விஜய்யின் ‘கோட்’ படத்தை விஜயகாந்தின் ‘ராஜதுரை’ உடன் ஒப்பிடும் நெட்டிசன்கள்

By ஸ்டார்க்கர்

’ராஜதுரை’ படத்தின் கதையை குறிப்பிட்டு, ‘கோட்’ படத்துக்கு இணையத்தில் கடும் கிண்டல் எழுப்பப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கோட்’.

செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஒரு தரப்பு படத்தினை கொண்டாடினாலும், ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. ’கோட்’ வெளியானது முதலே விஜயகாந்த் நடித்துள்ள ‘ராஜதுரை’ படத்தினை குறிப்பிட்டு கடும் கிண்டல்கள் எழுந்து வருகிறது. பலரும் ‘ராஜதுரை’ படத்தின் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். 1993-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை எஸ்.ஏ.சி இயக்கி இருந்தார்.

மாயாண்டி என்ற ரவுடியை நேர்மையான காவல்துறை அதிகாரி ராஜதுரை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார். சிறையை விட்டு வெளியே வந்த மாயாண்டி, ராஜதுரையின் மகனை கடத்தி வளர்த்து வருகிறார். ராஜதுரையின் மகனையே அவருக்கு எதிராக திருப்புகிறார். இறுதியில் என்னவானது என்பதே ‘ராஜதுரை’ படத்தின் கதை.

இப்போது ‘கோட்’ படத்தின் கதையும் இதுவே. இதனால் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி படமான ‘ராஜதுரை’ படத்தின் கதையை விஜய்யை வைத்து இயக்கி இருக்கிறார் என்று கிண்டல்கள் எழுந்துள்ளன. அதிலும் விஜயகாந்த் படத்தின் கதையின் அவரையே ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

’ராஜதுரை’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்போது பலரும் அதைப் பற்றி பேசி, அந்தப் படம் குறித்த தகவல்களை இணையத்தில் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE