உலகத்தரமும், மண்வாசனையும்... - ‘தங்கலான்’ குறித்து நடிகர் விக்ரம் பெருமிதம்

By கி.மகாராஜன் 


மதுரை: ‘தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும், நமது மண்வாசனையும் இருக்கும்’ என நடிகர் விக்ரம் பெருமையுடன் குறிப்பிட்டார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் திரைப்படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் விக்ரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதுரை எனக்கு சிறப்பான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரை தான் நினைவுக்கு வரும். அனைத்து விடுமுறையிலும் இங்கு தான் இருப்பேன். இந்த படத்தில் ஆங்கில நடிகர் டேனியலுக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது. அதன்பின் அறுவை சிகிச்சை செய்துகொண்டு 3 மாதம் ஓய்வெடுத்தார். பின்னர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார்.

படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். டேனியல் இந்தியராகவே மாறிவிட்டார். மாளவிகா யார் என்பது இந்த படம் மூலம் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார். தங்கலான் இந்திய சினிமாவுக்கு புதுவித கதையாக இருக்கும். இசையில் மக்களுக்கு புரியும் வகையில் புதிய சப்தங்கள், புதிய கருவிகளை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்தியுள்ளார்.

பா.ரஞ்சித்தோடு பணி புரிந்தது மகிழ்ச்சி. எனக்கு பிடித்த இயக்குனர். தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும். இதேபோன்று இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும். தங்கலான் படம் நம்ம வரலாறு என நீங்கள் பெருமைப்படுவீர்கள். எந்த படம் நடித்தாலும் அதற்கு ஏற்ப மன ரீதியாக தயார்படுத்திக்கொள்வேன். அந்த கேரக்டரை உள்வாங்கி நடிகராக மாறிவிடுவேன். டப்பிங் இல்லாமல் ஒரிஜினிலாக ஸ்பாட்டில் பேசியது கடும் சிரமமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது. காதல் கதை தொடர்பான படங்கள் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்" என்றார்

நடிகை மாளவிகா மோகனன் கூறுகையில், "மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். தங்கலான் பட சூட்டிங் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே இங்கு தான் நடந்தது. எனது சிறப்பான இடமாக மதுரை அமைந்துள்ளது. விரைவில் நான் தமிழில் சரளமாக பேசுவேன். பல்வேறு இடங்களில் சூட்டிங் நடைபெற்றாலும், மதுரை எப்போதும் தனி சிறப்பு தான். விக்ரம் சிறந்த நடிகர். தங்கலானில் ஸ்கிரீனில் சிறப்பாக சண்டை போடுவார். ஆனால் ஆப் ஸ்கிரினில் நல்ல நண்பர்.

இந்த படத்தில் நடித்த ஆங்கில நடிகர் டேனியல் புதிய இடம் புதிய கலாச்சாரத்தோடு சேர்ந்துவிட்டார். இவர் அதிகளவு இந்திய படங்களில் நடிக்க வேண்டும். மதுரைக்கு வர வேண்டும். கறிதோசை சாப்பிட வேண்டும்" என்றார்.

நடிகர் டேனியல் கூறுகையில், "விக்ரம் சிறந்த நடிகர். மதுரை மக்கள் நல்ல மக்கள். இந்த படம் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவின் சிறந்த நடிகராக விக்ரம் உள்ளார்" என்றார். முன்னதாக தங்கலான் பட டிரெய்லர் மற்றும் பாடல் வீடியோ காட்சிகள் திரையிட்டபோது நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் விக்ரம், டேனியல் ஆகியோர் நடனமாடியபடி ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE