கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: நீதி கிடைக்க பாலிவுட் நடிகர், நடிகைகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவாக நீதி கிடைக்க பாலிவுட் நடிகர், நடிகைகள் வலியுறுத்தியுள்ளனர்.

நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது ‘எக்ஸ்’ பக்க பதிவில்: அனைவரும் பாதுகாப்பாக உணரக்கூடிய சமூகமாக நாம்படிப்படியாக வளர வேண்டியிருக்கிறது. அந்த நிலையை அடைய இன்னும் பல தசாப்தங்கள் ஆகலாம்.நமது மகன்களுக்கும் மகள்களுக்கும் நுண்ணுணர்வு ஊட்டி அதிகாரப்படுத்துவதன் வழியாக இந்தநோக்கம் நிறைவேறக்கூடும். அடுத்த தலைமுறை மேம்பட்டிருக்கும். நாம் நாளடைவில் அங்குசென்றடைவோம். ஆனால், இடைப்பட்ட காலம் எப்படி இருக்கிறது? தற்போது இத்தகைய கொடுமைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதே நீதியாகும். அதற்கு குற்றவாளிகளை நடுநடுங்கச் செய்யும்விதமாக பட்டப்பகலில் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதுதான் தேவை. வேறென்ன? மகளுக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடன் நிற்கிறேன். கொலையைக் கண்டித்துப் போராடியதற்காகத் தாக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்: மற்றுமொரு கொடூர பாலியல் வல்லுறவு. எங்கேயும் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்த்தியிருக்கும் மற்றுமொரு நாள். நிர்பயா அசம்பாவிதம் நிகழ்ந்து பத்தாண்டுகள் கடந்தும் எதுவும் மாறவில்லை என்பதை நினைவூட்டும் மற்றொரு கொடிய சம்பவம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “12 ஆண்டுகள் கழித்து அதே கதை, அதே போராட்டம். ஆனால், நாம் இன்னும் மாற்றத்துக்காகக் காத்திருக்கிறோம்” என்றார். இயக்குநர் ஜோயா அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பெண்கள் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் நாளுக்காக இன்றுவரை காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜோயா அக்தரின் அண்ணனும் நடிகருமான ஃபர்ஹான் அக்தர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அஞ்சலி கவிதை ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில், “எனக்காக பேசுங்கள், நொறுங்கிய கனவுகளுடன், முடிவுறாத பாடல்களோடு நான் சென்ற பிறகு....வெறுமையான ஓவிய பலகைகள், பாதி எழுதப்பட்ட கவிதைகள், கருவிலேயே மரித்துப்போன பூனைக்குட்டியைப் பற்றி பேசுங்கள்...தீக்கு இரையான இல்லங்கள் பற்றி பேசுங்கள், அழுகிக் கொண்டிருக்கும் ஆசாபாசங்கள் பற்றி பேசுங்கள், எட்டாத இலக்குகள், நிறைவேறாத ஆசைகள் இவற்றையெல்லாம் பற்றி பேசுங்கள்... எனக்காக பேசுங்கள், நான் சென்ற பிறகு, எனக்காக பேசுங்கள் நான் சென்ற பிறகு....” இவ்வாறு உருக்கமான கவிதை எழுதியிருந்தார்.

மேலும், நடிகைகள் சாரா அலி கான், பிரியங்கா சோப்ரா, டிவிங்கிள் கன்னா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் விரைந்து நீதி கோரி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE