வசூலில் ‘அனிமல்’, ‘பாகுபலி 2’-வை ஓரங்கட்டிய ‘ஸ்ட்ரீ 2’ - திரையுலகம் வியப்பு

By ஸ்டார்க்கர்

மும்பை: இந்திய அளவிலான வசூலில் ‘அனிமல்’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களைத் தாண்டியுள்ளது பாலிவுட் படமான ‘ஸ்டரீ 2’ வசூல்.

அமர் கவுசிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘ஸ்ட்ரீ 2’. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வர்த்தக நிபுணர்கள் பலரும் இது வசூல் சாதனை படைக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால், யாருமே எதிர்பாராத வண்ணம் இப்போது வரை பல்வேறு திரையரங்குகள் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 4-வது சனிக்கிழமை ரூ.8.5 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் மட்டும் ரூ.515 கோடி மொத்த வசூல் செய்திருக்கிறது.
பாகுபலி 2 (ரூ.511 கோடி), அனிமல் (ரூ.503 கோடி) ஆகிய படங்களின் மொத்த வசூலை கடந்திருக்கிறது.

இன்னும் திரையிடப்பட்டுக் கொண்டிருப்பதால் ‘பதான்’ (ரூ.524.69 கோடி), ‘கடார் 2’ (ரூ.525.52 கோடி) ஆகிய படங்களின் வசூலை விரைவில் தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஜவான்’ (ரூ.582.84 கோடி) முதல் இடத்தில் இருக்கிறது. இப்போதுள்ள சூழல்படி ‘ஜவான்’ படத்தை தாண்டுவது கடினம் என்றாலும், முன்னணி நடிகர்கள் யாருமில்லாமல் ஒரு படம் இந்த அளவுக்கு வசூல் செய்வது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE