திரையில் தோன்றிய முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் படங்கள் வெகு சில மட்டுமே உள்ளன. இயக்குநர் சீன் பேக்கரின் ‘அனோரா’ அத்தகைய படம்தான். 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 21, 2024 அன்று திரையிடப்பட்டு, பெரும் மதிப்புக்குரிய பாம் டி'ஓரை வென்றெடுத்தது.
நேஷனல் ஃபோர்டு ஆஃப் ரிவியூ மற்றும் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆகிய இரண்டிலும் 2024-ஆம் ஆண்டின் சிறந்த முதல் 10 படங்களில் ஒன்றாக ‘அனோரா’ திகழ்கிறது. மேலும் 82-வது கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து பகுப்புகளில் பரிந்துரைக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள திரை ஆர்வலர்களின் பாராட்டுகளையும் இத்திரைப்படம் பெற்று வருகிறது.
ஆனி என்கிற அனோரா (மிக்கி மேடிசன்) ஒரு நவீன பாரில் ஸ்ட்ரிப் டான்ஸராகப் பணிபுரிகிறாள். அவளுடைய வேலை நடனம் என்றாலும் பாலியல் தொழிலாளியாகவும் இருக்கிறாள். ஆனியின் வசீகரமும், இளமையும், அவளின் நுட்பமான பேச்சுத் திறனும், வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்ப்பதால் அவளுக்கு அவ்விடுதியில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது.
ஒருமுறை பணக்கார ரஷ்ய இளைஞன் ஒருவன் தனக்கு ரஷ்ய மொழி தெரிந்த பெண் வேண்டும் என்று கூறவே, ஆனியை அனுப்புகிறார் அந்த விடுதியின் உரிமையாளர். எதிர்பாராத திருப்பங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனியின் வாழ்க்கை அந்தப் புள்ளியிலிருந்து வேகம் அடைகிறது.
» ராம் சரண் உடன் நடிக்காதது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
» அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை: விக்னேஷ் சிவன் விளக்கம்
வான்யா என்று அழைக்கப்படும் இவான் (மார்க் எய்டெல்ஷ்ச்டென்) ஆனியிடம் ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் பேச, அவள் அவனிடம் ரஷ்ய மொழியில் உரையாடுகிறாள். மொழியால் சந்தித்து விழியால் ஈர்க்கப்பட்ட அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இணக்கம் ஏற்பட, வான்யா அவளைத் தன் வீட்டுக்கு அழைக்கிறான்.
ப்ரூக்ளின் நகரில் மிகச் சிறிய வீட்டில் வசிக்கும் ஆனிக்குத் தன் வாழ்க்கையைப் பற்றிப் பெரிய புகார்கள் இல்லை. அவளுடைய துடிப்பும், உயிரோட்டமும், விட்டேத்தியான மனநிலையும், வெடிச் சிரிப்பும், தன்னையும் தன் உடலையும் நேசிக்கும் விதமும் அவளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது. தான் செல்லும் இடங்களில் சிரிப்பைச் சிந்திச் செல்லும் உற்சாக நீரூற்றாக ஆனி இருக்கிறாள்.
வான்யா முதல் பார்வையிலேயே அவளிடம் வீழ்கிறான். அவளுடன் இணையும் ஒவ்வொரு முறையும் அவன் தன்னைப் புதியவனாகவும் பெரியவனாகவும் உணர்கிறான். மேலும் மேலும் அவளை விழைகிறான். வான்யாவின் அழைப்புக்கு இணங்கி அவனை சந்திக்க வருகிறாள் ஆனி. அவனது அதி நவீன மாளிகை போன்ற வீட்டைப் பார்த்து பிரமித்துப் போகிறாள். அதிலும் குறிப்பாக அவனுடைய படுக்கையறையில் உள்ள மிகப் பெரிய கண்ணாடி ஜன்னலிலிருந்து தெரியும் கடல் காட்சி அவள் மனதைக் கவர்கிறது.
அதீதச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட வான்யா அமெரிக்காவின் உல்லாச வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறான். வேண்டிய அளவு பணம் இருக்கிறது. தந்தையின் அமெரிக்க வீடு கேட்பாரின்றி இருக்கவே, சில நாட்கள் அங்கே தங்கி வாழ்க்கையின் வசந்த காலமான இளமையை மது, போதை மற்றும் மனதுக்குப் பிடித்தமான பெண்ணான ஆனியுடன் கழிக்க முடிவு செய்கிறான். வான்கா அவளை ஒரு நடனப் பெண்ணாக மட்டும் நினைக்காமல் உற்ற தோழி போலப் பாவித்து, உற்சாகத்துடன் புது வருட கொண்டாட்டத்துக்கு அழைக்கிறான். தன்னுடைய நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துகிறான்.
ஆனியை வான்யா சந்திக்கும்போதெல்லாம் அவள்மீது அதீத மோகம் கொள்கிறான். தீராக் காதலின் பித்தேறிய ஒரு தருணத்தில், தன்னுடைய பிரியமான காதலியாக ஒரு வார காலம் தங்கிவிடுமாறு ஆனியிடம் பேரம் பேசுகிறான். அவன் கூறிய தொகை சற்று அதிகம் என்று ஆனி சொல்லவே, உனக்கு இதைவிட அதிகம் தரலாம் என்று அவன் பதிலளிக்கிறான். அவர்களின் உடல் நெருக்கம் முதிர்வடைந்து மன நெருக்கமான தருணம் இதுதான்.
அந்த ஒரு வார காலத்தில் ஆனியும் வான்யாவும் நிஜக் காதலர்களை மிஞ்சும் விதமாக மகிழ்வுடன் கொண்டாடி ஊர் சுற்றுகிறார்கள், மனதுக்குப் பிடித்த இடங்களுக்குப் பறக்கிறார்கள், விதவிதமான மது வகைகளை அருந்தி, ஹூக்காக்களையும் புகைக்கிறார்கள். நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் கால நேரம் மறந்து நீரில் மிதந்து மகிழ்கிறார்கள். எல்லாவற்றையும் விட நினைத்த போதெல்லாம் கொஞ்சி மகிழ்ந்து கலவியில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கம் என்பது இதுதானோ என்று ஆனிக்கு தோன்றிய நாளில் வான்யா அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான்.
ஆனிக்கு முதலில் அவனுடைய விளையாட்டுக்களில் இதுவுமொன்று என்று நினைத்து அவனைப் பகடி செய்கிறாள். ஆனால், அவன் உண்மையில் அவளைத் திருமணம் செய்கிறேன் என்று மீண்டும் சொன்னதும் அவளால் மறுக்க முடியவில்லை. நினைப்பதையெல்லாம் உடனுக்குடன் நடத்திக் காட்டும் வேகமான மனோபாவம் உடைய வான்யா, அவளை லாஸ் வேகாஸுக்கு அழைத்துச் சென்று மோதிரம் மாற்றி சட்டப்படி திருமணம் செய்து கொள்கிறான். இருவரின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லாமல் போகிறது. தனது விடுதிக்கு வந்து அனைவரிடமும் விடைபெறுகிறாள் ஆனி. அவளுடைய தோழியர் சிலர் வாழ்த்தியும், எதிரிகள் அவளைப் பார்த்து பொறாமைப்படுவதையும் ரசித்தபடி அங்கிருந்து கிளம்புகிறாள் ஆனி.
வான்யாவைத் திருமணம் புரிந்த மகிழ்ச்சியைவிட இனி ஒருபோதும் அந்த நரகக் குழிக்குத் தான் திரும்பி வரப்போவதில்லை என்பதே அவளை விடுதலை உணர்வுக்குள்ளாக்குகிறது. இரவெது பகலெது என்று தெரியாமல் இருவரும் பிணைந்து கிடந்த ஒரு மதியப் பொழுதில், வான்யாவுக்கு பிரச்சினை, அவனுடைய அமெரிக்கப் பாதுகாவலாரான டொரஸ் (கரேன் கராகுலன்) மூலமாக வருகிறது. டொரஸ் அந்த ஊரில் மதிப்பு மிகுந்த ஒரு பாதிரியார்.
ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின் பெற்றோருக்குத் தங்கள் மகன் ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்துள்ளான் என்பது பேரதிர்ச்சியாக இருக்கவே, மிகுந்த கோபத்துடன் உடனடியாக அந்தத் திருமணத்தை ரத்து செய்துவிடும்படி டொரஸிடம் கூறிகிறார்கள். தன்னை நம்பி அனுப்பப்பட்ட இளைஞன் தனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டான், அதுவும் ஒரு பாலியல் தொழில் புரியும் ஒருத்தியை என்பதைக் கேட்டு அவரும் ஆத்திரம் அடைகிறார். இரண்டு அடியாட்களை (கார்னிக் மற்றும் இகார்) முதலில் வான்யாவின் வீட்டுக்கு அனுப்பி, அவர் தன்னுடைய அவசர வேலைகளை முடித்துவிட்டுத் தனது காரில் விரைகிறார்.
தன் வீட்டு வாசலில் கார்மிக்கைப் பார்த்தவுடன் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த வான்யா, அவர்களை உள்ளே அனுமதிக்காமல் இருக்கிறான். மிரட்டியும் கெஞ்சியும் கதவைத் திறந்து உள்ளே அவர்கள் நுழைகிறார்கள். வான்யாவிடம் மரியாதையாகத் தங்களுடன் கிளம்பி வரும்படி சொல்லவே, அவனுக்குக் கோபம் ஏற்பட்டு அவர்களை வெளியேறும்படி கத்தத் தொடங்குகிறான்.
என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஆனி, அவர்கள் அவளை ‘வேசி’ என்று சொல்வதைக் கேட்டு கோபம் அடைகிறாள். இந்த நால்வருக்குள் ஏற்பட்ட விவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் வான்யாவை அவர்கள் பிடிக்க முயலவே, அவன் கிடைத்த உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆனி அவனை எவ்வளவு அழைத்தும் அவன் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் எடுக்கிறான். இப்போது அந்த இருவரும் ஆனியை பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கிறார்கள். வான்யா தப்பித்ததை அறிந்து அங்கு வேகமாக வந்து சேர்கிறார் டொரஸ்.
வான்யா எங்கு சென்றான்? அவனை இந்த நால்வர் கூட்டம் கண்டடைந்தார்களா? வரம் போலக் கிடைத்த செல்வச் செழிப்பான வாழ்க்கை கண்முன்னே கண்ணாடிச் சுவரைப் போல ஒரே நொடியில் உடைந்து நொறுங்கிப் போன அனோராவின் வாழ்க்கை அதன் பின் என்னவாயிற்று? அடியாட்களில் ஒருவனான இகாருக்கும் அவளுக்கும் ஏற்பட்ட பகை இறுதியில் எப்படி மாறியது? - இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லும் திரைக்கதையாக படத்தின் பின்பாதி அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் எரோடிகா எனும் வகைமையில் தொடங்கி, அதன்பின் நகைச்சுவையாக மாறி, இறுதியில் துயரச்சுவையில் முடியும் படமாக அனோரா உள்ளதால், ரசிகர்கள் ஒரு ரோலர்கோஸ்டரில் பயணித்ததைப் போன்ற அனுபவத்துக்குள்ளாகிறார்கள்.
குறிப்பாக, வான்யா வீட்டை விட்டு ஓடியதும் அவர்களுக்கும் ஆனிக்கும் நடக்கும் அடிதடி சண்டையையும், நள்ளிரவு வரை அவர்கள் நால்வரும் வான்யாவைத் தேடித் திரியும் காட்சிகளையும் அற்புதமாகக் கையாண்டிருப்பார் இயக்குநர். இத்தகைய மாயத்தைத் திரையில் நிகழ்த்திய சீன் பேக்கர் இக்கதையை எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் படத்தொகுப்பையும் செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவும், துள்ளலான இசையும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கிறது. ஒளிப்பதிவில், குறிப்பாக ஆனி, வான்யாவின் வீட்டினுள் நுழைகையில், அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நாம் உணரும்விதமாக அவளைத் தொடர்ந்து வரும் கேமரா காட்சிப்படுத்துகிறது. அவள் அந்த வீட்டைப் பார்க்கும் இடங்களுக்கெல்லாம் கேமராக் கண் நுழைகிறது. எங்கு லாங் ஷாட் தேவையோ அங்கெல்லாம் கேமரா திசை மாறுகிறது. நாம் காணும் காட்சிகளைத் தொய்வில்லாமல் மிகத் துல்லியமாக படம் பிடித்த விதம் அருமை.
மேலும், நியூயார்க் நகரின் குளிரில் அவர்கள் நால்வரும் வான்யாவை தேடும் பயணத்தில், இரவின் எழிலுடன் பனியின் அடர்த்தியையும் ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களுக்கு குளிர்ச்சியை கடத்துகிறது. எடிட்டிங் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம். உடல் நெருக்கத்தைக் காண்பித்த காட்சிகளை அசூயையாக்காமல், அதைச் சரியான விதத்தில் அணுகியிருப்பது படத்துக்குப் பொருத்தமாக உள்ளது.
சிறிதளவு பிசகினாலும் ஆபாசமாகிவிடும் நிலையில், தான் சொல்ல வரும் கதைக்கான சம்பவங்களாக இயக்குநர் அவற்றை முன் நிறுத்தியிருக்கிறார். சீன் பேக்கர் தன்னுடைய முந்தைய படங்களிலும் மனித நேயத்துடன் கதை சொல்பவராக அறியப்பட்டு இருக்கிறார். பாலியல் தொழிலாளிகளின் துயரத்தையும், அவர்களது வாழ்க்கையின் நிலையாமையையும் இப்படியொரு திரைக்கதையில் சொல்ல முடியும் என்பதே விமர்சகர்களையும் பாராட்ட வைத்துள்ளது.
தனக்குத் தேவையானபோது தனது உடலை மட்டுமல்லாமல் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையே கேலிக்குரியதாக்கிவிட்ட வான்யாவின் செயலால் அனோரா மட்டுமல்ல, திருமண பந்தத்தில் இருந்தாலும் கணவர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைக்கு உள்ளாகும் பல பெண்களும் பாதிப்படைகிறார்கள்.
அனோரா, வான்யா மற்றும் டொரெஸ் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் மோதல்களின் மூலம், சமூகத்தின் வர்க்க பேதம், மதச் சார்பு உள்ளிட்ட பல வேற்றுமைகளை அங்கதமாகச் சொல்கிறார் இயக்குநர். புனிதராகக் கருதப்படும் திருமணம் மூலம் இணையர்களை சேர்த்து வைக்கும் பாதிரியார், அதற்கு நேரதிரான வேலையைச் செய்கிறார்.
இப்படத்தில் பணம் எனும் மாய அருவி ஊடுருவாத இடமேயில்லை - விலை உயர்ந்த மதுபானக் கடை முதல் உயர்ந்தோங்கிய நீதிமன்றம் வரை தங்குதடையின்றி அது பாய்ந்தோடுகிறது. அதலபாதாளத்துக்குள் அடித்துச் செல்லப்படுவது சமூக நீதியும், மக்களின் நம்பிக்கையும்தான்.
நாம் யார் ஒருவரை எதிரியாக நினைக்கிறோமா, அவர் நம் பார்வையில் அப்படித் தென்படுவாரே தவிர, நமக்கு அப்போதைக்குக் கோபத்தை ஏற்படுத்தினாலும் என்றென்றும் நன்மை செய்பவராகவே இருப்பார். அப்படியான மனிதர்களால்தான் வாழ்க்கை நீரோட்டமாக இருக்கிறது. அடியாளாக இருந்தாலும் ஆரம்பம் முதலே அனோராவைத் தன்னில் ஒருத்தியாகத் தான் பார்க்கிறான் இகார்.
படத்தின் இறுதிக் காட்சியில் அவர்களுக்குள் நடக்கும் சம்பவம் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் ஆதித் துயரைப் பேசுகிறது. மெளனத்தில் உறையும் அக்காட்சியின் ஆழமும் நுட்பமும் பார்வையாளர்களை அது திரைப்படம் என்பதையே மறக்க வைத்து கண்ணில் நீர்துளிர்க்கச் செய்துவிடுகிறது. மெல்லிய இழைகளுடனும், நுட்பமான உள்ளடுக்குகளாலும் இத்திரைப்படம் மீண்டுமொரு முறை நம்மைப் பார்க்கத் தூண்டுகிறது.
இந்த ஆண்டு வெளியான மிகச் சிறந்த திரைப்படமிது என்றால் மிகையில்லை. ‘கருத்து சொல்கிறேன்’ என்று போலியாக அல்லாமல், அசல் தன்மையுடன், சமூகத்தின் முன் ஏனையோரால் கைவிடப்பட்ட, மரியாதை இழந்த, எப்போதும் இவர்கள் இப்படித்தான் என முன்முடிவுகளுக்கு உட்படுத்தப்பட நபர்களைக் கரம் பிடித்து அவர்களின் கண்ணீருடன் சிறிதளவு புன்னகையையும் சேர்க்கிறாள் அனோரா.
அழகு என்பது புறத் தோற்றம் மட்டும்தானா? பெண் என்பவள் மெல்லிய தோல் போர்த்தப்பட்ட வெறும் சதையா? தனது அன்பின் மிகுதிக்கும், அறிவுத் திறனுக்குமான அடையாளத்தை பெண் எப்போது பெறுகிறாளோ அப்போதுதான் பேரழகி ஆகிறாள். எப்போதாவது நாம் சந்திக்க நேரும் அனோராவுடன் நம்மால் நின்று நிதானமாக உரையாட முடியாமல் போனால் கூட பரவாயில்லை, அவளைக் காயப்படுத்தாமல் கண்ணியமாக நடத்துவோம்.
இயக்கம் - சீன் பேக்கர்
தயாரிப்பு - அலெக்ஸ் கோகோ, சமந்தா குவான் மற்றும் சீன் பேக்கர்
நடிப்பு: மிக்கி மேடிசன், மார்க் எய்டெலெஷ்டைன், யூரா போரிசோவ். கரேன் கராகுலியன் உள்ளிட்ட பலர்
படத்தொகுப்பு - சீன் பேக்கர்
> முந்தைய உலகத் திரை அலசல்: The Room Next Door: மரணத்தின் நிறம்
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago