“நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லிக்காட்ட மாட்டேன்” - சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

சென்னை: “நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். சூரிக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என்று நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், “வினோத் இயக்கிய ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதனை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன்.

நான் உலக சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்தவன் நான். தமிழில் வித்தியாசமாக வந்த படங்கள் தான் என்னுடைய புரிதல். பிறகு ‘கூழாங்கல்’ படத்தைப் பற்றி பேசி பேசி புரிந்து கொண்டேன். இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்காக ரோட்டர்டாம் விருது பெற்றிருப்பதாக சொன்னார்கள். இந்த விருது அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் விருது. இதனை முன்னதாக கிறிஸ்டோஃபர் நோலன் பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள். நான் திகைத்து விட்டேன்.

மதுரையிலிருந்து சென்று சர்வதேச விருது பெற்றிருக்கிறார் வினோத் ராஜ். அப்போதே வினோத்தின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் என உறுதியளித்தேன். அவரைக் கொண்டாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால் தான் இந்தப் படத்தை தயாரித்தேன். இந்தப் படத்தில் நான் முதலீடு செய்ததை தாண்டி லாபம் வந்தால் அதிலிருந்து உங்களுக்கு (வினோத்) அடுத்த படத்துக்கு நான் அட்வான்ஸ் கொடுப்பேன். உங்களுக்கு என்ன படம் இயக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதனை எடுங்கள்.

அதையும் தாண்டி கூடுதல் லாபம் கிட்டினால், வினோத் ராஜ் போல வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு திருப்பி அளிக்கும் முயற்சியாக நான் இதனை பார்க்கிறேன். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இல்லை என இயக்குநர் என்னிடம் சொல்லும்போது ஆச்சரியமாக இருந்தது. இசையில்லாமல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

அதன்படி படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். புது முயற்சிக்கு பார்வையாளர்கள் ஆதரவளித்துள்ளார்கள். அன்னா பென் சிறப்பாக நடித்துள்ளார். சூரி ஒரு சிறந்த நடிகர். அவருடைய வாழ்க்கை அத்தனை ஆழமானது. ஊரில் அவர் பயங்கரமான நபர். அவருடைய கதைகளை கேட்டால் தெரியும். நடிகராக ‘விடுதலை’ படத்தை விட கூடுதல் மார்க்கை இப்படத்தில் சூரி வாங்குவார் என சொன்னேன். இந்தப் படத்தில் சூரிக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்.

என்னைவிட சிறப்பாக நடிக்க கூடியவர் சூரி. அவர் இயக்குநர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல் போன்றவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை. சூரி என்னுடைய அண்ணன். அவர் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம். இயக்குநர் வினோத்ராஜ் தமிழ் சினிமாவின் பெருமை. எஸ்கே புரொடக்ஷனிலிருந்து இதுபோன்ற படங்கள் வரும். நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி, நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நானில்லை. இது வெற்றியடைந்தால் இது போன்ற முயற்சிகள் தொடரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE