“அந்த முள் பாதை...” - ‘ஆயிரத்தில் ஒருவன்’ துயர் பகிர்ந்து செல்வராகவன் உருக்கம்

By ஸ்டார்க்கர்

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வெளிப்படையாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார்கள். இந்தப் படம் வெளியான போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது பலரும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால் இப்போதைய ரசிகர்கள் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்து நீண்ட வீடியோ பதிவொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதில் அந்தப் படத்துக்காக பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் என அனைத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசியது:

“‘ஆயிரத்தில் ஒருவன்’ கொடுத்த ரணங்கள், வலிகள், காயங்கள் என மனம் முழுக்க வலித்துக் கொண்டே தான் இருக்கும். அவ்வளவு வலியை யாருமே அனுபவித்திருக்க மாட்டார்கள். அந்தப் படம் தொடங்கப்பட்ட போது புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். அந்தளவுக்கு நல்ல டீம். அதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனாலும், ஒவ்வொரு நாளும் பாம்புகள், தேள்கள், அட்டைகள் உடன் தினமும் படப்பிடிப்பு நடத்துவோம்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ பாதிப் படம் முடியும் தருவாயில், சொன்ன பொருட்செலவில் எடுக்க முடியாது என புரிந்தது. உடனே தயாரிப்பாளரிடம் ”சொன்ன பட்ஜெட்டை விட எங்கேயோ போகுது. படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என சொன்னேன். தயாரிப்பளர் ரவீந்திரன் நல்ல மனிதர். இந்த மாதிரி நல்ல படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று சொன்னார். இன்னும் 5 கோடி கொடுக்கிறேன் என்றார். அதையும் தாண்டி பொருட்செலவு அதிகமானது. மீதி படத்தை நானே வட்டிக்கு வாங்கி முடித்தேன்.

இறுதிகட்டப் பணிகளில் மிகவும் சிரமப்பட்டோம். கிராபிக்ஸ் காட்சிகள் புதுமையானது என்பதால் இரவு - பகல் என உழைத்தோம். எத்தனையோ இரவுகள் தூங்காமல் சென்றுள்ளது. படமும் வெளியானது. அன்றிலிருந்து ஒவ்வொருவரும் குத்திக் கிழிக்கிறார்கள். ரத்தம் ரத்தமாக துண்டுப் போடுகிறார்கள். இவன் யார் இப்படி எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எதனால் இது நடக்கிறது என தெரியவில்லை. நாட்கள் ஆக ஆக எதிர்ப்பு சேர்ந்துக் கொண்டே போனது.

தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. அங்கு படத்தை பெரிதாக விளம்பரப்படுத்தினோம். அப்போது கூட எனக்கு ஒன்றும் வேண்டாம். உழைத்த கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைத்த ஜிவி என இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ஜி.வி.பிரகாஷ் எல்லாம் தூங்காமல் படத்துடன் வாழ்ந்தார். இப்போது வரை அங்கீகாரம் கிடைக்காதற்கு அழுதுக் கொண்டே இருக்கிறேன்.

அந்தப் படத்துக்கு முன்பு வரை அரசர்கள் என்றால் எப்படி படமாக்கிக் கொண்டிருந்தோம். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற அரசனை மட்டுமே தெரிந்திருக்கும். இந்தப் படத்துக்காக தான் கடுமையாக ஆராய்ச்சி செய்து சோழ அரசர்களை காண்பித்தோம். அனைத்துமே கல்வெட்டுகளில் இருந்த உண்மை. இன்று அனைவருமே சோழர்களை பிடித்துக் கொண்டார்கள், சோழர்களின் பயணம் தொடரும் என்கிறார்கள். அந்த சோழனை பற்றி முன்பு ஏன் யாருமே பேசவில்லை என்பது சிரிப்பாக தான் இருக்கிறது.

கார்த்தி மட்டும் சரியாக சொன்னார். “சார். உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ். அது சரியாக வருமா என சாரிடம் கேளுங்கள்” என்று ராம்ஜியிடம் கேட்டிருக்கிறார் கார்த்தி. அது சரியாக இருக்கும் என்று படமாக்கிவிட்டோம். தமிழர்களுக்கு நடந்த கொடுமை, செத்தது என அனைத்தையும் யாருமே திரையில் காண விரும்பவில்லை என்பது இப்போது நன்றாக புரிகிறது.

சோழர்கள், அரசர்கள் என இப்போது படம் எடுப்பவர்கள் எங்களுக்கு ஒரு நன்றி கார்டாவது போடுங்கள். ஏனென்றால் அதற்கு முன்பு அந்த முள் பாதையில் உருண்டவர்கள் யாருமே இல்லை. அது ஒன்று தான் என் தாழ்மையான வேண்டுகோள்” என்று செல்வராகவன் பேசியிருக்கிறார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்