“என் மீதான பொய்யான பாலியல் புகார்களால் நானும், குடும்பத்தாரும் நொறுங்கிப் போயுள்ளோம்" என்று நடிகர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை வெளிக்கொண்டு வந்தது ஹேமா கமிட்டி அறிக்கை. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகளும் வெளியில் வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை மினு முனீர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயசூர்யா மீது கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, 354,354ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டம் தொடுபுலாவில் நடந்த படப்பிடிப்பின்போது, நடிகர் ஜெயசூர்யாவால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை ஒருவர் காவல் துறை டிஜிபிக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். இந்த இ-மெயில் அடிப்படையில் திருவனந்தபுரத்தின் கரமனா போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 சி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் ஜெயசூர்யா முதன்முறையாக தனது மவுனம் கலைத்துள்ளார். “என் மீதான பொய்யான பாலியல் புகார்களால் நானும், குடும்பத்தாரும் நொறுங்கிப் போயுள்ளோம்" என்று நடிகர் ஜெயசூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (சனிக்கிழமை) “நான் எங்கும் ஓடிப்போகவில்லை. மலையாள திரையுலகை அழித்துவிடாதீர்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அதே சமயம் நம் திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் தெரிவித்திருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெயசூர்யாவின் விளக்கம் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது. ஜெயசூர்யா இன்று (செப்.1) தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயசூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எனது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், இந்த வேளையில் என்னுடன் துணை நிற்கும், ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. எனது தனிப்பட்ட வேலைகள் நிமித்தமாக நான் எனது குடும்பத்தாருடன் கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் இருக்கிறேன். இந்த நேரத்தில் என் மீது இரண்டு போலியான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் நானும், என் குடும்பத்தினரும் நொறுங்கிப்போயுள்ளோம்.
இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வது என நான் முடிவு செய்துள்ளேன். எனது சட்ட உதவிக்குழு இது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மனசாட்சியற்றவர்களே இதுபோல் மற்றவர் மீது போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். உண்மையில் போலியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என்பதும் துன்புறுத்தலுக்கு நிகரான வலி தான். உண்மையைவிட பொய் மிக வேகமாகப் பயணிக்கும். ஆனால் உண்மையே வெல்லும் என நான் நம்புகிறேன்.
இங்கு எனது பணிகள் முடிந்தவுடன் நான் கேரளா திரும்புவேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை சட்டபூர்வமாக நிரூபிப்பேன். எனது பிறந்தநாளை வேதனை மிகுந்ததாக மாற்றியவர்களுக்கும் நன்றி. இங்கு பாவம் செய்யாதவர்கள் பாவிகள் மீது முதல் கல்லை எறியட்டும். இவ்வாறு ஜெயசூர்யா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago