‘போட்’ படத்துலயும் காமெடி, ஃபேன்டஸி இருக்கு! - இயக்குநர் சிம்புதேவன் நேர்காணல்

By செ. ஏக்நாத்ராஜ்

காமெடி, ஃபேன்டஸி படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அவரது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பலருக்கு ‘ஆல் டைம் பேவரைட்’. சுதந்திரத்துக்கு முந்தைய சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு அவர் இப்போது உருவாக்கி இருக்கும் படம், ‘போட்’. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இதில், கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாம்ஸ் உட்பட பலர் நடித்திருக்கிறார் கள். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றி சிம்பு தேவனிடம் பேசினோம். ‘போட்’ என்ன சொல்லப் போகிறது?

சின்ன வயசுல எனக்கு கிடைச்ச இன்ஸ்பிரேஷன்தான் இந்தப் படம் பண்ண காரணம். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’,அப்புறம் ‘கடல்புறா’ மாதிரி கடல் தொடர்பான நிறைய நாவல்களை வாசிச்சிருக்கேன். அதுதொடர்பான திரைப்படங்களையும் பார்த்திருக்கேன். அந்த இன்ஸ்பிரேஷன்ல கடலைப் பின்னணியா வச்சு ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். சில நண்பர்கள்கிட்ட அதுபற்றி பேசும்போது ஒருத்தர், அவங்க தாத்தாவுக்கு தாத்தா பற்றி ஒரு விஷயம் சொன்னார்.

அவர் மீனவர். 1943-ல சென்னையில ஜப்பான்காரன் குண்டு வீசப் போறான்னு தகவல் வந்திருக்கு. ‘இன்னைக்கு வீசறான், நாளைக்கு வீசறான்’னு இதே மாதிரி டென்ஷனை 5 மாசம் கிளப்பிக்கிட்டே இருந்திருக்காங்க. ஒருகட்டத்துல சென்னையில இருந்த சுமார் 5 லட்சம்பேர், பயத்துல ஊரை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அப்ப, இந்த மாதிரி தகவல் வந்தா, மீனவர்கள் ‘போட்’ எடுத்துக்கிட்டு கடலுக்குள்ள போயிருவாங்களாம். அவர்தாத்தாவுக்கு தாத்தாவும் அப்படிபோயிருக்கார். அந்தச் சம்பவத்தை இன்ஸ்பிரேஷனா வச்சு உருவாக்கின கதைதான் இந்த படம். இதுமனித நேயம் பற்றி பேசற படம்னாலும் சென்னையின் ஆரம்பகால அரசியல் என்ன அப்படிங்கற விஷயம் இதுல இருக்கும்.

இந்தக் கதைக்கு யோகிபாபுவை எப்படி தேர்வு பண்ணுனீங்க?

நாங்க உருவாக்கிய மீனவர் கேரக்டருக்கு யோகிபாபு பொருத்தமா இருப்பார்னு நினைச்சோம். அதோட இது காமெடியும் சீரியஸும் இணைந்த கதை. கதையை கேட்டதும் கண்டிப்பா நடிக்கிறேன்னு சொன்னார். காமெடியான இடத்துல அவர் ஸ்டைல்காமெடி, சீரியஸான இடத்துல சீரியஸ்னு புரிஞ்சுகிட்டு பண்ணினார். அவர் நடிப்பு பேசப்படும்னு நம்பறேன்.

டீஸர், டிரெய்லர் பார்த்தா இது சீரியஸ் கதை மாதிரி தெரியுதே?

இதுலயும் காமெடி, ஃபேன்டஸி விஷயங்கள் இருக்கு. இது சர்வைவல் த்ரில்லர் படம். ஜப்பான்காரன் குண்டு போடப்போறான்னு தெரிஞ்சதுமே உயிர் பிழைக்கறதுக்காக ‘போட்’ல ஒருகுரூப் ஏறுது. அதுல ஒரு சேட், மலையாளி, தெலுங்குக்காரர், ஆங்கிலேய அதிகாரினு வெவ்வேறு ஆட்கள் இருப்பாங்க. அவங்களுக்குள்ள நடக்கிற உரையாடல்கள்ல காமெடியும் இருக்கும்,சீரியஸ் தன்மையும் இருக்கும். ஃபேன்டஸி விஷயமும் ஒரு பகுதி இருக்கு. அது ரொம்ப பெருசா இருக்காது. படத்துல அந்த சர்பிரைஸை பார்ப்பீங்க.

கடலுக்குள்ள ஷூட் பண்றது கஷ்டமாச்சே...

உண்மைதான். இந்தப் படத்தோட 90 சதவிகிதகதை, கடல்லதான் நடக்குது. பீச்சுல கால் நனைக்கிறதுதான் கடல்னு நானெல்லாம் நினைச்சிருக்கேன். ஆனா கடல்ல ஷூட் பண்றது கடல் வாழ்க்கை போல ரொம்ப கஷ்டமான விஷயம். அது அற்புதமான இயற்கையாக இருந்தாலும் காத்து, மழை சார்ந்துதான் கடல் வாழ்க்கை இருக்கும். உண்மையா சொல்லணும்னா, மீனவர்கள் வாழ்க்கை ரொம்ப புனிதமானது.

