பாலிவுட்டில் ஆரோக்கியமான போட்டி: சம்யுக்தா தகவல்

By செய்திப்பிரிவு

தமிழில் களரி, ஜூலை காற்றில், தனுஷின் வாத்தி படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, ‘மஹாராக்னி’ படம் மூலம் இந்திக்குச் செல்கிறார். சரண்தேஜ் இயக்குகிறார். இதில், பிரபுதேவா, கஜோல் நடிக்கின்றனர். இருவரும் ‘மின்சாரக் கனவு’ படத்தில் நடித்திருந்தனர். 27 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்துள்ளனர். இதில் நஸுருதீன் ஷா, சம்யுக்தா, ஜிஷு சென் குப்தா, சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தியில் அறிமுகமாவது பற்றி சம்யுக்தா கூறும்போது, “மொழித் தடைகள் விலகிக்கொண்டிருந்த நேரத்தில் நான் நடிப்பதற்கு வந்தேன். மலையாள நடிகை என்றாலும் தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்திருக்கிறேன். பார்வையாளர்கள் மொழி கடந்து படங்களைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர்கள் இந்தியிலும் இந்தி நடிகர்கள் மற்ற மொழிகளிலும் நடித்துவருகிறார்கள். ஒவ்வொரு படமும் அனுபவம்தான். பாலிவுட்டுக்கு வரும்போது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அங்கு ஆரோக்கியமான போட்டி அதிகம் இருக்கிறது. இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது.

நான் நடித்துள்ள சில படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு நன்றாக ஓடியிருக்கின்றன. நடிகர்கள் மட்டுமல்லாமல், வட இந்திய, தென்னிந்திய ரசிகர்களும் நல்ல கதைகள் கொண்ட படங்களை ரசிக்கிறார்கள். ‘பாகுபலி’யில் தொடங்கிய இந்த மாற்றம் இப்போதும் தொடர்வதில் மகிழ்ச்சி. ‘மஹாராக்னி’ படத்தில் கஜோலின் தங்கையாக நடிக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE