ரயில் Review: புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை சுமந்த பயணம் எப்படி?

By கலிலுல்லா

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் முத்தையா (குங்குமா ராஜ்). எலக்ட்ரீஷியனான அவர் எந்நேரமும் மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு, வேலைக்குச் செல்லாமல் பொறுப்பற்று சுற்றிக்கொண்டிருக்கிறார். கொடுத்த வேலையில் கவனம் செலுத்தாமல் குடியில் குடிகொண்டிருப்பதால் யாரும் அவருக்கு வேலை கொடுக்க முன்வருவதில்லை.

ஆனால், முத்தையாவை பொறுத்தவரை வடமாநிலத்தவர்கள் தான் அவரது வேலைகளை பறித்துகொள்கிறார்கள் என்ற எண்ணம். இதனால் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் சுனில் (பர்வைஸ் மக்ரூ) மீது எப்போதும் ஒருவித வெறுப்பு பார்வையுடனே இருக்கிறார். சில சம்பவங்களால் அந்த வெறுப்பு இன்னும் மூர்க்கமடைய, சுனிலை கொல்ல திட்டமிடுகிறார். அதையொட்டிய நகர்வுகளே திரைக்கதை.

மிகச் சொற்பமான முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு கிராமத்தின் வாழ்வியலையும், அந்நிலத்தின் மனிதர்களையும் யதார்த்துக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான ‘சமகால’ வெறுப்பை கரையச் செய்யும் அவரது எழுத்தும் நோக்கமும் வரவேற்கத்தக்கது. “இந்த பூமிக்கு நம்ம எல்லாரும் பொழைக்க வந்தவங்க தான்”, “பெருமுதலாளிகள் இங்க வந்து நிலம் வாங்குறாங்க. அவங்கள உங்களால தொட முடியாது. எளிய மக்கள தான் அடிப்பீங்க” என்ற வசனங்கள் அழுத்தம் கூட்டுகின்றன.

குறிப்பாக, அந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக துபாய் சென்று திரும்பும் ஒருவர், “எல்லாருக்கும் வயிறு இருக்கு. பசிக்கும். துபாய்ல நான் புலம்பெயர் தொழிலாளர்தான்” என பேசும் இடம் கவனிக்க வைக்கிறது. குண்டு பல்பை மாட்டும் காட்சியில் இருவேறு மாநிலத்தவர்களின் மனநிலையை பிரதிபலித்திருப்பது சிறப்பு.

மதுவால் சீரழியும் குடும்பம், பொருளாதார சூழல், கிராம மக்கள், வட்டார வழக்கு, வடமாநில தொழிலாளரின் கரிசனம், எதிர்பாராத விபத்து, அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சில எமோஷனல் காட்சிகள் ‘ரெட்’ சிக்னல் இல்லாமல் கடக்கின்றன. உள்ளூர்வாசி vs வடமாநிலத்தவர் என்ற முரணுக்குப் பின், கதை எதை நோக்கி நகர்கிறது என்பதில் தெளிவில்லை. நோக்கமின்றி நகரும் இரண்டாம் பாதியில் வரும் அழுகை, துயரக் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.

வடமாநிலத்தவர்களின் பொருளாதார சூழல், அவர்களின் உணர்வுகள், புலம்பெயரும் அம்மக்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான நிர்பந்தம் ஆகிய எதையும் படம் அழுத்தமாக காட்சிப்படுத்தாமல், ‘நல்லவர்’ என்ற ஒற்றை புள்ளியில் சுருங்கியிருப்பது எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்க்கவில்லை. அதே சமயம், உள்ளூரில் இருப்பவர்கள் குடித்துகொண்டு திரிவதால் அவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பதை காட்சிப்படுத்தியதில் சார்புத் தன்மை இல்லாமல் இல்லை.

வடமாநில மக்களை நல்லவர்களாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பாராட்டத்தக்கது என்றாலும், அவர்களின் ஆழமான வலியையும், மறுபுறம் உள்ளூர் மக்களின் எண்ணங்களையும் ‘பேலன்சிங்’காக அணுக முடியாமல் தடுமாறுகிறது படம். உள்ளூர் மக்களுக்கான ஊதிய பாகுபாடு, வடமாநில தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல்கள் குறித்த எந்தப் பதிவும் இல்லாமல் மேலோட்டமாக நகர்வது சிக்கல்.

மதுபோதையில் திரிவது, வீட்டுக்குள் அமர்ந்து அஞ்சி நடுங்குவது, யாரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசுவது என குங்குமராஜ் அறிமுக படத்தில் நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். குழந்தைகளுடனான அவரது பிணைப்பு காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், கோபப்படும் இடத்தில் உணர்வுகளின் வறட்சி தெரிகிறது. அவரது மனைவியாக வைரமாலா. முதிந்த நடிப்பை கொடுத்து காட்சிகளுக்கு உயிர்கொடுக்கிறார்.

வடமாநிலத்தவர் கதாபாத்திரத்தில் நடித்த பர்வேஸ் மெஹ்ரூ குறைசொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரமேஷ் வைத்யா குறைசொல்ல முடியாத நண்பர் கதாபாத்திரத்தில் புன்முறுவலுக்கு உத்தரவாதம். துணை கதாபாத்திரங்கள் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.

கானல் நீரில் முத்தையா கதாபாத்திரம் சைக்கிள் மிதித்து வரும் காட்சியை அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. நிறைய காட்சிகளை தனது கேமரா ஆங்கிளால் ரசிக்க வைக்கிறார். எஸ்.ஜே.ஜனனி இசையில் ‘ஏல சிவந்தவனே’ மற்றும் இறுதியில் தேவா குரலில் ஒலிக்கும் பாடல் ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் சூரிய உதய காட்சிகளை காட்டியதை நாகூரான் இராமச்சந்திரன் கட் செய்திருக்கலாம்.

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வியலையோ, உள்ளூர் மக்களின் உணர்வுகளையோ அழுத்தமாக காட்சிப்படுத்துவதிலிருந்து தடம் மாறியிருக்கும் இந்த ‘ரயில்’ வேறொரு ட்ராக்கில் பயணித்திருப்பதை படம் முடிந்து வெளியேறும்போது உணர முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE