பெரும்பாலும் வித்தியாசத்திலேயே வாழும் பார்த்திபன் இம்முறை ‘டீன்’ சிறுவர்களை வைத்து அறிவியல் புனைவு (science fiction) கொண்ட சாகசமும், ஹாரரும், சூழலியல் ஆர்வமும் கலந்த பரி’சோதனை’ முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சி பலித்ததா என்பதைப் பார்ப்போம்.
நாங்கள் இன்னும் சிறுவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் டின் ஏஜ் பருவத்தை அடைந்த சிறுவர், சிறுமியர் அடங்கிய 13 பேர் சாகசப் பயணம் ஒன்றுக்கு தயாராகின்றனர். அந்தக் குழுவில் உள்ள பெண்ணின் பாட்டி ஊரில் நிகழும் அமானுஷ்யமான விஷயங்களைப் பார்க்க செல்கின்றனர். பள்ளியை ‘கட்’ அடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் தப்பிச் செல்லும் அவர்கள், வழியில் போராட்டம் ஒன்றினால், காட்டுப் பாதைக்குள் நுழைகின்றனர். அந்தப் பயணத்தில் ஒவ்வொருவராக மாயமாகின்றனர். இதற்கு என்ன காரணம்? அவர்களை எஞ்சியிருந்த மற்றவர்கள் காப்பாற்றினார்களா? இதற்கு நடுவில் பார்த்திபனுக்கு என்ன வேலை? - இதுதான் 'டீன்ஸ்’ படத்தின் திரைக்கதை.
படத்தின் தொடக்கத்தில் விடலைப் பருவ, சிறுவர், சிறுமியர்களின் நீண்ட உரையாடலும், சாகசப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சொல்லும் காரணங்களும் ஒட்டவில்லை. எலைட் தன்மையை பறைசாற்றும் தொடர் ஆங்கில வசனங்களும், அதையொட்டி நீளும் ஆங்கில பாடல்களும், மேலோட்டமான அவர்கள் வாழ்வியலும் பார்வையாளர்களை அந்நியப்படுத்துகிறது.
சிறுவர், சிறுமியர்களின் வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கைகளும் ஓவர் டோஸ். குறிப்பாக, குழந்தைத் தனம் நீங்காத அவர்களுக்குள் காதலையும், சிறிய ரொமான்ஸையும், காதல் பாடலையும் வைத்திருப்பது பெரும் நெருடல். மேலும், அவர்களை கள் குடிப்பவர்களாக காட்சிப்படுத்தியிருப்பது மோசமான சித்தரிப்பு. காட்சிக்கு காட்சி ஒருவர் காணாமல் போவது, அதையறிந்து சுற்றியிருப்பவர்கள் அலறுவது, கத்துவது, அழுவது, மீண்டும் நடப்பது இடையில் காதல் என ரீபீட் காட்சிகளால் தேங்கி நிற்கிறது திரைக்கதை. சீரியஸான காட்சியின்போது வரும் புரபோஸல் போன்றவை செயற்கை எமோனஷனல் திணிப்பு.
» “கெட்டதை அழிக்கிறதுதான் முக்கியம்!” - விஜய் ஆண்டனி பேட்டி
» “நான் பேசிய கருத்துகள்தான் ‘இந்தியன் 2’ படத்தில் உள்ளது” - சீமான் பகிர்வு
பார்த்திபன் கஷ்பட்டு படித்தார் என்பதற்காக கோல்டன் டிஸ்க், எலக்ட்ரோ மெக்னடிக் வேவ், என எல்லாவற்றையும் பாடமாக எடுப்பது அயற்சி. க்ளைமாக்ஸை ஒட்டி நகரும் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நடுவில் யோகிபாபுவை வேறு அழைத்துவந்து சிரிப்புக்காக சீரியஸ் முயற்சி எடுத்துள்ளனர். எந்த முயற்சியுமே பலனளிக்கவில்லை.
போலவே, உடல் பருமன் கொண்ட சிறுவன் எப்போதும் உணவில் கவனம் செலுத்துவது போன்ற ஸ்டீரியோடைப் காட்சிகள் பொறுப்பற்றதன்மை. ‘லெமன் மால போட்டு எமன் மாதிரி வர’, ‘well’ என்ற வார்த்தையை வைத்து செய்யும் ஜாலங்கள் பார்த்திபன் டச் வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் மிகப் பெரிய சிக்கல் ஒரு சிறுவனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் வித்தியாசப்படாமல் ஒரேமாதிரி இருப்பதால் ஒருவர் காணாமல் போவதோ, அவர்களின் அழுகுரலோ, பதற்றமோ எதுவும் நம் காதுகளுக்கு எட்டுவதில்லை.
எந்த கனெக்ஷனும் இல்லாததும், மறுபுறம் சிறுவர்களைத் தேடும் பெற்றோர்களின் போராட்டத்தை கடமைக்கு காட்சிப்படுத்தியிருப்பதும் சொதப்பல். ஆணவப் படுகொலை குறித்தும், சாதிய ஒடுக்குமுறையையும் தொட்டிருக்கிறார் இயக்குநர். கிராஃபிக்ஸ் காட்சிகள் சில இடங்களில் கச்சிதம் கூட்டுகின்றன.
சிறுவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், பல இடங்களில் வயதுக்கு மீறிய ஓவர் ஆக்டிங் துருத்திக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. பார்த்திபன் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கிறார். யோகிபாபு கதாபாத்திரம் வீணடிப்பு.
டி.இமான் இசையில் ‘யேசு’ என தொடங்கும் பாடலைத் தாண்டி மற்ற பாடல்களின் ஈர்ப்பில்லை. பின்னணி இசை காட்சிகளின் மீட்டரிலிருந்து கூடியோ, குறைந்தோ இருப்பதை உணர முடிகிறது. காவேமிக் ஆரியின் வித்தியாசமான கோணங்கள் கவனிக்க வைக்கின்றன. மொத்தத்தில், திரைக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பை ஏற்படுத்தவில்லை இந்த பரி’சோதனை’ முயற்சி.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago