“ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது” - ரஜினிகாந்த் @ ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா

By செய்திப்பிரிவு

சென்னை: அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது: “இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.

ஜெய்பீம் பார்த்தபிறகு நான் ஞானவேலுக்கு போன் செய்யாதது உண்மைதான். அவரு ஒரு பத்திரிகையாளர் என்றும், முன்பே ஒரு படம் செய்திருக்கிறார் என்றும் தெரிந்ததும், நான் திரும்ப படத்தை பார்த்து வியந்தேன். அவர் மிகவும் திறமையானவர். அதன் பிறகுதான் எனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினேன்.

ஒரு படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தூக்கம் போய்விடும். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றால் அது வேறு ஒரு டென்ஷன். பழையை வசூலை கொடுக்கவில்லை என்றால் நான் பழைய ஃபார்மில் இல்லை என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஜெயிலர்’ மிகப்பெரிய வெற்றிபெற்ற பிறகு எனக்கு இதே தலைவலிதான். இந்த காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.

நான் ஞானவேலை சந்தித்தபோது, நீங்கள் மெசேஜ் சொல்லும் கதைதான் எழுதுவீர்கள். நமக்கு மெசேஜ் எல்லாம் செட் ஆகாது. கமர்ஷியல் படம்தான் வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், எனக்கு ஒரு 10 நாட்கள் டைம் கொடுங்கள் என்று கூறிவிட்டு, இரண்டு நாட்களிலேயே போன் செய்தார். என்னால் ஒரு கமர்ஷியல் படம் தரமுடியும், ஆனால் லோகேஷ், நெல்சன் படம் போல இருக்காது. உங்கள் ரசிகர்கள் உங்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது போல இருக்கும் என்று சொன்னார். எனக்கு அதுதான் வேண்டும். நெல்சன், லோகேஷ் போல வேண்டுமென்றால் நான் அவர்களிடமே சென்றிருப்பேன் என்று சொன்னேன்.

இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன். அனிருத் என் மகன் மாதிரி. ஐந்து நாள் சண்டை காட்சிகளை மூன்று நாட்களில் எடுப்பார் குறைந்த நாட்களில் எடுத்தாலும் அற்புதமாக அதனை காட்சி அமைப்பார் இயக்குனர் ஞானவேல்.

ஃபஹத் ஃபாசில் ஞானவேலிடம் இந்த படத்தில் நான் சம்பளமே வாங்காமல் கூட நடிக்கிறேன். ஆனால் ஒரு மாதம் மட்டும் டைம் வேண்டும். காரணம் தனக்கு நிறைய ஷூட்டிங் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. இதை என்னிடம் ஞானவேல் சொன்னபோது நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன். ஏனென்றால் தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும், இன்னொரு பக்கம் லோகேஷ் ‘கூலி’ படத்துக்காக காத்திருக்கிறார். நான் லோகேஷிடம் போய் ஒரு மாதம் டைம் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, அவர், ‘எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் ‘கூலி’ படத்தின் கதை ரெடியாகவில்லை என்று சொன்னார்.

இந்த 2கே கிட்ஸ்களுக்கு அமிதாப் பச்சனை தெரியாது. அவரை பற்றி நான் சொல்கிறேன். அமிதாபின் அப்பா ஒரு மிகப்பெரிய எழுத்தாளர். அம்மா இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி. ராஜிவ் காந்தியும் அமிதாபும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றவர்கள். ஆனால் இது யாருக்கும் தெரியாது. 1969ல் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய பெற்றொரிடம் சொன்னார். அப்போது அவர்கள், சினிமா வாய்ப்புக்காக குடும்ப பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் பணம் கொடுக்க மாட்டோம் என்றும் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு அமிதாப் டப்பிங் எல்லாம் செய்து, படிப்படியாக கடின உழைப்பால் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை பணம் கொடுத்து கெடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் கொடுக்காதீர்கள், நல்ல குணம் கொடுங்கள்” இவ்வாறு ரஜினி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE