“பாலிவுட்டும், என் உருவத் தோற்றமும்...” - கவனம் ஈர்த்த நவாஸுதின் சித்திக் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: “பாலிவுட் திரையுலகில் அசிங்கமான உருவத் தோற்றம் கொண்ட நடிகன் நான். இவ்வளவு மோசமான உருவத் தோற்றத்துடன் நான் எப்படி திரையுலகத்துக்குள் வந்தேன் என்று யோசித்திருக்கிறேன்” என நடிகர் நவாஸுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு நவாஸுதின் சித்திக் அளித்த பேட்டியில், “என் தோற்றத்தை சிலர் ஏன் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை நான் பார்க்க அசிங்கமாக இருப்பதால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் போல. நானுமே கூட என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது அப்படித்தான் உணர்கிறேன். இவ்வளவு மோசமான உருவத் தோற்றத்துடன் நான் எப்படி திரையுலகத்துக்குள் வந்தேன் என்று யோசித்திருக்கிறேன்.

பாலிவுட் திரையுலகில் உடல் ரீதியாக அசிங்கமான தோற்றம் நடிகன் நான். இவ்வளவு நாட்களாக நான் கேட்டுக் கொண்டிருந்த இந்த வார்த்தைகளை நானுமே நம்ப ஆரம்பித்துவிட்டேன். எனக்கு பல்வேறு வகையான கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குநர்களுக்கு நன்றி. உங்களிடம் சிறிதளவு திறமை இருந்தால் கூட இந்த திரையுலகம் உங்களை அரவணைத்துக் கொள்ளும். சமூகத்தில் நிறைய பாகுபாடுகள் உண்டு. ஆனால், திரையுலகில் அப்படி எதுவும் இல்லை” என்றார்.

அண்மையில் பேட்டியளித்திருந்த இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், பாலிவுட் திரையுலகில் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவித்திருந்தார். அதில் அவர், “இந்த திரையுலகம் யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை, நவாஸுதீன் சித்திக் கருப்பானவர், பங்கஜ் திரிபாதி சாதாரணமானவர், மனோஜ் பாஜ்பாய் ஊர்க்காரர். இப்படித்தான் அவர்கள் மக்களைப் பார்க்கிறார்கள்” என்று விமர்சனம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்க்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE