லும் முன்பே அவரை கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிடும் ரவி, இதை செய்ய சரியான ஆள் தன்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து தற்போது ஒதுங்கி மளிகை கடை வைத்திருக்கும் காளியிடம் (விக்ரம்) போய் உதவி கேட்கிறார். தன் குடும்பத்தின் நிலையை எண்ணி எவ்வளவோ மறுக்கும் காளி, ஒருகட்டத்தில் ரவி தன் காலில் விழுந்ததும் மனம் இறங்கி ஒப்புக் கொள்கிறார். இதன் பிறகு அந்த இரவு முழுக்க என்ன நடந்தது என்பதே ‘வீர தீர சூரன்: பாகம் 2’
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப படம் தொடங்கியது முதல் காட்சிகளின் பரபர நகர்வு ஆரம்பித்து விடுகிறது. அந்த பெண் சுராஜ் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்யும்போது தொடங்கும் பதைபதைப்பு படத்தின் இடைவேளை வரை அதே டெம்போவில் எங்கும் குறையாமல் பார்த்துக் கொண்டது எஸ்.யு.அருண்குமாரின் திரைக்கதை சாதுர்யம். கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்துதான் விக்ரமின் என்ட்ரியே. பெரிய அலப்பறைகள் எதுவும் இல்லாமல் அறிமுகமானாலும் அது வைக்கப்பட்ட இடம் எந்த ஒரு மாஸ் தருணத்துக்கும் குறைவில்லாத ஒன்று.
கண்மூடித்தனமான ஆக்ஷன் காட்சிகளை அள்ளி தெளிக்காமல் வெறும் வசனங்கள் மூலமாகவே ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வரும் உத்தியை இந்த படத்தில் இயக்குநர் அதிகம் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. பெரியவர் ரவி, விக்ரமின் வீட்டுக்கு வந்து கெஞ்சும் காட்சி, அதன் பிறகு கண்ணிவெடிகளை புதைக்கும்போது கூட இருக்கும் நபருக்கு வலிப்பு வருவது, இடைவேளைக்கு முன்பாக எஸ்.ஜே.சூர்யாவும் விக்ரமும் பேசிக் கொள்ளும் காட்சி, இரண்டாம் பாதியில் சுராஜ் - விக்ரம் பேசிக் கொள்ளும் காட்சி என பல புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட தருணங்கள் இதற்கு உதாரணம்.
படத்தின் பிரச்சினை இடைவேளையில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சியிலிருந்து தொடங்குகிறது. 100 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை படாரென பிரேக் அடித்து ஓரங்கட்டியது போன்று இருந்தது. அதிலும் எஸ்.ஜே.சூர்யா - விக்ரம் பேசிமுடித்துவிட்டு விக்ரம் நடந்து செல்லும்போதுதான் இடைவேளை என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, இந்த மரபை வித்தியாசமாக உடைக்கிறேன் என்று அங்கு ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியை, அதிலும் துஷாரா - விக்ரம் ரொமான்ஸ் காட்சியை கொண்டு வைத்தது பேக் ஃபயர் ஆகிவிட்டது.
இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ்பேக் காட்சியும் ஈர்க்கவில்லை. அந்த ஒரு போலீஸ் ஸ்டேஷன் சண்டை காட்சி மட்டும் தரமான மேக்கிங். கிட்டத்தட்ட அந்த ஒரு காட்சிக்கான பில்டப்பை முதல் பாதியிலிருண்டே கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முன்னால் ஃப்ளாஷ்பேக்கில் வரும் அந்த தேவையில்லாத காட்சிகளை வெட்டியிருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மற்ற காட்சிகளை எல்லாம் வசனங்களிலேயே பக்காவாக நகர்த்த தெரிந்த இயக்குநர் இதை மறந்தது ஆச்சர்யம்.
எனினும் ஃப்ளாஷ்பேக் முடிந்தபிறகு மீண்டும் நிகழ்கால காட்சிகள் தொடங்கியதும் மீண்டும் படம் ஓரளவு பிக்-ஆப் ஆகிவிடுகிறது. க்ளைமாக்ஸில் வரும் ‘மதுரை வீரன் தானே’ பாடல் ஆடியன்ஸின் ஆராவாரத்துடன் கேட்க கூஸ்பம்ப்ஸ் தந்தாலும் இதுபோன்ற ஒரு சீரியஸ் படத்துக்கு அந்த பாடல் அவசியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
விக்ரமுக்கு நிச்சயமாக இது ஒரு ‘கம்பேக்’தான். விகாரமான மேக்கப், விதவிதமான கெட்-அப் என எந்த விஷப் பரிட்சையும் செய்யாமல் மிகவும் சிம்பிளாக வருகிறார். மாஸ் காட்சிகளை மிக அநாயசமாக கையாள்கிறார். படம் முழுக்க தனது இருப்பை மிக அழுத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்து ஈர்க்கிறார். இனி விக்ரம் ‘கெட்-அப்’களை முன்னிலைப் படுத்தாமல் இது போன்ற கதையை முன்னிலைப் படுத்தும் திரைப்படங்களை தேர்வு செய்யவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் அவாவாக இருக்கும்.
எஸ்.பி ஆக வரும் எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல நடிப்பில் பின்னியிருக்கிறார். தன் சக காவலர்களுடன் என்கவுன்ட்டர் குறித்து அவர் பேசும் காட்சி ஒன்று போதும். சின்ன சின்ன மேனரிசங்களில் கூட நுணுக்கம் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார். மலையாள நடிகர் சுராஜுக்கு அவரது வழக்கமான பாணியை தாண்டி ஆக்ரோஷமான கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். ரவி ஆக வரும் பிருத்விராஜ், அவரது மனைவியாக நடித்திருப்பவர், மகளாக வருபவர் சிறப்பான நடிப்பு. துஷாராவும் குறிப்பிடத்தக்க நடிப்பை தந்து பாராட்டு பெறுகிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கின்றன. படத்தில் பல சிங்கிள் ஷாட் காட்சிகள் இருந்தாலும், க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் ஒரு காட்சியில் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்றிலும் விஸ்வரூபம் எடுத்து ஆடியிருக்கின்றனர்.
படத்தின் பல கேள்விகளுக்கு பதிலே இல்லை. எஸ்.ஜே.சூர்யா எதற்காக ரவி, கண்ணன் மீது இத்தனை பகையுடன் இருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் வரும் திலீப்புக்கும் விக்ரமுக்கும் இடையிலான தொடர்பு என்ன? ஒருவேளை இவை எல்லாம் முதல் பாகத்தில் விரிவாக காட்டப்படலாம்.
அப்பட்டமான லாஜிக் மீறல்கள், சில குறைகள் இருந்தாலும் இந்தப் படத்தை எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் இறுதி வரை ரசிக்கமுடிகிறது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருக்கலாம். எனினும் ஒரு தரமான ஆக்ஷன் த்ரில்லரை விரும்புவோர் தாராளமாக கண்டு ரசிக்கலாம் இந்த ‘வீர தீர சூரனை’.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago