எதிர்பார்ப்புகளை எகிற வைத்து ஏமாற்றம் கொடுக்கும் படங்கள் எல்லா வருடங்களும் டிசம்பர் மழையை போல தவறாமல் ஆஜராகத்தான் செய்கின்றன. ஆனால், பட ‘புரமோஷன்’களில் காட்டும் மெனக்கெடலையும், ‘சக்சஸ் மீட் பாஸ்’ நம்பிக்கையையும், திரைக்கதையில் காட்டியிருந்தால் நேரம் மிச்சம்; தாக்கம் நிச்சயம். இருபக்க கூர் தீட்டிய கத்தியான சமூக வலைதளங்கள் படத்தின் மொத்த ஹைப்பையும் முதல் ஷோவிலே காலி செய்துவிடுகின்றன. சிறப்பாக இருந்தால் அதுவே புரமோஷனாக மாறியும் விடுகிறது. அந்த வகையில் ‘ஓவர் ஹைப்’பால் சோதித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
லால் சலாம்: சமகால சூழலின் ‘வெறுப்பு அழுக்கை’ நீக்கும் வகையில் மத நல்லிணக்கத்தை கையிலெடுத்த இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள். ’ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போனது போல திரைக்கதையில் சுவாரஸ்யமும் காணாதது சோகம். கிரிக்கெட் படமா, தேர்த் திருவிழா படமா என்ற குழப்பம், விஷ்ணு விஷால் - விக்ராந்த் மோதலுக்கான காரணம் வலுவில்லாதது, தொடர்ச்சியின்மை படத்தின் சிக்கல்கள். ‘கேமியோ’ என்றால் முக்கால்வாசி படத்தில் இடம்பெறுவது என்ற புது விளக்கம் கொடுத்த படம். ரூ.150 டிக்கெட்டுக்கு ‘அன்பாலனே’ பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் - தேவா நிவர்த்தி செய்தனர். அவர்களுக்கு நன்றி.
ரத்னம்: ரத்தத்தால் ஊறிய இந்த ரத்னத்தை விற்க ஹரியும் - விஷாலும் படாத பாடுபட்டனர். 2015-களுக்குப் பின் காமெடிக்கான தனி ட்ராக் காலாவதியாகிவிட்டதை விஷாலாவது, இயக்குநர் ஹரியிடம் சொல்லியிருக்கலாம். சிரிக்க வைக்க போராடும் யோகிபாபுவின் கஷ்டத்தை உணர்ந்து சிரித்தனர் பார்வையாளர்கள் (மனிதம் உணர்ந்த தருணம்). ரவுடி கும்பலை விஷால் துரத்துவது, விஷாலை ரவுடி கும்பல் துரத்துவது ‘ரிபீட்’ காட்சிகள் ஒருபுறம், ரவுடித்தனம் மூலம் நன்மை செய்யும் சமுத்திரகனி, பிராமணர் வீட்டு பையனாக விஷாலின் ட்விஸ்ட், இதற்கிடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் பிரியா பவானி சங்கர்… ஓரளவுக்கு தான் மனிதம் என்பதையும், எல்லாவற்றையும் பொறுத்தருள பார்வையாளர்கள் தெரசாக்கள் கிடையாது என்பதையும் படக்குழுவினர் உணர்வது நலம்.
ரோமியோ: 2008-ல் வெளியான ‘ரப் னே பனாதி ஜோடி’ இந்திப் படத்தின் கருவை எடுத்து 2024-ல் பட்டி டிங்கரிங் பார்த்து, 90ஸ் கிட்ஸ் நாயகன் vs 2கே கிட்ஸ் நாயகியாக மாற்றியது பார்வையாளர்களை முட்டாளாக்கும் நம்பிக்கை. ‘ரோமியோ’வை ‘அன்பே சிவம்’ ஆக்கிவிடாதீர்கள் என வருந்திய விஜய் ஆண்டனி, ‘அன்பே சிவம்’ கோரும் அன்பை பார்வையாளர்கள் மீது வைத்திருந்தால், ‘ரோமியோ’வே உருவாகியிருக்காது. .சினிமாவில் கதாநாயகியாக சாதிக்க துடிக்கும் லீலா கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம். விஜய் ஆண்டனியின் தொலைந்து போன தங்கையின் எமோஷனல் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தேவையற்ற காட்சிகளாகவே காண்போரை அலுப்பூட்டியது.
» ‘எல்சியு’வில் நானா? - நடிகர் மாதவன் பதில்
» “யாரால் இப்படி செய்ய முடியும்?” - ‘புஷ்பா2’ அல்லு அர்ஜுனை புகழ்ந்த ராஷ்மிகா
இந்தியன் 2: ‘சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா’ வசனம் தொடங்கி, வர்ம கலையை பார்வையாளர்கள் மீது செலுத்தியது வரை எல்லாமே அபத்தம். மீம் கன்டென்டுகளுக்காகவே ஷங்கர் - கமலை வைத்து படம் இயக்கியதற்கு சோசியல் மீடியாவினர் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளனர். இன்னும் திருநங்கைகளையும், வட சென்னை மக்களையும், தூய்மைப் பணியாளர்களையும், கேவலமாக சித்தரிக்கும் ‘அழுக்கு’ ஷங்கரிடமிருந்து நீங்கியபாடில்லை. லாஜிக் இன்மை, அபத்தமான வசனங்கள், இஷ்டத்துக்கு நகரும் திரைக்கதை, இந்தியன் தாத்தா மேக்அப் போல ஒட்டாத எமோஷனல் காட்சிகள் என ’இந்தியன்’ முதல் பாகத்தின் ஃபர்னிச்சரை தூள் தூளாக்கினார்கள். இந்த ஆண்டின் ட்ரோல் மெட்டிரியல் திரைப்படம் ‘இந்தியன் 2’.
ஸ்டார்: பெரும் நம்பிக்கையை விதைத்த ட்ரெய்லர் மூலம் திரையரங்குக்கு வந்தார்கள் பார்வையாளர்கள். படத்தின் சில ஐடியாக்கள் ரசிக்க வைத்தன. காதல், திருமணத்துக்கு பின்னான கதைக்கு தொடர்பில்லாத காட்சிகள் பெரும் சோதனை. கவின் நடிப்பு கவனிக்க வைத்தது. இரண்டாம் பாதியில் அலுப்பூட்டும் காட்சிகள் நிறையவே இருந்தன. ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு போதுமானதாக இருந்தாலும் அதீதி போஹன்கரின் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருந்தது.
பிரதர்: பெரிய எதிர்பார்ப்பையோ, ஹைப்பையோ கொடுக்காததால் ‘பிரதர்’ படம் மீதான எதிர்மறை விமர்சனம் பரவலாக அறியப்படவில்லை. படக்குழு செய்த நற்காரியங்களில் இது ஒன்று. ஆனால், எம்.ராஜேஷ் மீது நம்பிக்கை வைத்த சிலருக்கு அது நல்ல விஷயமில்லை.மிகவும் அரதப்பழசான குடும்ப சென்டிமென்ட் கதையை 2024-லும் படமாக்கி வெற்றி பெற செய்துவிடலாம் என்ற எம்.ராஜேஷின் துணிச்சல் பாராட்ட வேண்டியது.
தன்னால் பிரிந்த அக்கா குடும்பத்தை சேர்க்க போராடும் தம்பியின் கதை. தீபாவளி போனஸாக விடிவி கணேஷின் டார்ச்சர் வேறு. மெனக்கெடலே இல்லாத காட்சிகள், தட்டையான வசனங்கள், சுவாரஸ்யம் கொடுக்காத திரைக்கதை என சொல்லிக்கொண்டே போகலாம். தீபாவளிக்கு ‘பிரதர்’ படத்தை தேர்வு செய்து பார்த்தவர்களுக்கு ‘பிரதர்’ படக்குழு நஷ்ட ஈடு வழங்குவதே நியாயம்.
ப்ளடி பெக்கர்: ‘யாசகர்’ ஆக கவினின் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூடுதலாக இயக்குநர் நெல்சன் தயாரிப்பு என்ற டேக். டார்க் காமெடி + கருத்து + எமோஷனல் மூன்றையும் கலந்தது ஓகே. ஆனால் அவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்தது தான் சிக்கல். சிரிப்பு வரும் இடத்தில் எமோஷனும், கருத்து சொல்லும் இடத்தில் சிரிப்பும் வந்தது பார்வையாளர்களின் தவறில்லை.
மாளிகைக்குள் நடக்கும் சொத்து தகராறில் பிச்சைக்காரன் ஒருவர் நுழைந்து ஆட்டத்தை மாற்றினால் என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யமான லைனை கேட்டு நெல்சன் ஓகே சொல்லியிருப்பார் போல. முழு படத்தையும் பார்த்த பின் அவரது ரியாக்ஷன்..? சில இடங்களை தவிர்த்து கைகொடுக்காத காமெடிகளும், ஒரே வீட்டில் ரீபிட்டான காட்சிகளும், உணர்வுகளை தூண்டும் திணிப்புகளும் சொதப்பியது.
கங்குவா: ‘ஆடியோ லான்ச்’ பாஸை தொலைத்து விட்ட ரசிகர்களுக்கு, இனியும் அதை தேட வேண்டியதில்லை என்ற நிம்மதி உண்டு. படத்தின் முதல் அரை மணிநேரத்துக்கு மேலான காட்சிகள் அவுட்டேட். பிரமாண்ட செட், உடையலங்காரம், போர் காட்சிகள் உள்ளிட்ட மெனக்கெடல் படத்தின் மையமான ‘எமோஷன்’ ஒட்டாததால் வீண்டிக்கப்பட்டது. சூர்யாவின் ஹைபிச் சத்தமும், தேவிஸ்ரீ பிரசாத்தின் இரைச்சலும் பெரிய மைனஸ். முன்ஜென்ம கதையையும், தற்போதைய நிகழ்வையும் இணைக்கும் ஒன்லைன் கொடுத்த சுவாரஸ்யத்தை படம் கொடுக்கத்தவறியதும், படக்குழு கொடுத்த ‘ஓவர் ஹைப்’பை சுமந்து சென்ற பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கிட்டியதும், படத்தின் அதீத எதிர்விமர்சனங்களுக்கு காரணம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago