திரை விமர்சனம்: அமரன்

By செய்திப்பிரிவு

சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைவதுதான் படம்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அறியப்பட்ட சம்பவங்களை வைத்து படங்கள் எடுக்கப்படும்போது கதை தெரியும் என்பதால் இறுதிவரை சுவாரஸியத்தைத் தக்கவைப்பது மிகப் பெரிய சவால். அதை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

முகுந்தின் மனைவி இந்துவின் பார்வையில் சொல்லப்படும் கதையில் இருவருக்கும் இடையிலான காதலுக்கும் உணர்ச்சிகரப் பரிமாற்றங்களைச் சொல்லும் தருணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசனையுடனும் மனதுக்கு நெருக்கமாகவும் இருக்கின்றன. அதே நேரம் ராணுவ வீரர்களின் ஒழுக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, போர்த்திறன், இழப்புகள் ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கிறது படம்.

காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என செய்திகளாகக் கேட்டும் படித்தும் தெரிந்த விஷயங்களை அருகில் பார்த்த உணர்வைத் தருகிறது படம். காஷ்மீரில் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறும் தீவிரவாதிகளை சிலர் ஆதரிப்பதைக் காட்சிப்படுத்தும் அதே வேளையில், பெரும்பாலான காஷ்மீரிகள் அமைதியை வலியுறுத்தி, ராணுவத்துக்குத் துணை நிற்பதையும் அழுத்தமாகச் சொல்லி இருப்பதற்கு இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

முகுந்த் வரதராஜனின் பெற்றோருக்கும் அவர் மனைவி, மகளுக்கு இடையிலான அன்புப் பரிமாற்றங்களைப் பதிவு செய்யும் காட்சிகள் மனதுக்கு இதம் தருகின்றன. குறிப்பாக முகுந்துக்கும் இந்துவுக்குமானப் பிணைப்பைப் பார்வையாளர்களை உணர வைத்ததுதான் இந்தப் படத்தின் உயிர்நாடி. ராணுவப் பணியில் சேர்வதற்காக முதல்முறையாக முகுந்த் ரயில் ஏறும்போது பெற்றோர், காதலி, சகோதரிகளிடம் விடைபெறும் காட்சியை யாராலும் கண்ணீரின்றி கடக்க முடியாது.

போர்க் காட்சிகள் பரபரப்பைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே மாதிரியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம். மிடுக்கான தோற்றம், கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு என முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் உணர்த்துவதில் அபார வெற்றிபெற்றிருக்கிறார். சாய் பல்லவியின் அற்புதமான நடிப்பு, இந்தப் படத்தைத் தாங்கி நிற்கும் இன்னொரு தூண். புன்னகை, சிரிப்பு, அழுகை, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு உணர்விலும் உயிர்ப்பு மிளிர்கிறது. முகுந்தின் உயர் அதிகாரியாக ராகுல் போஸ், அம்மாவாக கீதா கைலாசம், விக்ரம் சிங்காக வரும் புவன் அரோரா என அனைத்துத் துணைக் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஹேய் மின்னலே’ ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை, காட்சிகளுக்குத் துணை புரிந்துள்ளது. சாயின் ஒளிப்பதிவு கண்ணுக்கு இதமான உணர்வைத் தருகிறது. காஷ்மீரில் நிகழும் ஆக்‌ஷன் காட்சிகளில் அபாரமான உழைப்பைக் காண முடிகிறது.

நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிரைத் தியாகம் செய்த ஒரு ராணுவ மேஜரின் தியாகத்துக்கும் அதற்குத் துணை நின்ற குடும்பத்துக்கும் உரிய மரியாதை செலுத்தியிருக்கிறான் இந்த ‘அமரன்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்