அரிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்... - தலைவர்கள், திரையுலகினர் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, செல்லமே உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சில பிறமொழி நடிகர்களுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த அவர், சனிக்கிழமை இரவு குடும்பத்தினரோடு பேசிவிட்டு தூங்கச் சென்றார். இரவு 11 மணியளவில் அவர் திடீரென காலமானார். அவர் உயிர், தூக்கத்திலேயே பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சந்தானபாரதி, ராதாரவி, சிவகுமார், கார்த்தி,செந்தில், சார்லி, பூச்சிமுருகன், வசந்த், லிங்குசாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் உட்பட பலர் நேரில் அஞ்சலிசெலுத்தினர். நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது

மறைந்த டெல்லி கணேஷுக்கு மனைவி தங்கம், மகள்கள் பிச்சு, சாரதா, மகன் மகாதேவன் ஆகியோர் உள்ளனர். மகாதேவன், ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படத்தை டெல்லி கணேஷ் தயாரித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், 80 வயதில் அடியெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு அவருடைய குடும்பத்தினர் சதாபிஷேக விழாவைநடத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை வரலாறு: திருநெல்வேலி அருகிலுள்ள வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ். 9 சகோதரர்கள், 2 சகோதரிகள் என பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். 1964-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் இணைந்த அவர் டெல்லியில் வசித்துவந்தார். அங்கு தக்‌ஷண பாரத நாடக சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக 1974-ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தார். காத்தாடி ராமமூர்த்தியின் ‘டவுரி கல்யாணம்’ என்ற நாடகத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தியின் நாடகங்களில் நடித்து வந்தார்.

அவரது ‘பட்டினப் பிரவேசம்’ நாடகத்தைகே.பாலசந்தர் 1977-ம் ஆண்டு திரைப்படமாக்கினார். அந்தப் படம் மூலம் டெல்லி கணேஷை அவர் அறிமுகப்படுத்தினார். அதுவரை சாதாரண கணேஷாக இருந்தவர் அந்தப்படம் மூலம் ‘டெல்லி’ கணேஷ் ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தன. சிறிய கேரக்டர் என்றாலும் தனது நடிப்பால் அந்த கேரக்டரை ரசிக்கவும் பேசவும் வைத்தார். 1981-ல் வெளியான ‘எங்கம்மா மகாராணி’ படத்தில் நாயகனாகவும் நடித்தார்.

டவுரி கல்யாணம், பொல்லாதவன், பசி, சிந்து பைரவி, ராகவேந்திரர், நாயகன், அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உட்பட பல படங்களில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்தார்.

பசி படத்துக்காக மாநில அரசின் விருதைப் பெற்றுள்ள டெல்லி கணேஷ், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு சில மாதங்களுக்கு முன், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிரதமர் இரங்கல்: டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: புகழ்பெற்ற திரையுலக ஆளுமை டெல்லி கணேஷின் மறைவு ஆழ்ந்தவருத்தமளிக்கிறது. அப்பழுக்கற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர், அவர். ஒவ்வொரு பாத்திரத்தையும் அற்புதமாகக் கையாண்ட விதத்துக்காகவும், தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களை இணைக்கும் திறனுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கருணாநிதியின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காதஇடம் பிடித்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

துணை முதல்வர் உதயநிதி: குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர். டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த்: என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன்: டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை. அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தவெகதலைவர் விஜய், வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ரீமன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்