கதை சென்னை சாந்தோம்ல நடந்தாலும் திருச்செந்தூர் பக்கம் இருக்கிற உவரியில ஷூட் பண்ணினோம். அங்க அலைகள் அதிகம் இருக்காதுங்கறதால அந்தப் பகுதியை தேர்வு பண்ணினோம். ஒரு படகுல ஆர்ட்டிஸ்ட் இருப்பாங்க. இன்னொரு போட்ல இருந்து ஷூட் பண்ணுவோம். கேமராமேன் மாதேஷ் மாணிக்கம் கேமராவை ஃபோகஸ் பண்ணிட்டு இருக்கும்போதே திடீர்னு ஒரு அலை வந்து நடிகர்கள் இருக்கிற படகை மேல தூக்கிரும். ஒரு நாள் சூரிய ஒளி பிரம்மாதமா இருக்கும். சூப்பர்னு நினைச்சா, அன்னைக்கு ஆர்ட்டிஸ்ட் இருக்கமாட்டாங்க. எல்லா நடிகர்களும் இருக்கிற அன்னைக்கு மேகம் முழுசா சூரியனை மறைச்சிரும். 50 நாள் கடல்ல ஷூட் பண்ணினோம். அது ரொம்ப சவாலா இருந்தது.

பீரியட் படம்னா ஆர்ட் டைரக்டருக்கு அதிக வேலை இருக்குமே?

ஆமா. 1943-ம் வருஷம் அக்டோபர் 11-ல கதை நடக்குது. அந்தக் காலகட்டத்துல பயன்படுத்தப்பட்ட படகுகள் இப்ப இல்லை. அப்ப இருந்த படகுகள், கண்ணு மாதிரியான வடிவமைப்புல இருக்கும். 80 களுக்குப் பிறகு துடுப்பு இல்லாதமோட்டார் போட் வந்தாச்சு. அதனால படகுகளோட வடிவமைப்பே மாறிடுச்சு. ஆனா கேரளாவுல பழங்காலத்துல பயன்படுத்துனதை போன்ற வடிவமைப்புல இப்பவும் படகுகள் இருக்கு. அதைப் பார்த்துட்டு வந்து துடுப்புல இயக்கற மாதிரியும் அதுல பத்து பேர் உட்கார்ற மாதிரியும் ஒரு படகை வடிவமைச்சோம். ஆர்ட் டைரக்டர் சந்தானம் தான் அதை வடிவமைச்சார். அவர் இப்ப இல்லை. அந்த காலத்துல பயன்படுத்திய பைகள், ரேடியோன்னு நிறைய விஷயங்களுக்கு மெனக்கெட்டிருக்கோம்.

ஷூட் பண்ணும்போது யோகிபாபு கடலுக்குள்ள விழுந்துட்டார்னு சொன்னாங்களே?

படப்பிடிப்புக்கு உவரி மக்கள் எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணினாங்க. ஏதும் அசம்பாவிதம் நடந்துடக் கூடாதுன்னு நிறைய மீனவர்களை பாதுகாப்புக்கு வச்சிருந்தோம். யோகிபாபு கடலுக்குள்ள குதிக்கிற மாதிரி காட்சி. குதிக்கிற மாதிரி ஆக் ஷன் மட்டும் கொடுங்கன்னு சொல்லிட்டு நாங்க கேமராவோட காத்துக்கிட்டிருந்தா, டொப்புன்னு கடலுக்குள்ள தவறி விழுந்துட்டாரு. எங்களுக்கு என்ன செய்யன்னு அதிர்ச்சி. பாதுகாப்புக்கு நின்ன மீனவர்கள் உள்ள குதிச்சு அவரை தூக்கப் போனா, அவர் பிரம்மாதமா நீச்சலடிச்சுட்டு திரும்பினாரு. அவருக்கு நீச்சல் தெரியுங்கற விஷயமே அப்புறம்தான் எங்களுக்கு தெரிய வந்தது. பிறகு கதைப்படி அஞ்சு ஆறு முறை அவர் குதிக்கிற மாதிரியான காட்சி இருந்தது. அவரை நிஜமாகவே கடல்ல குதிக்க வைச்சு அதை எடுத்தோம்.

நீங்க தயாரிப்பாளர் ஆனதுக்கு காரணம் ஏதுமிருக்கா?

இன்னைக்கு ஓடிடி நிறுவனங்கள் அதிகமான பிறகு அவங்க, நீங்களே தயாரிக்கிறீங்களா?ன்னுதான் கேட்கிறாங்க. எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் பிரேம்குமார் சார்கிட்ட முதல்ல இந்த கதையை சொன்னதும் அவரும் நீங்களே தயாரிங்கன்னு சொன்னார். ‘பர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில அவங்களோட சேர்ந்து இதைப் பண்ணியிருக்கேன்.

கர்நாடக சங்கீதத்துல கானா பாடல் கொடுத்திருக்கீங்க. இதை பாடறதுக்கு சுதா ரகுநாதன் எப்படி சம்மதிச்சாங்க?

ஜிப்ரான் இசை அமைச்சிருக்கார். மொத்தம் 3 பாடல்கள். அதுல ஒரு பாடலை வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சோம். அதுதான் கர்நாடக சங்கீதத்துல கானா. ‘சோக்கா நானும் நிற்கிறேன்’ங்கற அந்தப் பாடலை கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பாடினா நல்லாயிருக்கும்னு அவங்கக்கிட்ட கேட்டோம். முதல்ல தயங்கினாங்க. பிறகு இந்த மாதிரி ‘எக்ஸ்பரிமென்ட்’ எனக்குப் பிடிக்கும்னு சம்மதிச்சாங்க. அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கு. இன்னொரு பாடலை அப்படியே கானாவுல கர்நாடக பாடல் வரிகளை வச்சு உருவாக்கினோம். ‘பதனி பதனி’ங்கற அந்தப் பாடலை தேவா பாடியிருக்கார். கிளைமாக்ஸ்ல ஒரு பாடல் இருக்கு. இது இல்லாம புரமோ பாடலும் இருக்கு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE