சூர்யா Vs அக்‌ஷய் குமார் - சுதா கொங்கராவின் ‘சூரரைப் போற்று’ பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “சூர்யாவை பொறுத்தவரை அவர் முன்கூட்டியே தயாராகவும், சொன்ன நேரத்தில் ரெடியாக இருப்பார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வரை அடுத்தடுத்து டேக் செல்ல வலியுறுத்துவார். அக்‌ஷய் முதல் ஷாட் தான் பெஸ்ட் ஷாட் என்பார்” என இரு நடிகர்களின் நடிப்பு குறித்து இயக்குநர் சுதா கொங்கரா விளக்கமாக பேசியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘சர்ஃபிரா’ என்ற தலைப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இதையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மொழிகளைப் பொறுத்தவரை தமிழில் வேகமாக படிக்க முடிகிறது. இந்தியைப் பொறுத்தவரை மெதுவாகத்தான் படிக்க முடிகிறது. இரண்டு மொழிகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. சீமா பிஸ்வாஸ், ராதிகா ஆகியோர் இந்தப் படத்தை புதிய படமாக உருவாக்குவதைப் போன்ற உணர்வைக் கொடுத்தனர்.

சூர்யாவை விட அக்‌ஷய் குமார் உற்சாகமான மனிதர். சூர்யாவை பொறுத்தவரை அவர் மிகவும் இறுக்கமான, ஆழமான, அமைதியானவர். அதற்கு தகுந்தாற்போல அவரது நடிப்பு இருக்கும். அதனாலேயே இரண்டு படங்களின் காட்சிகளும் வெவ்வேறான உணர்வை பிரதிபலிக்கும்.

புரபோசல் காட்சியை படமாக்கியபோது, அக்‌ஷய் குமார் ஆர்ப்பாட்டமான, ஆரவாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதே காட்சியில் சூர்யா நடித்தபோது மிகவும் ரிசர்வ்டாக நடித்தார். அதனால் இயல்பாகவே கதாபாத்திரங்கள் வித்தியாசமாகின்றன. எனக்கு அது புதிதாக இருந்தது.

இரண்டு படங்களும் ஒரே நோக்கம் கொண்டவை தான். ஆனால், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் வித்தியாசப்படும் என நினைக்கிறேன். சூர்யாவை பொறுத்தவரை அவர் முன்கூட்டியே தயாராகவும், சொன்ன நேரத்தில் ரெடியாக இருப்பார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வரை அடுத்தடுத்து டேக் செல்ல வலியுறுத்துவார். நிறைய ரிஹர்சல் செய்துபார்ப்பார்.

அதே அக்‌ஷய் குமாரைப் பொறுத்தவரை, முதல் ஷாட் தான் பெஸ்ட் ஷாட் என சொல்லிக்கொண்டேயிருப்பார். நிறைய டேக்குகள் எடுக்கும்போது அவரது நடிப்பும் இன்னும் சிறப்பாக வருவதை நான் படப்பிடிப்பு தளத்தில் உணர்ந்தேன். 5-6 டேக்குகளை எடுப்போம். ஒரு காட்சியை படமாக்கும்போது, அதற்கு முன்பும், பின்பும் உள்ள காட்சிகளின் மனநிலையை உள்வாங்கிக் கொண்டு தனக்கென தனி பாணியை உருவாக்கி நடிப்பார் அக்‌ஷய். அது தவறில்லை” என்றார்.

மேலும், ‘புறநானூறு’ படம் குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும்போது, “புறநானூறு ஒடுக்குமுறைக்கு எதிரான படம். சொல்லப்போனால் என்னுடைய எல்லாப் படங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிராகவே பேசியிருக்கிறேன். ‘இறுதிச் சுற்று’ படத்தை எடுத்துகொண்டால் பெண் குத்துச் சண்டை வீரர் எப்படி தன்னுடைய தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிறார் என்பதை பேசியிருந்தோம்.

இது பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் சிரமமான விஷயம். இந்த சமூகம் பல ஆண்டுகளாக ஆணாதிக்கத்தில் இருந்ததை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அனைத்து வகையிலான ஒடுக்குமுறைகளும், பாகுபாடுகளும் இங்கே இருந்துகொண்டு தான் இருக்கிறது” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE