சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியே வர முடிந்ததா? என்பதைப் பரபரப்புடன் சொல்கிறது மீதி கதை.
சென்னை மத்தியச் சிறையில் 1999-ம் ஆண்டு நடந்த கலவரப் பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள், இந்தப் படத்தை. விசாரணை அதிகாரியாக வரும் இஸ்மாயிலிடம் (நட்டி) அன்று சிறைக்குள் நடந்த விஷயத்தை ஒவ்வொருவராக சொல்ல, அவர்கள் பார்வையில் கதை விரியும் ‘நான் லீனியர்’ திரைக்கதை படத்துக்குப் பலம்.
பெரும்பாலான கதை, சிறைக்குள்தான் நடக்கிறது என்றாலும் எந்த சிக்கலும் இன்றி தெளிவாகவும் சிறப்பான திரையாக்கத்துடனும் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன், கவனிக்க வைக்கிறார்.
அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் கைதிகளை எப்படிப் பயன்படுத்தித் தூக்கி எறிகிறார்கள் என்கிற சிறை அரசியலையும் அவர்களின் ஆட்டத்தில் அப்பாவிகளின் குரல் தொடர்ந்து நசுக்கப்படுவதையும் கதைக்குள் கதையாகப் பேசுகிறது படம்.
தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் கதை, அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகத்துக்குப் பின் வேகம் எடுக்கிறது. குற்றவாளிகளால் நிரம்பியிருக்கும் அந்தக் கட்டிடக் கூண்டுக்குள், அன்பைப் போதிக்கும் வெளிநாட்டு கென்ட்ரிக் (சாமுவேல் ராபின்சன்), ‘வன்முறை வேண்டாம் நீதி வேண்டும்’ என்று குரல் எழுப்புகிற ஈழ இளைஞர் சீலன் (எழுத்தாளர் ஷோபா சக்தி), ‘இது என் ஏரியா’ என்று ஆவேசம்
காட்டும் குக்கர் பஷிர் (பாலாஜி சக்திவேல்), அங்கும் போதைக்கு அடிமையாகி ரோஜாவைத் தேடும் மோகன் (ரவி ராகவேந்திரா), கைதிகளின் குறிப்பறிந்து நடக்கும் ஜெயிலர் கட்டபொம்மன் (கருணாஸ்), எப்போதும் முறைப்பும் விரைப்புமாக அலையும் ரவுடி டைகர் மணி (ஹக்கீம் ஷா), ‘இங்க நாம போலீஸா, அவங்க போலீஸா?’ என்று கேட்கும் கெட்ட அதிகாரி ஷராஃபுதீன், பார்த்திபனின் நண்பராக ரங்கு (மவுரிஷ்) உட்பட கதாபாத்திர வடிவமைப்பில் காட்டியிருக்கும் ‘வெரைட்டி’ ரசிக்க வைக்கிறது. கரி கோடுகளால் வரையப்பட்டிருக்கும் சிறைச் சுவர்களில் புத்தரும் ஏசுவும் இருப்பது கூட ரசனைதான்.
இதுவரை பார்த்திராத, பார்த்திபன் என்ற பாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு, அற்புதம். சிறை அனலுக்குள் அவர், டைகர் மணியுடன் மோதி ரத்தத்துடன் விழுவதில் தொடங்கி, அதிகாரியிடம், “நீங்க விசாரிச்சு என்ன சார் நடந்துட போகுது?” என்று கேட்பது வரை, இது வேறு பாலாஜி. செல்வராகவன், சிகா என்ற ரவுடி கேரக்டருக்கு அப்படியே பொருந்தி இருக்கிறார். அலட்டல் இல்லாத கருணாஸ் நடிப்பில், யதார்த்தம். சானியா ஐயப்பனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்.
‘வன்முறைதான் மிகப்பெரிய கோழைத்தனம்’, ‘கடவுளா இருப்பது எளிது, மனிதனா இருக்கறது தான் கடினம்’ என வரும் தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் ஆகியோரின் வசனங்களில் அத்தனை ஈர்ப்பு. சிறைக் கலவரத்தை நேரில் பார்க்கும் உணர்வைத் தருகிறது பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவும் அதற்கு ஏற்ற கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசையும். டைட்டான ‘நான் லீனியர்’ திரைக்கதைக்குச் செல்வா ஆர்கே-வின் எடிட்டிங் கச்சிதம். ஜெயச்சந்திரனின் கலை இயக்கமும் பெயர் சொல்கிறது.
ரவுடியான சிகாவின் பின்னணியை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அரசியல்வாதிகளின் அறையில் திருநங்கை காட்சி தேவையா? எதையோ சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்க வைத்து சப்பென்று முடியும் கிளைமாக்ஸ் என சில குறைகள் இருந்தாலும் இந்த ‘சொர்க்க வாசலு’க்கு சென்று வரலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago