பாலியல் வன்கொடுமை புகார்: நடிகர் சித்திக் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு 

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் மூத்த நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான சித்திக் மீது திருவனந்தபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத், மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்தார் என அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் குற்றச்சாட்டை மறுத்த அவர், தன் மீது பாலியல் புகார் கூறிய துணை நடிகை ரேவதி சம்பத் மீது போலீஸில் புகார் அளித்தார்.

இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வெளிவரும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை (Special Investigation Team) கேரள அரசு அமைத்தது. அந்த குழுவில் நடிகை ரேவதி சம்பத் சித்திக் மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் திருவனந்தபுரம் காவல்துறையினர் நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக நடிகர் சித்திக் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE