ஆக.16 முதல் புது படங்கள் தொடங்கக் கூடாது: தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட வேண்டும். சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கெனவே அட்வான்ஸ் பெற்ற படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்துக்குச் செல்ல வேண்டும். நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருப்பதால் வரும் காலங்களில் தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்கும் முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்.

பல படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்பதை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதனால் 16.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். தற்போது நடக்கும் படப்பிடிப்புகளை அக்.30-க்குள் முடிக்க வேண்டும். நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளத்தை முறைப்படுத்தி தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளதால் 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சங்கம் கடும் கண்டனம்: தயாரிப்பாளர் சங்க கூட்டுக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி முரளி ராமசாமி, கதிரேசன் தலைமையில் தயாரிப்பாளர் சங்கக் குழுவுக்கும் நாசர், பூச்சி எஸ்.முருகன் தலைமை யில் நடிகர் சங்கம் நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த கலந்துரை யாடலில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றி தயாரிப்பாளர்கள், நடிகர்களை படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாமென்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒப்பந்த நகல், ஆதாரம் இல்லாமல் புகார்களை விசாரிக்க இயலாது என்ற நடிகர் சங்க கருத்தை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கச் செய்தியில், நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தனுஷ் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

இருதரப்பும் பேசி தீர்வு காணவேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் ஆலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை நடிகர் சங்கம் கண்டிக்கிறது. ஆயிரக்கணக்கான நடிகர்கள், தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, 01.11.2024 முதல் படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. இந்த தன்னிச்சையான தீர்மானத்தை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும். இது தொடர்பாக நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு நடிகர் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE