லப்பர் பந்து Review: கிராமத்து கிரிக்கெட் பின்னணியில் ஒரு நிறைவான படைப்பு!

By சல்மான்

தமிழில் இதுவரை ஏராளமான ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்துள்ளன. அதில் சில படங்கள் வெற்றி பெறவும் செய்துள்ளன. ஸ்போர்ட்ஸ் உடன் சரியான விகிதத்தில் எமோஷனல் அம்சங்களையும் கலந்து நல்ல திரைக்கதையுடன் வரும் படங்கள் எப்போதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அப்படியான படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள படம்தான் ‘லப்பர் பந்து’.

ரப்பர் பந்துகள் ரூ.15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் அன்பு (ஹரிஷ் கல்யாண்) பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் வெங்கடேஷ் (டிஎஸ்கே), தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி அன்புவை அணியில் வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். அதே போட்டியில் எதிரணியில் பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் கெத்து பூமாலை (அட்டகத்தி தினேஷ்) பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக அன்பு கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் பந்து ரூ.35-க்கு விற்கப்படும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞனாக இருக்கும் அன்பு, யாரென்று தெரியாமலேயே கெத்து பூமாலையின் மகளை காதலிக்கிறார். ஒரு போட்டியில் தற்செயலாக கெத்து - அன்பு இருவரும் மோதும்போது இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சினை வெடிக்கிறது. இந்த ஈகோ பிரச்சினை இருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இருவரும் அந்த சிக்கல்களிலிருந்து மீண்டது எப்படி என்பதை விறுவிறுப்பாகவும், நெகிழ்ச்சியான தருணங்களுடனும் சொல்கிறது ‘லப்பர் பந்து’.

கிரிக்கெட்டை உயிர்நாடியாகக் கொண்ட இந்தியாவில் குறிப்பாக சிஎஸ்கே அணியையும், தோனியையும் தங்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக பார்க்கும் ரசிகர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், கிரிக்கெட் தொடர்பான படங்களுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பாதி பூர்த்தி செய்தாலே அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுவிடும். அந்த வகையில், எதிர்பார்த்ததற்கும் மேல பல கொண்டாட்ட தருணங்களுடன் தனது முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து ஜெயித்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு ஆடப்படும் ரப்பர் பந்து கிரிக்கெட் பின்னணியில் ஒரு எளிமையான கதையை பிடித்து, அதற்கேற்ற ஒரு வலுவான திரைக்கதையை உருவாக்கி ஒரு முழுமையான படைப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் எந்த இடத்திலும் இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் என்ற சாயல் எங்குமே தெரியவில்லை. படம் தொடங்கிய முதல் காட்சியிலேயே நம் முகத்தில் புன்னகையை கொண்டு வந்துவிடும்படியான ஒரு வசனம். ஒரு பேருந்தில் பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் கதாபாத்திரம் ஒன்று, “ராஜா ராஜாதான்யா” என்று அருகில் உள்ள மற்றொரு கதாபாத்திரத்திடம் சொல்கிறது. உடனே பின்னால் நிற்கும் சிறுவன், “ராஜா ராஜாதான். ஆனா இந்த பாட்டு போட்டது தேவா” என்று சொல்கிறது. இப்படியாக தொடங்கும் படத்தில் இதுபோன்ற சின்னச் சின்ன சுவாரஸ்யமான தருணங்கள் ஏராளமாக உள்ளன.

படத்தின் பெரும் பலமே அதன் கதாபாத்திர வார்ப்புகள்தான். தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தினேஷின் நண்பராக வரும் ஜென்சன் திவாகர் என அனைவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. அட்டகத்தி தினேஷுக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு பேர் சொல்லும்படியான ஒரு கதாபாத்திரம். ஈகோ தலைக்கேறிய நபராகவும், அதே நேரம் மனைவி, மகளிடம் அடங்கிப் போகும் குடும்பத் தலைவனாகவும் கலக்கியிருக்கிறார். குறிப்பாக கோபித்துக் கொண்டு சென்ற மனைவி திரும்ப வீட்டுக்கு வந்ததும், குழந்தையை போல அழும் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார்.

ஹரிஷ் கல்யாணின் முந்தைய படமான ‘பார்க்கிங்’-உம் கிட்டத்தட்ட இரு தனி நபர்களுக்கு இடையிலான ஈகோ தொடர்பான கதைதான் என்றாலும், இதில் இயல்பான நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வலுவான பெண் கதாபாத்திரங்களை பார்க்க முடிகிறது. ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவருக்குமே படத்தில் முக்கியமான வேடம். ஹீரோக்களுக்கு ஜோடியாக சும்மா வந்து செல்வது போல இல்லாமல் உண்மையிலேயே கதைக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பால சரவணன் அடிக்கும் கவுன்ட்டர்கள் சரவெடி ரகம். இதுவரை மற்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி வந்த ’நக்கலைட்ஸ்’ ஜென்சன் திவாகருக்கு இதில் தினேஷின் நண்பராக படம் முழுக்க வரும் கதாபாத்திரம். அதை நிறைவாக செய்திருக்கிறார். கிரிக்கெட் தொடர்பான காட்சிகளில் நிஜ போட்டியை பார்ப்பதைப் போல நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து பரபரப்பாக்குகிறது தினேஷ் புருஷோத்தமனின் கேமரா. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. ’சில்லாஞ்சிறுக்கியே’, ‘ஆச ஒறவே’ பாடல்கள் இதம்.

படத்தில் ஆரம்பத்திலிருந்து உறுத்திய ஒரு விஷயம் டப்பிங் சரியாக பொருந்தாமல் இருந்தது. தொடக்கத்தில் எல்லா படங்களிலும் வரும் பிரச்சினைதான் போகப் போக சரியாகிவிடும் என்று பார்த்தால் கிட்டத்தட்ட இடைவேளி முடிந்து முக்கால்வாசி படம் வரை ‘லிப் சிங்க்’ பிரச்சினை இருந்துகொண்டேதான் இருந்தது. க்ளோசப் காட்சிகளில் பெரிய அளவில் படத்துடன் ஒன்றவிடாமல் செய்துவிட்டது. அதே போல படத்தின் ஆரம்பத்தில் காதல் காட்சிகளை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். அவை எந்தவகையிலும் ஒட்டவே இல்லை. கிட்டத்தட்ட கிரிக்கெட் தொடர்பான காட்சிகளுக்குப் பிறகுதான் படம் சூடுபிடிக்கவே செய்கிறது. காளி வெங்கட்டின் மகளாக வருபவருக்கான பின்னணியையும் இன்னும் வலுவாக சொல்லியிருக்கலாம்.

எல்லாவற்றையும் தாண்டி படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. எந்த இடத்திலும் பிரச்சார நெடியாக இல்லாமல் சாதிக்கு எதிரான அரசியலை ஆணித்தரமாக பேசியுள்ளார் இயக்குநர். குறிப்பாக காளி வெங்கட்டிடம் பால சரவணன் பேசும் அந்த ஒரு வசனம், பலரது நெஞ்சலும் முள்ளாய் தைக்கக் கூடும். படம் முழுக்க ஏராளமான எமோஷனல் தருணங்கள் திரைக்கதைக்கு கைகொடுத்திருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து, அதற்கு ஒரு கச்சிதமான காரணத்தையும் அதை பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளவும் வைத்த மேஜிக் இதற்கு முன்பு வேறு எந்த படத்திலும் நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஸ்போர்ட்ஸ் படம் என்றவுடன் வெறும் கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல், ஈகோ பிரச்சினை, சாதி அரசியல், நெகிழ்ச்சியான தருணங்கள், கலகலப்பான நகைச்சுவை என ஒரு நிறைவான படைப்பாக வந்திருக்கிறது ‘லப்பர் பந்து’. தமிழின் முக்கியமான படங்களின் பட்டியலில் இப்படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE