ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ‘ஆர்டிஎக்ஸ்’ பட இயக்குநர் மீது தயாரிப்பாளர் வழக்கு

By செய்திப்பிரிவு

எர்ணாகுளம்: ஒப்பந்தத்தை மீறியதாக கூறி ‘ஆர்டிஎக்ஸ்’ மலையாளப் படத்தின் இயக்குநர் மீது, அப்படத்தின் தயாரிப்பாளர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாளப் படம் ‘ஆர்டிஎக்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கினார். ‘வீக்என்ட் பிளாக்பஸ்டர்’ (Weekend Blockbusters) என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் சோஃபியா பால் படத்தை தயாரித்தார். ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சோஃபியா பால் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு: “அறிமுக இயக்குநர் நஹாஸுக்கு ‘ஆர்டிஎக்ஸ்’ படத்துக்காக ஒப்பந்தத்தின்படி ரூ.15 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அவர் எங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு இரண்டாவது படத்தை இயக்கி தர வேண்டும். அதன்படி அவருக்கு ரூ.40 லட்சம் பணமும், ப்ரீ புரொடக்‌ஷனுக்காக ரூ.4.82 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தைப் பெற்றுகொண்ட அவர், ஒப்பந்தத்தின்படி படத்தை இயக்கி கொடுக்காமல் பின்வாங்கியுள்ளார்.

பலமுறை கோரிக்கை விடுத்தும், படத்தை இயக்குவதில் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நஹாஸ் ரூ.1 கோடி இழப்பீடு தொகையை 18 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதி இயக்குநர் நஹாஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், நஹாஸ் தரப்பில் தனக்கு எந்தவித சம்மனும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE