திரை விமர்சனம்: 7/G

By செய்திப்பிரிவு

ரோஷன் - ஸ்மிருதி வெங்கட் தம்பதி 10 வயது மகனுடன் புது வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் 2 ஆவிகளின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிகிறார் ஸ்மிருதி. ஆவிகளுக்கும் அந்த வீட்டுக்கும் என்ன தொடர்பு? அவை வெளியேற, அவற்றுடன் ஸ்மிருதி செய்துகொண்ட டீல் என்ன? அதில் அவருக்கும் ஆவிகளுக்கும் வெற்றி கிடைத்ததா என்பது கதை.

வழக்கமான பழிவாங்கும் பேய் கதையை, பாட்டி கதை சொல்லும் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் ஹாரூன். புதுமனைப் புகுவிழா கொண்டாட்டம், ரோஷனை அடைய விரும்பும் அவரது தோழி சினேகா குப்தா செய்யும் ‘பிளாக் மேஜிக்’, புது வீட்டில் ஸ்மிருதி எதிர்கொள்ளும் ‘ஜம்ப் ஹாரர்’கள் முதல் 30 நிமிடப் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. ஆனால், ரோஷன் பெங்களூரு சென்றுவிட, நாயகனுக்கான வேலையை ஸ்மிருதி, சோனியா அகர்வால், சினேகா குப்தா என பெண்கள் கைவசம் ஆக்கிக் கொள்ளும் காட்சிகளின் முடிச்சுகள் யூகித்துவிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஹாரர் நகைச்சுவை - குடும்ப சென்டிமென்ட் என்கிற கலவையைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பங்கம் இல்லாத வகையில் காட்சிகளை அமைத்திருந்தாலும் ஆவிக்கான ‘பிளாஷ் பேக்’, வில்லனின் சதி ஆகியன ‘லாங் லாங் எகோ’ என நினைக்க வைப்பது மைனஸ்.

சோனியா அகர்வால் - ஸ்மிருதி கூட்டணி நன்றாகவே எடுபட்டிருக்கிறது. இரு கதாபாத்திரங்களுக்குமான இணைவைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர். அதை உணர்ந்து அவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் தோற்றத்துக்கும் அவர் இதுவரை நடித்து வந்துள்ள ஸ்டைலுக்கும் துளிகூடப் பொருந்தவில்லை நகைச்சுவை வில்லன் வேடம். அதை ஈடு செய்வதுபோல், கேட்கும் விதமாகப் பாடல்களையும் நம்பகமான பின்னணி இசையையும் வழங்கியிருக்கிறார். இந்த 7ஜி ஆவிகளைப் பயமின்றிப் பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE