“ஹீரோ வில்லன் பார்முலாவுக்கு நான் எதிரி இல்லை!” - இயக்குநர் ராதா மோகன் நேர்காணல்

By செ. ஏக்நாத்ராஜ்

‘ஃபீல் குட்’ திரைப்படங்களை, சுவையான காமெடி குழைத்து சுகமாகத் தருபவர் இயக்குநர் ராதா மோகன்! ‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட அவர் படங்கள் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவை. அவர் இயக்கி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் ‘சட்னி சாம்பார்’ வெப் தொடரும் அதே ‘ஃபீல் குட்’ வகைக்குள் பக்காவாக பொருந்தி, வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அவரிடம் பேசினோம்.

‘சட்னி சாம்பார்’ கதைக்கு ஏதும் இன்ஸ்பிரேஷன் உண்டா?

ஒரு நாள் திருவல்லிக்கேணி ‘ரத்னாகபே’வில் சாப்பிட்டுட்டு இருந்தேன். அந்த கடைசாம்பார் பிரபலம். அதுபற்றி யோசிச்சிட்டிருக்கும் போது, இதை வச்சு ஒரு கதை பண்ணலாமேன்னு தோணுச்சு. அப்படியே டெவலப் பண்ணினேன். இது சாம்பாருக்கு ‘ஃபேமஸ்’னா சட்னிக்கு இன்னொரு கடை இருந்தா எப்படியிருக்கும்?னு நினைச்சேன். அதுக்குள்ள, ஒரு எமோஷனல் ஃபேமிலி டிராமாவை கதையா வச்சேன். ‘சட்னி சாம்பார்’ ரெடியாச்சு.

இந்த கதையில யோகிபாபுவுக்கு முக்கியமான கேரக்டர். அவர் நடிக்க சம்மதிக்கலைன்னா இதை பண்ணியிருக்கவே மாட்டேன்னு சொல்லி யிருந்தீங்க. ஏன் அப்படி?

ஏன்னா, அந்த கேரக்டருக்கு அவர்தான் சரியா இருப்பார்னு எழுதும் போதே முடிவுபண்ணிட்டேன். அவரை விட்டுட்டு இன்னொருத்தரை அந்தக் கதைக்குள்ளயும் கதாபாத்திரத்துக்குள்ளயும் பொருத்த முடியாதுன்னு தோணுச்சு.மனசுல ஒருத்தரை நினைச்சுட்டு எழுதும் போது, அவரே அந்த கேரக்டரா அமைஞ்சாதான் அது சரியா இருக்கும்னு எனக்கு தோணும். இந்தக் கதையை எழுதி முடிச்சுட்டு யோகிபாபுகிட்ட சொன்னேன். அவர் கேட்டுட்டு, ‘நல்லாயிருக்கு, கண்டிப்பா நடிக்கிறேன்’னு சொன்னார். அவர், மாட்டேன்னு மறுத்திருந்தா, இந்த வெப் தொடரை பண்ணியிருக்க மாட்டேன். சில விஷயங்கள் அப்படித்தான்.

வழக்கமா ஓடிடி தளங்கள், கிரைம் த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், ஹாரர் மாதிரியான கதைகளைத்தான் வெப் தொடரா பண்றாங்க. எப்படி ‘ஃபீல் குட்’ கதையை ஏத்துக்கிட்டாங்க?

நான், படம் பண்றதுக்காகத்தான் ஹாட் ஸ்டாருக்கு போனேன். இந்த ஸ்கிரிப்ட்டையும் சினிமாவுக்காகத்தான் கொடுத்தேன். அவங்க, ‘ஒரு ஃபீல் குட் வெப் தொடர் பண்ணலாம், இதையே அப்படி மாற்றலாம்’னு சொன்னாங்க. எனக்கே ஆச்சரியம்தான். நீங்க கேட்ட அதே கேள்வியைதான் நானும் கேட்டேன். ‘இதை வெப் தொடரா பண்ணுங்க, நல்லாயிருக்கும்’னு சொன்னாங்க. வெப் தொடர்னா அதுக்கான திரைக்கதையை வேற மாதிரி அமைக்க வேண்டியிருந்தது. கதையை எபிசோடுகளா பிரிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் சின்ன ட்விஸ்ட் வைக்கணும். அதை ஒர்க் அவுட் பண்ணிப் பார்த்ததும் சரியா வந்தது. அப்புறம் சரின்னு ஷூட்டிங் கிளம்பிட்டோம்.

உங்க படங்கள்ல ஒவ்வொரு கேரக்டருமே தனித்தன்மையா இருக்கும். ‘சட்னி சாம்பார்’லயும் அப்படித்தான். அதை எப்படி பிடிக்கிறீங்க?

எப்பவுமே நாயகன், நாயகி மாதிரி லீட் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தானாகவே கிடைச்சிரும். அவங்களை போல மற்ற துணை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைப்பேன். சும்மா வந்துட்டு போகிற மாதிரி இருக்கக் கூடாதுங்கறது என் எண்ணம். அதுதான் கதைக்கு பலமாகவும் பேலன்ஸாகவும் இருக்கும். குறிப்பா, வெப் தொடர்கள்ல ‘சப்போர்ட்டிங் கேரக்டர்களு’க்கு முக்கியத்துவம் வேணும். எந்த வெப் தொடராஇருந்தாலும் அவங்களுக்கான முக்கியத்துவத்தைப் பார்க்கலாம். சின்ன கேரக்டரா இருந்தாலும் அவருக்கும் ஒரு கதை இருக்கும். அப்படித்தான் இதையும் பண்ணினேன்.

உங்க முதல் படத்துல இருந்து நடிகர் இளங்கோ குமரவேல் உங்களோட பயணிச்சிட்டு இருக்கார். உங்களுக்கான நட்பு எப்படி?

‘அழகிய தீயே’ படம் பண்ணும்போது, கோபி கேரக்டர்ல யார் பண்ணலாம்னு தேடினப்பா, நடிகனா வந்து அறிமுகமானவர் தான் இளங்கோ குமரவேல். முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள்ள நட்பு உருவாச்சு. ஒரே நேரத்துல நான் லயோலாவுல படிச்சேன். அவர் நியூ காலேஜ். ரெண்டு பேருக்குமே பொதுவான நண்பர்கள் இருந்தாங்க அப்படிங்கறது பிறகுதான் தெரிஞ்சுது. அங்க இருந்து தொடர்ந்த நட்பு இப்பவரை போயிட்டிருக்கு. ஒரு நண்பராகவும் நடிகராகவும் எனக்கு ரொம்ப சவுகரியமானவர் அவர்.

பொதுவா, ஹீரோ- வில்லன் மோதல்னுதான் கதை பண்ணுவாங்க. உங்க படங்கள்ல சூழ்நிலைதான் எதிரியை உருவாக்குற மாதிரி இருக்கும். ஏன் அப்படி?

உண்மைதான். நான் உருவாக்குற கதைகளுக்கு புதுசா ஒரு வில்லன் தேவைப்படலை. என் கதையில இயல்பா எழுகிற பிரச்சினைகளே அந்த வேலையை பண்ணிடுது. அதுக்காக ‘ஹீரோ -வில்லன் பார்முலா’வை நான் எதிர்க்கிறேன்னு அர்த்தமில்லை. இப்ப, ஒரு மாஸ்படம் பண்றோம். அதுல ஹீரோவுக்கு இணையான வில்லன் இருந்தாதான் அந்தப் படம் சரியா இருக்கும். நான் பண்ற கதைகள் அப்படியில்லையே.

உங்களுக்கு பிரம்மாண்டமான மாஸ் படம் பண்ற ஐடியா இல்லையா?

இல்லை. நமக்கு என்ன வருமோ, அதைத்தான் பண்ணணும். கமர்ஷியல் மாஸ் படம் பண்றது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலை. நடிகர்கள், தயாரிப்பாளர்கள்ல இருந்து ரசிகர்கள் வரை எல்லோருக்குமே பதில்சொல்ற வேலை அது. அதனால என் ஸ்டைல்ல,நான் படங்கள் பண்ணிட்டிருக்கேன்.

உங்களுக்கும் பிரகாஷ் ராஜுக்குமான நட்பு 20 வருஷத்துக்கு மேல தொடருது...

‘அழகிய தீயே’வுக்கு முன்னால ஒரு படம்பண்ணினேன். அதுல அவர்தான் லீட் கேரக்டர் பண்ணியிருந்தார். அது வெளி வரலை. அதுல அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். தொடர்ந்து பேசும்போது சினிமாவை பற்றிய அவர்பார்வை, புரிதல், என்ன மாதிரி சினிமாவுல நாமஇருக்கணும்னு நினைக்கிறதுல எங்க ரெண்டுபேருக்கும் ஒத்து போச்சு. நட்புக்கு அதுவும் முக்கியம்தானே. அப்படி தொடங்கினோம். அவர்சில கதைகளை சினிமாவுல சொல்லணும்னு ஆசைப்படுவார். அவர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சதும் அதுல நான் படங்கள் இயக்கினேன். ஒரு நண்பராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவர் எனக்கு ரொம்ப ‘கம்பர்டபிளாக’ இருப்பார். நிறைய சுதந்திரம் கொடுப்பார். ஆனா, கதை அவருக்குப் பிடிச்சாதான் தயாரிக்க முன் வருவார்.

‘சட்னி சாம்பார்’ சீரிஸோட அடுத்த பாகம் பண்றீங்களாமே?

கேட்டிருக்காங்க. இன்னும் முடிவு பண்ணலை. அடுத்த கதை பண்ணிட்டிருக்கேன். அது முடிஞ்சதும்தான், சினிமாவா, வெப் தொடரான்னு தெரிய வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்