நந்தன் Review: சசிகுமாரின் ‘பவர்’ பாலிட்டிக்ஸ் பேசும் படைப்பு எப்படி?

By கலிலுல்லா

புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்த ஊரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள்.

அதனை ‘கவுரமாக’ கருதும் கோப்புலிங்கம், மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்துக்கு வர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் தான் வணங்கான்குடி பஞ்சாயத்து போர்டு ‘தனி’ (reserve) தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் கோபமடையும் கோப்புலிங்கம், அதே ஊரில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, தான் சொல்வதை கேட்டு நடக்கும் கூல்பானை என்ற அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவராக்குகிறார். ஒரு கட்டத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதை அறியும் அம்பேத்குமார் இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது மீதிக்கதை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ‘தனி’ தொகுதிகள் ஆதிக்க சாதிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகி, அதிகார பலமிழந்து கிடக்கும் அவலத்தை ஒரு ஆவணமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். படத்தின் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களை பதிவு செய்திருப்பது யதார்த்த சூழலின் அப்பட்டமான வெளிப்பாடு. ஊராட்சி மன்ற தேர்தல், அதையொட்டி நடக்கும் நிகழ்வுகள், ரிசர்வ் தொகுதி அறிவிப்பு, பகடை காயாக பயன்படுத்தப்படும் தலித் மக்கள், அவர்களின் அப்பாவித்தனம், விசுவாசம், தொடர்ச்சியான அடக்குமுறை, அமைப்பு ரீதியிலான துஷ்பிரயோகங்கள், அவமானங்கள் என நேர்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை.

நடுநடுவே சோர்வை தவிர்க்கும் விதமாக சமகால அரசியல் தலைவர்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் பகடியாக்கி பேசியிருப்பது தைரியமான அணுகுமுறை. ஊராட்சி மன்ற தலைவரால் சுதந்திர கொடியை கூட ஏற்ற முடியாத சமகால செய்திகளை காட்சியாக பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அடைந்தாலும் முழுமையான ‘விடுதலை’ சாத்தியப்படவில்லை என்பதை உணர முடிகிறது. தனி சுடுகாடு, பிசிஆர் சட்டம், சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி, விஜய்யின் அரசியல் ரெஃபரன்ஸ், கல்வியின் முக்கியத்துவம் என பல விஷயங்களை பேசுகிறது படம். இடைவேளைக்கு முன்பு வரை என்கேஜிங்காக கடக்கும் படம் அதன் பிறகு சில ‘இரக்கம்’ கோரும் நகர்வுகளால் உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை. உதாரணமாக அம்பேத்குமார் கதாபாத்திரம் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சி. குறிப்பாக சசிகுமாரின் அந்த கதாபாத்திரத்தின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஊர் மக்கள் சொல்வதையும், மனைவி சொல்வதையும் கேட்டு நடக்கும் அவர், பெரும் பாதிப்பை சந்திக்கும்போதும் கூட குறைந்தபட்ச எதிர்ப்பை கூட பதிவு செய்யாத நிலையில், ஒரு கட்டத்தில் திடீரென மாற்றம் அடைவது நம்பும்படியாக இல்லை. அதனாலேயே கதாபாத்திரத்துடன் ஒன்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் இரக்கத்தை கோர கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர், அதன் பாதிப்பை இன்னும் ஆழமாக கடத்தியிருந்தால் காட்சிகள் உயிர்பெற்றிருக்கும். “ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைனு நினைச்சிட்டு இவ்ளோ நாள் ஒதுங்கியே இருந்தோம். இப்போதான் தெரியுது, இங்க வாழுறத்துக்கே அதிகாரம் தேவைனு” போன்ற வசனங்களும், சமுத்திர கனி பேசும் இட ஒதுக்கீடு வசனமும் சிறப்பு.

கிராமத்து மனிதர்களை பிரதிபலிக்கும் சசிகுமார், வழக்கத்துக்கு மாறான உடல் மொழியாலும், சதா வெற்றிலையை மென்று பேசும் அப்பாவித்தனத்தாலும் தான் சார்ந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். அசால்ட்டான நடையிலும், கறாரான உடல்மொழியிலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் பாலாஜி சக்தவேல். சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி தேவையான பங்களிப்பை செலுத்துகிறார். சமுத்திர கனியின் சிறப்பு தோற்றம் கவனிக்க வைக்கிறது. கிராமத்து எளிய மனிதர்களை படத்துக்குள் கொண்டு வந்த நடிக்க வைத்திருப்பது பலம் யதார்த்தம் கூட்டுகிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை பெரும்பாலான காட்சிகளில் ஓகே என்றாலும், சில இடங்களில் இரைச்சல். ஆர்.வி.சரவணனின் ஒளிப்பதிவும், நெல்சன் ஆண்டனி படத்தொகுப்பும் மெனக்கெடலை கோருகிறது.

உண்மையில் பெரிய அளவில் பேசப்படாத ஒரு பிரச்சினையை வெகுஜன திரையில் தைரியத்துடன் பேசியிருக்கும் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் அது சினிமாவாக உரிய தாக்கம் செலுத்துகிறதா என்றால் அது கேள்வியே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE