“நீங்கள் தமிழகத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனில்...” - ‘வாழை’ குறித்து மிஷ்கின் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “‘கொட்டுக்காளி’ படத்தில் நான் பேசியதை 50 பேர் காணொலி மூலம் பேசி திட்டினார்கள். மேடையில் பேசுவது போல சோர்வைத் தரும் விஷயம் எதுவுமில்லை. என்னை திட்டுபவர்களுக்கு கன்டென்ட் எதுவும் கொடுக்கவில்லை என்ற வருத்தத்துடன் மேடையிலிருந்து இறங்குகிறேன்” என இயக்குநர் மிஷ்கின் ‘வாழை’ நிகழ்வில் ஜாலியாக பேசினார்.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தின் தொடக்க காட்சியில் இரண்டு பெரிய ஹெலிகாப்டர்கள் வருகிறது. மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு ஒரு பெண் ஆடுகிறார். க்ளைமேக்ஸில் 250 பேரை அடித்துக் கொல்கிறார் மாரி செல்வராஜ். இதுபோன்ற காட்சிகள் இருக்கும் என நினைத்தால் இது எதுவும் படத்தில் இருக்காது. ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ இரண்டு படங்களும் எனக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தன. உலக சினிமாவின் கோட்டை கதவை இரண்டு தமிழ் படங்களும் உடைத்துள்ளன.

8, 9 வயது பையனிடம் இருக்கும் நட்பு, காதல், வலி என அனைத்து உணர்வுகளையும், இந்தப் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் வெளிக்கொணர்ந்திருக்கிறார். இந்தப் படத்தை விட சிறந்த படத்தை மாரி எடுக்க முடியாது என நினைக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய உண்மைகள் உண்டு. நிறுத்தவே முடியாத அழுகையை, நிறுத்தவே முடியாத புன்னைகையை இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் மிகப் பெரிய அனுபவம். குரோசோவா கூறும்போது, ‘நீங்கள் இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ‘பதேர் பாஞ்சாலி’ படத்தை பாருங்கள்’ என்பார். நான் சொல்வேன், நீங்கள் தமிழகத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ‘வாழை’ படத்தை பாருங்கள்’ என்பேன். இது படம் அல்ல, பாடம்.

நம் வாழ்க்கையில் அம்மா, தங்கையை விட்டுவிட்டு சொந்தமில்லாத சொந்தமாக உணர்வது ஆசிரியர். குடும்பத்தை தாண்டி குழந்தை சந்திக்கும் முதல் பெண் ஆசிரியர். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிகிலா விமல் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவரையும் மலையாளத்தில் இருந்து தான் அழைத்து வந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதுதான் வருத்தம். இன்னைக்கு தான் நாகரிகமாக பேசியிருக்கிறேன் என நினைக்கிறேன். என்னை திட்டுபவர்களுக்கு எந்தக் கன்டென்டும் கொடுக்கவில்லை என்ற வருத்தத்துடன் மேடையிலிருந்து இறங்குகிறேன்.

‘கொட்டுக்காளி’ படத்தில் நான் பேசியதை 50 பேர் காணொலி மூலம் பேசி திட்டினார்கள். மேடையில் பேசுவது போல சோர்வைத் தரும் விஷயம் எதுவுமில்லை. இரண்டு படங்களும் என் நாவை கட்டிப் போட்டுவிட்டது. நான் கெட்ட வார்த்தைகள் பேசுவதையும் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். உலகத்தின் மிகச் சிறந்த இயக்குநராக நான் பார்ப்பது வெற்றிமாறன், ராம், தியாகராஜன் குமாரராஜா. ‘வாழை’ படம் சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE