திரை விமர்சனம்: மெய்யழகன்

By செய்திப்பிரிவு

சொத்துப் பிரச்சினையில் பூர்வீக வீடு சொந்தத்துக்குச் சென்று விட இதற்கு மேல் அங்கு வாழக் கூடாது என்று , தஞ்சாவூரின் நீடாமங்கலத்தில் இருந்து, தனது மனைவி, மகன் அருள்மொழி (அரவிந்த்சாமி) ஆகியோருடன் சென்னைக்கு இடம் பெயர்கிறார் அறிவுடை நம்பி (ஜெயப்பிரகாஷ்). இருபது வருடமாக ஊருக்குச் செல்லாமல் இருக்கும் அவர்களுக்குள் கோபம் இருந்தாலும் ஊர் பாசம் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் தன் மீது பாசம் கொண்ட சித்தப்பா மகள் புவனா (சுவாதி) திருமணத்துக்காக, சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் அருள்மொழிக்கு. தங்கையை சந்தித்துவிட்டு அடுத்த பஸ்சில் திரும்பிவிட வேண்டும் என்ற நினைவுடன் செல்லும் அவர், அங்கு சந்திக்கும் பெயர் தெரியாத , தன் மீது அத்தான் என்று பாசத்தைப் பொழிகிற அந்த இளைஞரின் (கார்த்தி) அன்பில் மொத்தமாகக் கரைந்து போகிறார். தன்னை விட அனைத்திலும் உயர்ந்து நிற்கும் அந்த இளைஞர் யார், அவருக்கும் அருள்மொழிக்குமான உறவு என்ன என்பதுதான் படம்.

'96' படத்தில் ராம் மற்றும் ஜானுவின் காதலை 'நோஸ்டால்ஜிக்' ரசனையோடு தந்த இயக்குநர் பிரேம்குமார், அதே 'டெம்பிளேட்டு'க்குள் ஊரையும் அத்தான் - மாப்
பிள்ளை உறவையும் உறவுகளையும் பொருத்தி நெகிழ வைக்க முயற்சித்திருக்கிறார். கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் அவர் முயற்சி, முதல் பாதிவரை சுகமாகவே செல்கிறது. அதற்குச் சரியான கதாபாத்திர தேர்வும் அவர்களின் நடிப்பும் பார்வையாளரைக் கதையோடு ஒன்ற வைக்கும் மேஜிக்கை இயல்பாக நடத்தி விடுகின்றன.

உள்ளூரில் குடிகாரனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட அத்தை மகள், 'நான் உன்னையே கட்டியிருக்கலாம்' என்று ஏக்கத்தோடு அருள்மொழியிடம் சொல்வது, தங்கையான கல்யாணப் பெண், அண்ணன் கொண்டுவந்த 'கிஃப்டை' மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம், பல வருடங்கள் கழித்து வந்திருக்கிற அத்தானை ஏமாற்றி, ஒரு நாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எமோஷனலாகவும் கலகலப்பாகவும் கடக்கிறது முதல்பாதி.
இரண்டாம் பாதியில், வெண்ணிப் பறந்தலைப் போர், சோழனின் வீரம், ஈழப் போர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு திதி கொடுப்பது என 'பாடம்' எடுக்கும் காட்சிகள், வசனங்களாக நன்றாக இருந்தாலும் அதன் நீளமும் கதைக்குத் தொடர்பில்லாமல் வரும் ஜல்லிக்கட்டும் பொறுமைக்கு பெரும் சவாலாகி விடுகின்றன.

இயல்பான நடிப்பால், அதிகமான லைக்குகளை அள்ளிக் கொள்கிறார் ‘அத்தான்’ அரவிந்த்சாமி. தன் மீது பாசம் வைத்திருக்கும் கார்த்தியின் பெயர் தெரியாமல் குற்ற உணர்ச்சியால் தவிக்கும் இடங்களில் கலங்க வைக்கிறார். எப்போதும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வெள்ளந்தி மனிதராக, நடிப்பில் மேலும் மெருகேறி இருக்கிறார் கார்த்தி. இருவருக்குமான காம்பினேஷன் கச்சிதமாகப் பொருந்துகிறது. கார்த்தியின் மனைவியாக ஸ்ரீதிவ்யா, பாசக்கார மாமாவாக ராஜ்கிரண், அரவிந்த்
சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, அப்பா ஜெயப்பிரகாஷ், சரண் சக்தி என துணை கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் ‘யாரோ…இவன் யாரோ’ பாடல் உருக வைக்கிறது. மகேந்திர ஜெயராஜுவின் ஒளிப்பதிவு, தஞ்சையின் அழகையும் இரவுக் காட்சிகளையும் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த ‘மெய்யழகனை’ கொண்டாடியிருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்