‘கவுண்டம்பாளையம்’ படம் தள்ளிவைப்பு; திரையிட விடாமல் தடுக்கின்றனர்: நடிகர் ரஞ்சித் புகார்

By செய்திப்பிரிவு

கோவை: இன்று வெளியாகவிருந்த நிலையில் `கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரஞ்சித் கூறியதாவது: நான் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் இன்று (ஜூன் 5) ரிலீஸ் ஆகாது. படம் வெளியாவது தள்ளிவைக்கப்படுகிறது.

இந்தப் பட வெளியீட்டில் உள்ளசிக்கல்களைத் தீர்க்க தமிழக முதல்வர் மற்றும் செய்தித் துறைஅமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் பலர் முனைப்புடன் செயல்படுகின்றனர். திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி, படத்தை திரையிட விடாமல் தடுக்கின்றனர்.

நாடகக் காதல் குறித்தும், பெற்றோரின் வலியையும் படமாக்கி உள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது.ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம்என்று எனக்குத் தெரியும். என் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள்தான். கோடீஸ்வரர்கள் கிடையாது. நான் பிறந்த மண்ணில் எடுத்த திரைப்படம் வெளியாகாதது மிகுந்த வருத்தம், வேதனையை அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிதான், என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும்.

சென்சார் சான்றிதழ் வாங்கியும், படத்தை வெளியிட முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை. தமிழகஅரசின் அனுமதி பெற்று, விரைவில் படத்தை வெளியிடுவேன்.

இவ்வாறு ரஞ்சித் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE