எது நல்ல ஒளிப்பதிவு? - ராம்ஜி நேர்காணல்

By செ. ஏக்நாத்ராஜ்

சினிமா என்பது கூட்டுக் கலை. இந்தக் கலையில் இயக்குநர்களின் பார்வையை அப்படியே திரையில் கொண்டு வருவது ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மையையும் நடிகர்களின் உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொடுக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், ராம்ஜி. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், தனி ஒருவன், ஒத்த செருப்பு உட்பட பல பேசப்பட்ட படங்களின் ஓளிப்பதிவாளர். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் பணியாற்ற இருக்கும் ராம்ஜியை, சந்தித்தோம்...

“இயக்குநர் செல்வராகவனோட தொடர்ந்து 3 படங்கள் பண்ணிட்டேன். நாலாவது படம் பண்ணப் போறேன். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல புரிதல் இருக்கு. டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறார், அந்தக் கதைக்கு எது தேவை, அதை புரிஞ்சுகிட்டு பண்ணினாலே எல்லா இயக்குநர்கள் கூடயும் ஈசியா செட்டிலாகிடலாம். எனக்கும் செல்வாவுக்கும் அப்படியொரு நட்பு இருக்கு” என்று ஆரம்பிக்கிறார், ராம்ஜி.

இன்னைக்கு வரும் பெரும்பாலான படங்கள்ல, அதாவது கே.ஜி.எஃப், சலார் மாதிரி ‘டார்க் கலர் டோன்’ பயன்படுத்தறாங்களே...ஏன்?

வெளிநாட்டுப் படங்கள் பார்த்துட்டு, அதே ‘பேட்டர்னை’ சிலர் பயன்படுத்தறாங்க. சில படங்களுக்கு அது சரியா வரும். எல்லாபடத்துக்கும் அதை பண்ணினா, ஒரு கட்டத்துக்கு மேல நம்மால பார்க்க முடியாது. கேமராங்கறது வெறும் கேமரா மட்டும் இல்லை. நம்ம கண் ஒரே கலரை பார்த்துக்கிட்டே இருந்ததுன்னா, ஒரு கட்டத்துக்கு மேல ‘டயர்டா’கிடும். பார்வையாளர்கள், திரையில இருந்து கண்களை விலக்கிடுவாங்க. அவங்களுக்கு கதையோட ஈடுபாடு இல்லாமலும் போயிரும். அதனால எல்லா படங்களுக்கும் ‘டார்க் கலர் டோன்’ பண்ண முடியாது.

நீங்க ‘ஃபிலிம்’ காதலர். டிஜிட்டல்ல இப்ப எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துடுச்சு. இன்னும் ‘ஃபிலிம்’தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா?

காலம் மாறுது. மாற்றத்துக்கு எல்லோருமே உட்பட்டுதான் ஆகணும். ஃபிலிம்ல படங்கள் பண்ணும்போது அதுல உயிர் இருக்கும். இன்னைக்கு செல்போன்லயே மூணு கேமரா, நாலு கேமரான்னு வந்துடுச்சு. நாம அந்த டிஜிட்டலுக்கு பழகிட்டோம். எல்லாமே டிஜிட்டலா மாறிட்டதால வேற வழியே இல்லை. அதை பின்பற்றி ஆகணும். ஆனா, அதுல என்ன பண்றோம் அப்படிங்கறது முக்கியம். அதுக்காக, ‘ஃபிலிம்’ மொத்தமா முடிஞ்சிடுச்சுன்னு நினைக்க வேண்டாம். ஹாலிவுட்ல ரெண்டையும் ‘மிக்ஸ்’ பண்ணி படங்கள் எடுக்கறாங்க.

நல்ல ஒளிப்பதிவு எதுங்கறதுக்கு ஏதாவது வரையறை இருக்கா?

அப்படிலாம் இல்லை. என்கிட்ட கேட்டா, பார்க்கிறதுக்கு எது நல்லாயிருக்கோ, படம் பார்க்கும்போது எது பிடிக்குதோ அதுதான் சிறந்த ஒளிப்பதிவுன்னு சொல்வேன். எனக்கு என்னன்னா, ஒரு கதையை எந்த உறுத்தலும் இல்லாம, எப்படி உயிரோட்டமா சொல்றோம் அப்படிங்கறது முக்கியம். அதுதான் சிறந்த ஒளிப்பதிவுன்னு பார்க்கிறேன். இதுல ஒவ்வொருத்தரோட பார்வையும் மாறுபடும்.

டிஜிட்டல் வந்தபிறகு, ஒளிப்பதிவாளர்களுக்கான தனித்துவம் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்களே?

உண்மைதான். இதுக்கு யாரையும் தப்பு சொல்லமுடியாது. எந்த படம் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. அதை சிலர் விருப்பப்பட்டே பண்றாங்கன்னுதான் நினைக்கிறேன். அதை மாற்றணும். இந்தப் படம் யார் பண்ணினான்னு கேட்கிற மாதிரி இருந்தாதான் அந்த ஒளிப்பதிவு கவனிக்கப்படும். அந்த தனித்துவம் இருந்தாதான் நிலைச்சு நிற்க முடியும்னு நான் நினைக்கிறேன்.

அமீரின் ‘பருத்திவீரன்’ படத்துல, ஒரு வறண்ட நிலப்பரப்பை தத்ரூபமா காட்சிப்படுத்தி இருப்பதா அப்ப பேச்சு வந்தது. டெக்னாலஜி அதிகம் வளராதகாலத்திலேயே அது எப்படி சாத்தியமாச்சு?

அமீர் அந்தப் படத்துக் கதையை சொல்லும்போதே, ஒரு சொட்டு தண்ணி இல்லாத வறண்ட பூமியில் நடக்கிற வாழ்வியலை காண்பிக்கப் போறோம்னுதான் சொன்னார். நாங்க எதிர்பார்த்த லொகேஷன் அமையலை. பிறகு நாம தேடற மாதிரியான இடத்தை உருவாக்குவோம்னு நினைச்சு, 10, 15 ஏக்கருக்கு ஒரு இடத்தைப் பிடிச்சோம். அதை அப்படி மாத்தினோம். அங்கலைட்-டை பயன்படுத்தாம ஷூட் பண்ணினோம். பார்வையாளர்கள் அந்த வெயிலை உணர்றதுக்காக, கார்த்தியை கண்ணைச் சுருக்கி பார்க்கிற மாதிரிநடிக்கவச்சோம். இப்படி சின்ன சின்ன விஷயங்களை பண்ணினோம். அதேபோல அந்த நிலப்பரப்புஎப்படியிருக்குனு காண்பிக்கிறதுக்காக, ‘வைடு ஷாட்’ நிறைய வச்சிருப்பேன். அதுவும் படத்துக்கு பிளஸ் ஆச்சு. படம் வந்த பிறகு அந்தப் பகுதி வெயிலை நாங்க உணர்ந்தோம்னு நிறைய பேர் சொன்னாங்க. இன்னைக்கு டிஜிட்டல் வந்துட்டாலும் ஃபிலிம் கொடுத்த விஷயத்தை டிஜிட்டல் கொடுக்காது அப்படிங்கறது என் ஆழமான நம்பிக்கை.

அதேபோல செல்வராகவன் இயக்கத்துல நீங்க ஒளிப்பதிவு பண்ணிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ ரிலீஸான நேரத்துல சரியா கவனிக்கப்படலை. இப்ப சோஷியல் மீடியாவுல ரசிகர்கள் கொண்டாடுறதைக் கவனிச்சீங்களா?

உண்மைதான். அந்தப் படம் அன்னைக்கு சரியாக ஓடியிருந்தா, இன்னும் புதுசா முயற்சி பண்ணியிருக்கலாம். பொதுவா நான் பண்ணிய படங்கள் ரிலீஸ் ஆனா, நிறையநண்பர்கள் ஃபோன் பண்ணி அப்படி இப்படின்னு சொல்லுவாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்துட்டு யாருமே பேசலை. வெற்றி, தோல்விங்கறது இங்க சகஜம். ஆனா, யாருமே பேசாதது வருத்தமா இருந்தது. அதுக்கு பிறகு மனோபாலா போன் பண்ணி உணர்ச்சிவசப்பட்டார். நல்ல ஒர்க் பண்ணியிருக்கீங்க. நீ போற பாதை சரியா இருக்குன்னு சொன்னார்.

ஒருவேளை சோஷியல் மீடியா அன்னைக்கு பிரபலமா இருந்திருந்தா நல்லா ஓடியிருக்கலாமோ?

இருந்திருக்கலாம். வாய்ப்பு உண்டு. அந்த ஃபேன்டஸி ஜானரை பார்வையாளர்கள் சரியா உள்வாங்கலையோன்னு தோணுச்சு. தமிழ்ல ஃபேன்டஸி ஜானர் அப்ப புதுசுதான். அதிக பழக்கமில்லாத ஒரு ஜானர்வந்ததும் அவங்களால ஏத்துக்க முடியலையோன்னு நினைச்சோம். அதுக்குப் பிறகு அந்தப் படம் ரீ-ரிலீஸ் பண்ணினப்போ, நான் தியேட்டருக்கு போனேன். ஒவ்வொருகாட்சியையும் மக்கள் ரொம்ப ரசிச்சதைப் பார்த்தேன். இடைவேளையில என்னைஅடையாளம் கண்டு நிறைய பேர் பேசினாங்க. ஒருத்தர், ‘படம் ரிலீஸானப்ப எனக்கு6 வயசு. அப்ப, எனக்கு ‘தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ தெரியாது. இப்ப பார்க்கும்போது அதை கொண்டாட முடியுது’ன்னார். இதை எப்படி எடுத்துக்கறது? இதேபோல ‘இரண்டாம் உலகம்’ படமும் புதுவிஷயத்தை பேசிய படம். அதுக்கு டெக்னிக்கலாக நிறைய உழைச்சோம். ஆனா, கிராபிக்ஸ் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாகி இருக்காங்க. உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கா?

ஆசை இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி கதை அமைஞ்சா நான் பண்ணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE