‘‘டார்கெட் வைத்து விமர்சிக்காதீர்கள்’’ - ‘சொர்க்கவாசல்’ பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. மேலும், ’அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என ஆர் ஜே பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.

வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், "ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், "அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷ‌ன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இர‌ண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

பின்னர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். பிரதமர்- ஜனாதிபதி -முதலமைச்சர் - ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன்.

அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா - அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.

இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் - இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து 'எல்கேஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷங்க', 'சிங்கப்பூர் சலூன்' என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன். இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வராகவன் திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன். நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால் பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.

நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள். ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்... ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள். போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் வேலை செய்யாதீர்கள். டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்.

நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்தத் திரைப்படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும். 29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு படைப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்