எம்புரான்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கேரளாவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல்வராக விளங்கிய பி.கே.ராம்தாஸ் (சச்சின் கெடேக்கர்) இறந்துவிட, மருமகன் பாபி (விவேக் ஓபராய்), ஆட்சியைக் கைப்பற்றி மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கும் துணை போகிறார். அவரை அழித்து, ராம்தாஸின் மகனான ஜதினை (டோவினோ தாமஸ்) அரியணை ஏற்றிவிட்டுத் தலைமறைவாகிறார், ராம்தாஸின் மானசீக மாணவரான ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) என்கிற குரேஷி ஆப்ராம். இது ‘லூசிஃபர்’ படத்தின் முதல் பாகக் கதை.

ஜதின் ராம்தாஸ் தன் அப்பாவைப் போல் இல்லாமல், ஊழல் கறையைப் பூசிக்கொள்ள, அவரைப் பகடையாக்கி, அவருடன் தேர்தல் கூட்டணி அமைக்கிறார் அகில இந்தியக் கட்சி ஒன்றின் தலைவரான பால்ராஜ் பஜ்ரங் (அபிமன்யு சிங்). கேரள நலன்களுக்கு எதிரான இக்கூட்டணியை, ராம்தாஸின் மகளான பிரியா (மஞ்சு வாரியர்) எதிர்க்க, அவரை ஒழித்துக்கட்ட முயல்கிறார் பால்ராஜ்.

ஐந்து ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஸ்டீபன் நெடும்பள்ளி, தன்னை வளர்த்த கட்சிக்கும் அதன் தலைவரின் மகளுக்கும் கேரளாவுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிந்து மீண்டும் வந்து, பால்ராஜை எப்படித் தண்டித்தார்? அதற்கு சயீத் என்கிற பிருத்விராஜை எப்படிப் பயன்படுத்தினார் என்பது 2-ம் பாகக் கதை.

இந்தியாவின் மதச்சார்பின்மை ஜனநாயகத்தை அரசியல் ஆதாயத்துக்காக அழிக்க நினைக்கும் அரசியல் வியாபாரிகளை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வெளுத்துத் தீர்க்கும் மாஸ் என்டர்டெயினர் திரைக்கதை. அதை, அகண்ட அனமார்பிக் லென்ஸ் கொண்டு படம்பிடிக்கப்பட்ட காட்சியமைப்புகளின் வழியாக, ‘விஷுவல் கம் ஆக்‌ஷன் ட்ரீட்’டாக கொடுக்க முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பிருத்விராஜ். அவரது கற்பனைக்குத் தோள்கொடுக்கும் விதமாக லண்டன், எகிப்து, ஆப்பிரிக்கா, குஜராத், கேரளா என பல லொகேஷன்களில் அலைந்து திரியும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு, ஹாலிவுட்டின் ‘டேக்கிங்ஸ்’ தரத்தை மிஞ்சிச் சென்றிருக்கிறது.

இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கும் முரளி கோபி, மோகன்லால் ஏற்றுள்ள குரேஷி ஆப்ராம், ஸ்டீபன் நெடும்பள்ளி கதாபாத்திரப் பரிமாணங்களை முதல் பாகம் அளவுக்கு உணர்வு பூர்வமாக எழுதவில்லை. ஆனால், ‘சயீத்’ (பிருத்விராஜ்) கதாபாத்திரத்தின் பழிவாங்கல் உணர்வுக்குத் தீனி போட்டு, அதில் ஆப்ராம் பங்குகொள்ளும் தருணத்தை, திரைக்கதையில் பொருத்தமான இடத்தில் வைத்து அசரடித்திருக்கிறார். தனது சொந்த மாநிலத்துக்கு என்றில்லாமல், சர்வதேச அளவிலும் ஆப்ராமின் அதிரடிகள் தேவையாக இருப்பதை எழுதிய விதமும், 3-ம் பாகத்துக்கான முன்னோட்டத்தை முடித்த விதமும் மாஸ் மசாலா ரசிகர்களை சிலிர்ப்படைய வைக்கும்.

அதிக ஸ்டைலாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஊக்கம் குறையாமலும் வரும் மோகன்லால், சயீத் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்குத் திரைக்கதையில் கிடைத்திருக்கும் அபாரமான வெளியை அனுமதித்த காரணத்துக்காகவே அவரைப் பாராட்டலாம். முதல்வர் கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸும், செயற்கையாக உருவாக்கப்பட்ட மதக் கலவரத்தில் குடும்பத்தை இழக்கும் சயீத்தாக வரும் பிருத்வி ராஜும் கனகச்சிதம். பத்திரிகையாளராக வரும் இந்திரஜித், அப்பா உருவாக்கிய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நெருக்கடியைச் சமாளிக்கும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் ஸ்கோர் செய்யத் தவறவில்லை. வில்லன் அபிமன்யூ சிங்கைவிட, அதிகக் கோபத்தை வரவழைத்துவிடுகிறார் முன்னாவாக வரும் சுகந்த் கோயல்.

ஆக்‌ஷன் காட்சிகளின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன் வெட்டி வீழ்த்தியிருக்கலாம். அதேநேரம் ஸ்டன்ட் சில்வாவின் ஆக்‌ஷன் காட்சிகளின் வடிவமைப்பு மலையாள ஆக்‌ஷன் மசாலாவை, பான் இந்தியப் படமாக உணரவைக்கிறது. தீபக் தேவின் பின்னணி இசையிலும் பழுதில்லை. மக்களுக்கான அரசியலில் மதத்துக்கான தேவை அவசியமில்லாத ஆணி என்பதை ஆக்‌ஷன் மசாலாவாக சொன்ன விதத்தில் இந்த எம்புரான் கெத்தான பேர்வழி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்