‘விடுதலை' முதல் பாகத்தில் கடைநிலைக் காவலர் குமரேசனால் (சூரி) கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), மலைக்காட்டு வழியாக போலீஸ் படை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் பெருமாள் வாத்தியார், தன் காதல் கதையையும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, தான் உருவெடுத்த கதையையும் சொல்கிறார். இன்னொரு புறம் அவர் கைதை வைத்து அதிகாரவர்க்கம் வேறுவிதமாகத் திட்டம் போடுகிறது. அதே நேரத்தில் பெருமாள் வாத்தியாரை மீட்க அவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸுடன் மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் கதை.
'விடுதலை' முதல் பாகத்தில் மலைக் கிராமத்தில் சுரங்கம் தோண்டும் கார்ப்பரேட்களின் பின்னணியில் அரசியல், அதிகாரவர்க்கம் இருப்பதையும், தேடுதல் வேட்டை என்கிற பெயரில் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் அரச பயங்கரவாதத்தையும் காட்சிப்படுத்தியிருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் இதன் பின்னணியில் மக்கள் தலைவராக உயரும் விஜய் சேதுபதியின் கதை மொழிக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
சூரியின் கடித ‘பிளாஷ்பேக்’குக்குள் விஜய் சேதுபதியின் ‘பிளாஷ்பேக்’காக கதையை நகர்த்தியிருக்கும் விதம் சபாஷ் போட வைக்கிறது. பண்ணையார்களுக்கு அடிமைகளாக இருக்கும் கூலித் தொழிலாளர்களையும் அவர்கள் வீட்டுப் பெண்களை தங்கள் உடைமையாகக் காட்டியிருக்கும் காட்சியில் தொடங்கி முதலாளித்துவத்துடன் அதிகார வர்க்கம் கூட்டணி அமைத்து எளிய மக்களை வேட்டையாடும் காட்சிகளை மிகையில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இரவில் வழி தெரியாமல் சுற்றும் போலீஸாருக்கு வழி சொல்லியபடியே விஜய் சேதுபதி தன் கதையை சொல்வது மிகையாகத் தெரிந்தாலும், சுவாரஸியமாகவே இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழும் போராளிகள் திரையரங்கில் சந்தித்துக் கொள்வது, சங்கேத மொழிகளில் தகவல்கள் பரிமாறிக்கொள்வது, பீரியட் படத்துக்குரிய அம்சங்களுக்கேற்ப காட்சிகள் வைத்திருப்பதில் இயக்குநர், கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. போலீஸ்காரர்களுக்குள் நிலவும் ஈகோவை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பது பதைபதைக்க வைக்கிறது
» படம் பிடிக்காமல் திரும்பினால் நேரத்துக்கு ஏற்ப கட்டணம் வாபஸ்: பிவிஆர் ஐநாக்ஸ் புது திட்டம்
» ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சாதாரண வாத்தியாராக இருக்கும் விஜய் சேதுபதி, கே.கே. (கிஷோர்) வழிகாட்டுதலில் தொழிலாளர் வர்க்கத்துக்காகப் போராடும் தோழராக மாறுவதில் தர்க்கம் இருக்கிறது. ஆனால், கிஷோரோடு முரண்பட்டு, அழித்தொழிக்கும் போராளியாக உருவெடுப்பதில் நியாயமான காட்சிகள் இல்லாதது பெரும்குறை. முதல் பாகம் முழுவதும் விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருப்பது சோர்வடைய செய்துவிடுகிறது. குறிப்பாக சாதிய, வர்க்கப் பேதம், முதலாளித்துவம், சிவப்பு, கருப்பு அரசியல் குறித்து தொடர்ந்து பேசுவது லெக்சர் பாணியிலேயே இருக்கிறது. அதே நேரத்தில் வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை; தத்துவம்தான் தேவை போன்ற சுளீர் வசனங்கள் ரசிக்க வைக்கவும் தவறவில்லை. முதல் பாகத்தில் நடைபெற்ற சம்பவங்களைக் கொஞ்சம் தொட்டு போயிருக்கலாம். இயக்குநர் அதை அப்படியே விட்டுவிட்டது ஏமாற்றமே.
பெருமாள் வாத்தியாராக அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆசிரியர், தோழர், போராளி என அநீதிகளுக்கு எதிராகக் களமாடியிருக்கிறார். முதல் பாகத்தைப் போல சூரிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் கடைசி அரை மணி நேரத்தில் கவனம் ஈர்க்கிறார். குறிஞ்சி மலர் போல நாயகி மஞ்சு வாரியாரின் பாத்திரப் படைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணியம் சார்ந்தும் கொள்கை சார்ந்தும் பேசுவது அழகு. அந்தக் காலத்தில் தன்னலமற்று வாழ்ந்த பொதுவுடமை தலைவரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கிஷோர். மோசமான குணம் கொண்ட போலீஸாக சேத்தன், அதிகார வர்க்கத்தை கண்முன் கொண்டு வரும் ராஜீவ் மேனன். போலீஸ் அதிகாரிகள் கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ், வாத்தியார் ஆயுதம் தூக்கக் காரணமாக இருக்கும் கென் கருணாஸ், பண்ணையார் போஸ் வெங்கட், வங்காள தோழர் அனுராக் காஷ்யப், அமைச்சர் இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் கவர்கிறார்கள்.
இளையராஜா இசையில் இரண்டு பாடல்களும் ஒத்தடம் போல் இருக்கின்றன. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு மலைக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. நீளமான காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் கத்திரிப் போட்டிருக்கலாம்.
'விடுதலை 2' - வெற்றி மாறனின் தத்துவார்த்த அரசியலை ஆழமாகப் பேசுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago