ஜெயம் ரவியின் ‘பிரதர்’ டீசர் எப்படி? - ராஜேஷின் மாறாத பாணி!

By செய்திப்பிரிவு

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - படம் ஜாலியான ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது என்பதை டீசர் உணர்த்துகிறது. ‘உங்க வாழ்க்கையில் லட்சியம் என்ன?’ என்று ஜெயம் ரவியிடம் ஒருவர் கேட்க, “மூன்று வேளையும் நல்லா சாப்பிட வேண்டும். 8 மணி நேரம் தூங்க வேண்டும். மனதில் பட்டதை பேச வேண்டும். இது தான் லட்சியம்” என்கிறார். கிட்டத்தட்ட படத்தில் ஜெயம்ரவி கதாபாத்திரத்தின் தன்மையை இந்த வசனம் விளக்குகிறது.

தமிழ் சினிமாவின் அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் நாயகர்களுக்கு சூட்டப்படும் அதே ‘கார்த்திக்’ பெயர் தான் ஜெயம் ரவிக்கும். பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்தாத டீசரில் ஒரு சின்ன சண்டைக் காட்சியும், பிரியங்கா மோகன் பேசும் வசனமும் வந்து செல்கிறது. இறுதியில் விடிவி கணேஷின் நகைச்சுவை முயற்சியுடன் டீசர் முடிகிறது. குடும்பம், காதல் கலந்த கதையாக இருக்கும் என தெரிகிறது. எம்.ராஜேஷின் வழக்கமான ஸ்டைலில் உருவாகியுள்ளதாக தெரியும், இந்தப் படம் அவருக்கான வெற்றிப் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

பிரதர்: ‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE