‘வேட்டையன்’ அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கும் படம் ‘தோசா கிங்’

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் த.செ.ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார்.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான த.செ.ஞானவேல், ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஞானவேல் உண்மை கதையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

மறைந்த சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 'தோசா கிங்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஞானவேலுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார் ஹேமந்த் ராவ். இவர் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு ஏ/பி’ படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளரான ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால், வாழ்வில் மேலும் பல உயரத்தை அடையாலாம் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் ராஜகோபால் 3-வது முறையாக ஜீவஜோதியை திருமணம் செய்துகொண்டார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை, ராஜகோபால் கடத்தி, கொலை செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரவண பவன் உணவகங்களின் நிறுவனர் பி ராஜகோபால் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை18-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE