எம்.ஜி.ஆருக்கு ஏன் ‘பெற்றால்தான் பிள்ளையா’ பிடிக்கும்?

By செ. ஏக்நாத்ராஜ்

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அவர் நடித்திருக்கும் அனைத்துப் படங்களுமே பிடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்து அவருக்கு அதிகம் பிடித்த படங்களில் ஒன்று ‘பெற்றால்தான் பிள்ளையா’. இதை அவரே சொல்லியிருக்கிறார். சார்லி சாப்ளினின் ‘த கிட்’ படப்பாதிப்பில் உருவான படம் இது.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் சேர்த்து எடுத்தார்கள். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, தங்கவேலு என பலர் நடித்தனர். திரைக்கதை வசனத்தை ஆரூர் தாஸ் எழுதினார்.

இந்தக் கதையை முதலில் சிவாஜி கணேசனிடம்தான் சொன்னார் ஆரூர் தாஸ். அவர் ஆர்வம் காட்டாததால் எம்.ஜி.ஆரிடம் சொன்னார். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்தார். பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். வாலி பாடல்களை எழுதினார்.

கிராமத்தைச் சேர்ந்த சவுகார் ஜானகியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் பணக்காரரான அசோகன். அவர்களுக்கு ஆண் குழந்தை இருக்கிறது. இருவரையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்துவிடும் அசோகன், அங்கு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கைக்குழந்தையுடன் வந்து நியாயம் கேட்கும் சவுகார் ஜானகியை விரட்டிவிடும் அசோகன், ‘கடலில் விழுந்து செத்து போ’ என்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போன அவர், குழந்தையை கோயிலில் போட்டுவிட்டு தற்கொலைக்கு முயல்கிறார்.

குழந்தை எம்.ஜி.ஆர். கண்ணில் படுகிறது. எடுத்து வளர்க்கிறார். தற்கொலைக்கு முயலும் சவுகார் ஜானகி காப்பாற்றப்படுகிறார். மகனைத் தேடும் அவருக்கு தங்கவேலு அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை ஒரு கும்பல் பணத்துக்காக ஏமாற்றுகிறது என்பது புரிகிறது அசோகனுக்கு. காரில் செல்லும் அவர் விபத்தில் காலை இழக்கிறார். சவுகார் ஜானகியை மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

பிறகு எம்.ஜி.ஆரிடம் இருப்பது தனது குழந்தை என்று தெரிய வருகிறது, சவுகார் ஜானகிக்கு. ஆனால் கொடுக்க மறுக்கிறார், எம்.ஜி.ஆர். விவகாரம் நீதிமன்றம் செல்கிறது. பெற்ற தாயிடமே குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று என்கிறது நீதிமன்றம். குழந்தை பிரிந்த ஏக்கத்தில் எம்.ஜி.ஆரும், அவர் இல்லாத ஏக்கத்தில் குழந்தையும் தவிக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படம்.

இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் போலவே இருக்காது. அட்டகாசமான எம்.ஜி.ஆர் அறிமுகம், அவர் படங்களில் இருக்கும் அம்மா சென்டிமென்ட், அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் ஏதுமில்லாத படம் இது. எம்.ஜி.ஆரின் நடிப்பும் இதில் வேறு லெவலில் இருக்கும்.

.கிழிந்த கோட்டும் தலையில் தொப்பியும் வைத்துகொண்டு படம் முழுவதும் வருவார் எம்.ஜி.ஆர். மேஜிக் செய்கிறேன் என்று ஏமாற்றுபவர் எம்.ஆர்.ராதா. சரோஜாதேவி கிளி ஜோசியம் பார்ப்பவர். போலீஸாக வந்து சிரிக்க வைத்திருப்பார் டி.எஸ்.பாலையா. சவுகார் ஜானகிக்கு வழக்கம் போல சோகத்தைப் பிழியும் வேடம். அசோகன் பணக்காரராக கோட் சூட் அணிந்து ஸ்டைலாக வருவார்.

‘நடமாடும் பள்ளிக்கூடம்’ என்று எழுதப்பட்ட தள்ளுவண்டியில் பொம்மைகள் விற்கும் தங்கவேலு, விஞ்ஞானத்தையும் சிறுவர்களுக்கு கற்றுத் தருகிறார். எம்.என்.நம்பியார் வழக்கம்போல கெட்ட வில்லன். குழந்தை ஷகிலா, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இதில் இடம்பெற்ற ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’, ‘சக்கரக்கட்டி என் ராசாத்தி’, ‘செல்லக்கிளியே மெல்லப் பேசு’, ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என பாடல்கள் இப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கின்றன. இதில், ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ பாடலில் ஒரு வரி, ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்று வரும். இசைத்தட்டிலும் அப்படியே இருந்தாலும் தணிக்கை குழு, ‘அண்ணா’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு ‘மேடையில் முழங்கு திருவிக போல்’ என்று அந்த வரியை படத்தில் மட்டும் மாற்றினார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் இருக்கும்.

’அழகான கன்னங்கள், அபாயகரமான எண்ணங்கள்’, ‘பணம்தான் ஏழையை ஏமாத்தும்னு சொல்வாங்க, இப்ப என்னடான்னா, ஏழைதான் பணத்தை ஏமாத்துறான்’ என்பது போன்ற ஆரூர் தாஸின் வசனங்களும் ரசிக்க வைத்தன. 1966-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்