பெங்களூருவில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரியும் சித்தார்த்தின் (ரவி மோகன்) காதலி கடைசி நேரத்தில் வராமல் போனதால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது. தனது நண்பரின் வற்புறுத்தலால் மருத்துவமனை ஒன்றில் அவர் விந்து தானம் செய்கிறார். இன்னொருபக்கம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறியும் ஸ்ரேயா (நித்யா மேனன்) அவரிடமிருந்து பிரிகிறார். கடும் மனவிரக்தியில் இருக்கும் அவருக்கு திடீரென குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது.
செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி மருத்துவமனை செல்லும் அவருடைய வயிற்றில் சித்தார்த்தின் உயிரணுவின் மூலம் குழந்தை உருவாகிறது. அதன் பிறகு வேலை விஷயமாக பெங்களூரு செல்லும் ஸ்ரேயா அங்கு எதேச்சையாக சித்தார்த்தை சந்திக்கிறார். தன் குழந்தைக்கு தந்தை அவர்தான் என்று தெரியாமலேயே சித்தார்த் மீது ஸ்ரேயாவுக்கு ஈர்ப்பு உருவாகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மீதிக் கதை.
'ஜென் Z' எனப்படும் இளம் தலைமுறையை ஈர்ப்பதற்கான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. படத்தில் தமிழ் சினிமாவுக்கு புதிதான பல ‘புதுமைகள்’ இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தமிழில் இதுவரை யாரும் தொடாத Gay Parenting குறித்து துணிச்சலாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது. விந்து தானம், தன்பாலின திருமணம் போன்ற விஷயங்களை துணிச்சலுடன் பேசியதையும் மனதார பாராட்டலாம்.
ஆனால், படம் தொடங்கியது முதலே ஒருவித அந்நியத்தன்மை தொற்றிக் கொண்டது போன்ற உணர்வு காட்சிகளுடன் ஒன்றவிடாமல் தடுக்கிறது. பார்வையாளர்களை உள்ளிழுத்து கொள்ளக் கூடிய எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமலே காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. கதையாக இது ஒரு நல்ல களம் தான். சிறிது மெனக்கெடலுடன் கூடிய திரைக்கதையின் மூலம் இதனை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், ஆழமில்லாத காட்சிகளால் கிடைத்த வாய்ப்பை இயக்குநர் நழுவ விட்டிருக்கிறார்.
» ‘கேம் சேஞ்சர்’ விமர்சனங்கள்: இயக்குநர் ஷங்கர் கருத்து
» ‘யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு சரியான முடிவு’ - முதல்வர் ஸ்டாலின்
படத்தின் தொடக்கத்தில் வரும் எந்தவொரு காட்சிக்கும் சரியான பின்னணியோ, பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதியவைக்கக் கூடிய எந்த ஒரு முகாந்திரமோ இல்லை. குறிப்பாக நித்யா மேனனின் மண வாழ்க்கை முறிவுக்கு சொல்லப்படும் காரணம் எல்லாம் அரதப் பழைய டெக்னிக். அந்த காட்சி தொடங்கும்போதே இப்படித்தான் நடக்கும் என்று நாம் யூகித்து விடலாம். அதே போல திடீரென குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு ஏற்படுவதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை. ஒரு குழந்தையை மடியில் வைத்த உடனேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வருவதெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
இது போன்ற படங்களின் உயிர்நாடியே அதன் எமோஷனல் காட்சிகள் தான். ஆனால் அது இந்த படத்தில் முற்றிலுமாக கைகொடுக்கவே இல்லை. காட்சிகள் எந்தவித ஆழமும் இல்லாமல் மேம்போக்காக எழுதப்பட்டதால் எமோஷனலுக்காக வைக்கப்பட்ட காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் அதிலும் ரவியின் பழைய காதலியான டி.ஜே.பானு வந்தபிறகு வரும் காட்சிகளும், ரவிக்கும் நித்யா மேனனின் மகனாக வரும் சிறுவனுக்கும் இடையிலான காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
படம் முழுக்க நெருடிக் கொண்டே இருந்த ஒரு விஷயம் கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் பாரபட்சமின்றி குடித்துக் கொண்டே இருப்பதுதான். ஹீரோ, ஹீரோயின், ஹீரோ அப்பா, நண்பர்கள், சைடு கேரக்டர்கள், ஏன் நிச்சயதார்த்தத்துக்கு வந்த விருந்தினர்கள் கூட கும்பலாக குடித்து விட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். காட்சிக்கு தேவையென்றால் கூட பரவாயில்லை. ஆனால் குடிப்பதை ‘நார்மலைஸ்’ செய்வது போல வேண்டுமென்றே வைக்கப்பட்டது உறுத்தல்.
ஹீரோவாக ரவி குறையில்லாத நடிப்பு. ஹீரோவை விட ஒரு படி மேலாக முக்கியவத்துவம் கொண்ட கதாபாத்திரம் நித்யாவுக்கு. அதனை திறம்பட கையாண்டு மனதில் நிற்கிறார். டி.ஜே.பானுவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். யோகி பாபுவின் கவுன்டர்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், முந்தைய படங்களைப் போல எரிச்சல் ஊட்டாதது ஆறுதல். வினய், லால், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் நிறைவான நடிப்பை தந்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘என்னை இழு இழு இழுக்குதடி’ பாடல் மட்டும் கேட்கும் ரகம். படத்தின் இறுதியில் வரும் ஒரு ஆங்கிலப் பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சொல்லும்படி இல்லை.
மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதற்கேற்ற சுவாரஸ்யமான திரைக்கதையை எழுத நேரம் எடுத்துக் கொள்ளாததால் இந்த ‘காதலிக்க நேரமில்லை’ வெறும் ‘புதுமையான’ முயற்சி என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago