“வருந்துகிறேன்...” - ஆசிஃப் அலியிடம் விருது பெற மறுத்த இசையமைப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

கொச்சி: “யாரையும் அவமதிக்கவோ, அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்றோ நான் எப்போதும் நினைத்து கிடையாது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆசிஃப் அலி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர்” என இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நான் ஆந்தாலஜியில் ஜெயராஜ் இயக்கிய படத்துக்கு இசையமைத்துள்ளேன். ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வின்போது என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தமளிக்கிறது. ஆசிஃப் தான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது. தவிர, நான் மேடையில் இல்லை. ஒருவேளையில் மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன்.

யாரையும் அவமதிக்கவோ, அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்றோ நான் எப்போதும் நினைத்து கிடையாது. தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆசிஃப் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். நான் தவறு செய்திருக்கும் பட்சத்தில் ஆசிஃப்-பை அழைத்து நேரில் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. உண்மையை புரிந்து கொள்ளாமல் சமூக வலைதளங்களில் என்னை வசைபாடுவது வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நான் யாரையும் அவமதித்தது கிடையாது” என தெரிவித்துள்ளார்.

பின்னணி: மலையாளத்தில் உருவாகியுள்ள ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜியின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று கொச்சியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். மலையாளத்தின் மூத்த இசையமைப்பாளரான இவர் ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு நடந்து வந்து கொடுத்தார். அப்போது அந்த விருதை ரமேஷ், வாங்காமல் அதற்கு பதிலாக இயக்குநர் ஜெயராஜை கொடுக்கச் சொன்னதாக தெரிகிறது.

இதையடுத்து விருதை கொடுக்க வந்த நடிகர் ஆசிஃப் அலி அமைதியுடன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போதுஇது குறித்து ரமேஷ் நாராயண் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE