‘எல்லோருக்கும் பரிச்சயமான விஜய்யின் முகம்தான் கோட் படத்தில் இருக்கும்’ - வெங்கட் பிரபு பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: எல்லோருக்கும் பிடித்த மற்றும் பரீட்சியமான விஜய்யின் முகம்தான் ‘தி கோட்’ படத்தில் இருக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார்.

தி கோட் படத்தில் ‘டீ-ஏஜிங்’ முறையில் நடிகர் விஜய்யின் முகத்தோற்றம் சில காட்சிகளில் மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான மூன்றாவது சிங்கிள் பாடலில் இந்த தோற்றம் இடம் பெற்று இருந்தது. அது தொடர்பாக வெங்கட் பிரபு தெரிவித்தது.

“22 அல்லது 23 வயதில் விஜய்யை முதலில் நான் காண்பிக்க விரும்பினேன். அது தான் எனது திட்டமாக இருந்தது. ‘டே, அது என்னை போல இல்லாமல் போயிட போது டா. என்னை மாதிரி லுக்க வெச்சுக்கோ’ என விஜய் சார் என்னிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தார்.

விஜய் சாரின் முகம் எல்லோருக்கும் மிகவும் பழக்கப்பட்ட முகம். அதனால் அந்த லுக்கை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும். ஸ்பார்க் பாடல் வெளியானதும் சில விமர்சனங்கள் வந்தது. அதை நிறைய பேர் ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்களுக்கே பாடமாக அமைந்தது. அதனால் பெரிய எக்ஸ்பிரிமெண்ட் வேண்டாம். அவரை இளமையாக காட்டினால் போதும் என முடிவு செய்தோம். அதனால் எல்லோருக்கும் பரிச்சயமான விஜய்யின் முகம்தான் ‘தி கோட்’ படத்தில் இருக்கும். ட்ரெய்லரிலும் புதிய லுக் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் தான் ட்ரெய்லர் கொஞ்சம் தாமதமாகி உள்ளது. அந்த முகம் பார்க்க பார்க்க பழகிடும்” என வெங்கட் பிரபு தெரிவித்தார்.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள ‘தி கோட்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE